Tourism 
பயணம்

சுற்றுலா போறீங்களா? சும்மா ஜாலிக்கு போனால் போதுமா? நேரத்துக்குப் போக வேண்டாமா?

ஆர்.வி.பதி

எந்த ஒரு செயலிலும் நேர மேலாண்மை (Time Management) என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பானாலோர் நேரத்தை சரிவர கடைபிடித்து வாழ்பவர்களாக இருப்பார்கள். சுற்றுலாக்களில் நேரத்தை சரியாக கடைபிடிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.

நம்மில் பெரும்பாலோர் சுற்றுலா சென்றால் அங்கே ஓட்டலில் அறை எடுத்து காலை எட்டுமணி வரை ஹாயாக தூங்கும் வழக்கம் உடையவர்களாகவே இருப்போம். சுற்றுலாவைப் பொறுத்தவரை இது மிகவும் தவறான வழக்கமாகும்.   

நிறைய பணம் செலவழித்து சுற்றுலா செல்கிறோம். இதை கருத்தில் கொண்டு வெளியூர்களில் எத்தனை இடங்களை அதிகமாக பார்க்க முடியுமோ அத்தனை இடங்களை சுறுசுறுப்பாக பார்த்துவிட வேண்டும். வெளியில் சென்றால் மனதையும் உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். சுற்றுலா முடிந்து நம்முடைய வீட்டிற்குத் திரும்பியதும் வேண்டிய மட்டும் தூங்கிக் கொள்ளலாம். யாரும் கேட்கப் போவதில்லை. மேலும் இரண்டு மூன்று குடும்பங்களாகச் சேர்ந்து போகும் போது ஒரு குடும்பம் அனாவசியமாக தூங்கினால் மற்ற இரண்டு குடும்பத்தினர் தேவையில்லாத மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். இதனால் நட்பு பாதிக்கப்படும்.   

அதிகாலை எழுந்து எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் காலைக்கடன்களை முடித்து ரெடியாகி விடவேண்டும். ஒரே நேரத்தில் எல்லோரும் எழுந்து கொண்டால் எல்லோரும் குறித்த நேரத்தில் புறப்படுவது என்பது சிரமமாக இருக்கும்.

எந்த ஒரு சுற்றுலா இடத்திற்குச் சென்றாலும் அவற்றைப் பார்த்து ரசிக்க அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. அப்போதுதான் நிறைய இடங்களை தெளிவாகப் பார்க்கமுடியும். நிறைய இடங்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காக  வேகவேகமாகவும் பார்த்துவிட்டு வரக்கூடாது. இத்தகைய இடங்களில் நேரத்தை வீணாக்காத நிதானம் தேவை. எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே தேவையின்றி பேசி நேரத்தை வீணாக்காதீர்கள். இவ்வாறு பார்ப்பதன் மூலம் அனைத்து இடங்களும் மனதில் நிரந்தரமாகப் பதியும்.

பேக்கேஜ் டூர்களில் செல்லும் போது கைடு உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் கொடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வந்து விடச் சொல்லுவார்.  அவர் சொன்னபடி நீங்கள் செய்தால் திட்டமிட்டபடி அனைத்து இடங்களையும் பார்த்து மகிழலாம். அவர்களுக்கு உள்ள முன் அனுபவத்தின் காரணமாக அவர்கள் உங்களுக்குக் கொடுக்கும் நேரம் போதுமானதாகவே இருக்கும். மாறாக தேவையில்லாமல் நேரத்தை வீணாக்கினால் அனைவருக்கும் பிரச்சினை ஏற்படும்.

பேக்கேஜ் முறை இல்லாமல் நீங்களே ஏற்பாடுகளைச் செய்து சுற்றுலா செல்லும் போது எந்த எந்த இடங்களை பஸ்ஸில் சென்று பார்க்க வேண்டும் எந்தெந்த இடங்களை காரில் சென்று பார்க்க வேண்டும் எந்தெந்த இடங்களுக்கு ஆட்டோக்களில் சென்று பார்க்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிந்தவர்களுடன் விவாதித்து ஒரு லிஸ்ட்டை போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.   இதனால் உங்கள் பணமும் மிச்சமாகும். நேரமும் மிச்சமாகும்.

இரயில் பயணம் என்றால் குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே இரயில் நிலையத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். விமானப் பயணம் என்றால் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்னால் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். இதனால் நீங்கள் உங்கள் கடைசி நேர டென்ஷனைத் தவிர்க்கலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT