மனநல மருத்துவர் ஷாலினியிடம் கேட்டோம்:
"இன்று ஸ்ட்ரெஸ், டென்ஷன் என்ற வார்த்தைகளைச் சொல்லாதவர்களும் கேட்காதவர்களும் இருக்கமுடியாது. அகராதியின்படி ஸ்ட்ரெஸ் என்றால் (மன) அமுக்கம், அதாவது அழுத்தம் என்று அர்த்தம். கவலை. காயம், விபத்து, நோய் அல்லது சமூக, குடும்ப கஷ்டங்கள் இவை மன அழுத்தத்தை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கும்.
பெண்களுக்குத்தான் ஆண்களைவிட மன அழுத்தம் அதிகம். இது சமீபத்திய ஆய்வு கூறும் உண்மை. அவர்கள் செய்யும் வேலை மற்றும் கணவர், குழந்தைகள், பணவரவு செலவு, சூழ்நிலை மற்றும் குடும்ப எதிர்காலம் என்று அவர்கள் ஏற்றுக்கொள்ளும் பொறுப்புகளால்
மன உளைச்சல் ஆண்களைவிட அதிகம்.
மன அழுத்தத்திற்கு சுற்றுலா நல்லதொரு மருந்தாகும். மாறுப்பட்ட சூழ்நிலை, வேறு மனிதர்கள், புதுப்புது இடங்கள், உணவு வகைகள் போன்றவை நமது எண்ண அலைகளை வேறு திசைக்கு மாற்றும். அப்போது உடலும் மனமும் தானாகவே புத்துணர்ச்சி பெறும். சில தினங்கள் அந்த இடத்திலே தங்கும்போது மன அழுத்தம் என்பது முற்றிலுமே மறைந்துபோய்விடும்.
ஆனால், பயணத்திற்கான சரியான திட்டமிடல் வேண்டும். சில வாரங்களுக்கு முன்பே, எங்கு செல்கிறோம், தங்க வேண்டிய இடம் எது? செலவாகும் தொகை எவ்வளவு, பார்க்க வேண்டி இடங்கள் என திட்டமிடல் வேண்டும்.
மேலும், உணவுப் பழக்கத்தை சீரான வகையில் வைத்துக்கொள்ளுதல், உடற்பயிற்சி, வேண்டிய அளவு உறக்கம் ஆகியவை உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து மன அழுத்தம் ஏற்படாமலும் நோய் வராமலும் தடுக்கும்."