விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது செஞ்சி கோட்டை இது உலகப் புகழ்பெற்றது. இந்த செஞ்சிக்கோட்டையை பற்றிய தகவல்களும் அதன் வரலாறுகளும் நம்மை வியக்க வைப்பதோடு ஆச்சரியத்திலும் ஆழ்த்தும். இந்த செஞ்சிக்கோட்டையை எப்படி உருவாக்கினார்கள் அப்பப்பா... மெய்சிலிர்த்து போவீர்கள் செஞ்சிக் கோட்டையின் சிறப்புகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
செஞ்சிக்கோட்டையின் அகல கோட்டைச்சுவர், 60 அடி அதற்கு வெளியில் 80 அடி அகலத்தில் அகழி, அதற்கு பின்னர் இயற்கை அரணாக விளங்கும் மலை மற்றும் காடுகளும் என அமைந்தருக்கும் செஞ்சிக் கோட்டையானது மிகவும் பாதுகாப்பான கோட்டையாக கருதப்படுகிறது.
ராஜா கோட்டை என்று அழைக்கப்படும் ராஜகிரியானது சுமார் 800 அடி உயரமுள்ள மலையாகும். செங்குத்தான அமைப்புடைய இதன் உச்சிக்குச் செல்ல 1,012 படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும். இதன் உச்சியை நெருங்கும் இடத்தில் இயற்கையாகவே ஒரு மலைப்பிளவு இருக்கிறது. இதன்மீது இப்போது மரப்பாலம் அமைத்திருக்கிறார்கள். முன்னர், போர்க்காலங்களில் இங்கிருந்த தற்காலிகப் பாலத்தை அகற்றிவிட்டால், எதிரிகளால் நெருங்க முடியாது. மேலே, மண்டபம், தானியக் களஞ்சியம் உள்ளிட்டவை இருக்கின்றன.
இதற்கு அருகில் இருக்கிறது ராணிக்கோட்டை என்று அழைக்கப்படும் கிருஷ்ணகிரி. இங்கு செல்வதற்கு செங்குத்தான படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உச்சியில் அழகிய தர்பார் மண்டபம் இருக்கிறது. இங்கும் தானியக் களஞ்சியம், கோவில்கள் போன்றவை இருக்கின்றன.
விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரிக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இன்று ஒரு சிறுநகரமாக காணப்படும் செஞ்சி, ஒரு காலத்தில் ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சாவூர் வரை பரவியிருந்த நெடுநிலத்தின் தலைநகராக இருந்தது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மலைகளுக்கு கீழே இருக்கும் கோட்டையின் ஒரு பகுதியில் எட்டு அடுக்குகள் கொண்ட கோபுரம் காட்சியளிக்கிறது. மேலும் கீழும் செல்ல குறுகிய செங்குத்தான படிகள் இருக்கின்றன. ஒவ்வொரு அடுக்கிலும் நடுவிலும் ஒரு அறை. இதன் உச்சி வரை தண்ணீர் செல்ல சுடுமண் குழாய் பதித்து அசத்தியிருக்கிறார்கள்.
இதற்கு அருகில் வீரர்கள் வசித்த குடியிருப்புகள் தரைத்தளமாகக் காணப்படுகின்றன. இந்த குடியிருப்பிற்கு அருகிலேயே குதிரை லாயம், யானை மண்டபம் போன்றவை இருக்கின்றன. யானைகளைக் குளிப்பாட்ட அருகிலேயே யானைக்குளம் இருக்கிறது. வீரர்கள் பயிற்சி எடுக்க உடற்பயிற்சிக் கூடமும் அருகாமையிலேயே இருகிக்கிறது.
இந்த செஞ்சிக்கோட்டை தர்பார் மண்டபம், படைவீடுகள், யானை மண்டபம், உடற்பயிற்சிக்கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், அந்தப்புரம், கோவில்கள், தானியக் களஞ்சியங்கள், தோரண வாயில்கள், காவல் அரண்கள், பாதாள சிறை, மதில்சுவர் மற்றும் அகழி என ஒரு கோட்டைக்கான சகல அம்சங்களோடும் இருக்கும் சிறப்பு வாய்ந்த கோட்டையாகத் திகழ்கிறது.
இந்த கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கிருக்கும் அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்து அறிந்து கொள்ள வேண்டும். பலர் ராஜா கோட்டையையும் மேலும் சில இடங்களையும் மட்டுமே சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி விடுகின்றனர். வரலாற்று பொக்கிஷமாகத் திகழும் இந்த செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.