ரயில் பயணமா?  
பயணம்

ரயில் பயணமா? முதல்ல இதையெல்லாம் தெரிஞ்சுக்கங்க!

ஆர்.வி.பதி

கோடை விடுமுறை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  நம்மில் பலர் சுற்றுலா செல்ல ஆயத்தமாவோம்.   சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும்.  அப்போதுதான் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் மகிழ்ச்சிகரமாக சுற்றுலா சென்று திரும்ப முடியும்.

ரயில் பயணமே பெரும்பாலானோர் தேர்வாக அமையும்.   ரயில் சுற்றுலா திட்டமிடுதல் தொடங்கி சென்று திரும்பும் வரை நாம் பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.  அவற்றைத் தெரிந்து கொண்டு பின்பற்றினால் உங்கள் சுற்றுலா மகிழ்ச்சிகரமாக அமையும்.   வாங்க இப்ப நாம அதைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்.

ரயில் பிரயாணம் என்றால் இரண்டு மாதங்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்து உறுதி செய்த டிக்கெட் அதாவது கன்பார்ம்ட் டிக்கெட் பெற்றுக் கொள்ள வேண்டும்.   வெயிட்டிங் லிஸ்ட், ஆர்ஏசி டிக்கெட் என்றால் அது உறுதியாகுமா என்பது நிச்சயமில்லை.  பயண நாள் வரை மனதில் குழப்பம் நிலவும்.

ரயில் பிரயாணம்...

ஆதார் அட்டை அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையை மறக்காமல் உடன் கொண்டு செல்லுங்கள்.

முடிந்த அளவிற்கு குறைவான லக்கேஜ்களைக் கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள்.  தேவையற்ற எந்த ஒரு பொருளையும் உடன் எடுத்துச் செல்லாதீர்கள்.   ஏனெனில் அதை தூக்கிச் செல்லுவதும் அதை பாதுகாப்பதும் உங்களுக்கு பெரிய வேலையாகப் போய்விடும்.

ரயில்வே ஸ்டேஷனுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு அரைமணி நேரத்திற்கு  முன்னதாகவே சென்று விடுங்கள்.  உங்கள் பிளாட்பாரம் எது என்பதை அறிந்து நீங்கள் ஏற வேண்டிய ரயில் பெட்டி எங்கே நிற்கும் என்பதை அறிந்து அந்த இடத்திற்குச் சென்று அங்கிருக்கும் இருக்கைகளில் அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் பயணம் செய்யவிருக்கும் ரயில், நிலையத்திற்குள் நுழைவதைக் கண்டதும் பரபரப்பாக இயங்காதீர்கள். ரயிலுக்கும் உங்களுக்கும் குறைந்தபட்சம் ஐந்து அடிகள் இடைவெளி இருக்குமாறு பிளாட்பாரத்தில் நிற்க வேண்டும்.  ரயில் நின்ற பின்னர் நிதானமாக ஏறுங்கள்.

நீங்கள் சென்று சேர வேண்டிய ஊருக்கு ரயிலானது அதிகாலை ஐந்து மணிக்கு மேல் சென்று சேரும் ரயிலாகப் பார்த்துத் தேர்வு செய்யவும்.   பல ரயில்கள் அதிகாலை இரண்டு மணி மூன்று மணிக்குச் சென்று சேரும்.   குடும்பத்தோடு செல்லும்போது ரயில் நிலையத்தில் இறங்கி வெளியே வந்து ஓட்டலுக்குச் செல்லுவதில் பல சிரமங்கள் மற்றும் ஆபத்துகள் உள்ளன.

இரவு நேரங்களில் ரயிலில் டாய்லெட்டுக்குச் செல்லும் போது கைப்பேசியை எடுத்துச் செல்லாதீர்கள். தவறுதலாக கைப்பேசி டாய்லெடிற்குள் விழுந்து பலர் கைப்பேசியை இழந்திருக்கிறார்கள்.  உங்களுடன் பயணிக்கும் குடும்பத்தினர் ஒருவரை அழைத்துச் சென்று வெளியில் காத்திருக்கச் சொல்லுங்கள்.  இது பாதுகாப்பாகவும் அமையும்.

ரயில் பிரயாணம்...

முன்பின் தெரியாத சக பயணிகளிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்வதை அவசியம் தவிர்க்க வேண்டும்.   கைப்பேசி எண்ணை தேவையின்றி முன்பின் தெரியாதவர்களிடம் தரவேண்டாம்.  இது பல பிரச்சினைகளை உருவாக்க வழிவகுக்கும்.

உங்கள் டிராவல் பேக் மற்றும் உடமைகளை நீங்கள் அமரும் இருக்கைக்கு எதிரில் உள்ள இருக்கையின் கீழ் வைத்து விடுங்கள்.  உங்கள் உடமைகளை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கண்காணித்துக் கொள்ள இது வசதியாக இருக்கும்.

ரயிலில் கண்ணாடி ஜன்னல் மற்றும் காற்று வரக்கூடிய ஜன்னல் என இரண்டு ஜன்னல்கள் இருக்கும்.  இதில் இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்லும் முன்னர் காற்று வரக்கூடிய ஜன்னல்களை மூடி விடுங்கள்.   இரவில் பெர்த்தில் உறங்கும் போது கால்களை ஜன்னல் பக்கம் வைத்தவாறு படுத்துக் கொள்ளுங்கள்.  தலையை ஜன்னல் பக்கம் வைத்து உறங்கினால் இரவு நேரங்களில் சில ஸ்டேஷன்களில் ரயில் நிற்கும் போது திருடர்கள் ஜன்னல் வழியாக கையை விட்டு நகைகளைத் திருடும் அபாயம் உள்ளது.

ரயில் ஒவ்வொரு நிலையத்திலும் நிற்கும் போது சிலர் இரயிலில் இருந்து இறங்கி பின்னர் ஏறும் வழக்கத்தை வைத்துள்ளார்கள்.  இதை நிச்சயம் செய்யவே கூடாது.

இரவு மற்றும் காலை உணவுகளை முடிந்த மட்டிலும் வீட்டிலிருந்தே செய்து கொண்டு செல்வது சிறந்தது.   ரயில் பிளாட்பாரங்களில் விற்கும் உணவுகள் புதியதுதானா என்பதை சில நிமிடங்களில் உங்களால் சோதித்து வாங்க முடியாது.

அதிகாலை ஐந்து மணிக்கு நீங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வரும் என்றால் நான்கரை மணிக்கு அலாரம் வைத்துப் படுக்க வேண்டும்.   பலர் அதிகாலை சுகமான தூக்கத்தில் இறங்க வேண்டிய ஸ்டேஷனை விட்டுவிட்டு அவதிப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

தற்போது நாம் பயணிக்கும் ரயில் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய Train Running Status என்ற வசதி உள்ளது.  உங்கள் மொபைல் போனில் நீங்கள் பயணிக்கும் ரயில் எண்ணைக் கொடுத்து உங்கள் ரயில் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.  மேலும் சரியான நேரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறதா என்பதையும் அறியும் வசதியும் உள்ளது.

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

SCROLL FOR NEXT