பயணத்தில் நடக்கும் அனைத்துமே நமக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கக் கூடாது. எதிர்பாராத சூழலில் நாம் சில பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். அவ்வகையில், பயணங்களில் நாம் எம்மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
மன அழுத்தத்தைப் போக்கும் மாமருந்தாக பலருக்கும் பயணம் உதவி வருகிறது. நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கடிக்க வெளியூருக்குச் சென்று வருவோம். பயணம் நமக்கு பல புதிய அனுபவங்களையும், பதிய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பையும் கொடுக்க வல்லது. இருப்பினும் பயணத்தில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். இப்பிரச்சினைகளைக் கண்டு பயம் கொள்ளாமல் அதனை சமாளிக்கும் திறனையும், முன்னெச்சரிக்கையாக செயல்படும் திறனையும் பெற்றிருத்தல் வேண்டும்.
1. கூட்டத்தில் இருந்து பிரிதல்:
ஒரு குழுவாக நண்பர்களுடனோ அல்லது குடும்பத்துடனோ சுற்றுலா செல்லும் போது, கூட்ட நெரிசலான இடங்களில் யாராவது ஒருவர் தனியாகப் பிரிந்து விடுவது மிகப்பெரிய பிரச்சினையாகும். பெரியவர்களால் கூட்டத்தில் பிரிந்தால் கூட எப்படியாவது இணைந்து விடுவார்கள். அதுவே குழந்தைகள் என்றால் அது ஆபத்தாகி விடும். ஆகையால், குழந்தைகளை கூட்ட நெரிசலில் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
2. பாதுகாப்பு இல்லாத இடங்கள்:
சுற்றுலா செல்லும் இடங்களில் அனைத்து இடங்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் பாதுகாப்பற்ற இடத்திற்குச் சென்று இளைஞர்கள் சந்தித்த பிரச்சினைகள் எக்கச்சக்கம். ஆகையால், இதுபோன்ற பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்லாமல் தவிர்ப்பது தான் மிகவும் நல்லது.
3. தேவையற்ற சண்டைகள்:
சுற்றுலாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் பயணிகள் வருவார்கள். இவர்களில் கெட்டவர்களும் இருக்க வாய்ப்புள்ளது. சிலரின் நடவடிக்கைகளைப் பார்த்தாலே தெரிந்து விடும்; இவர்கள் சண்டைக்கு இழுப்பார்கள் என்று. அத்தகைய நபர்களை நாம் எதிர்கொள்ள வேண்டிய சூழலைத் தவிர்ப்பது தான் நல்லது.
4. பொருள்களைப் பறிகொடுத்தல்:
பயணங்களில் தங்கும் விடுதிகள் அல்லது கூட்ட நெரிசலான இடங்களில் பயணிகள் தங்களது பொருள்களைத் தொலைக்க வாய்ப்புள்ளது. விடுதிகளில் நீங்கள் தங்கியிருக்கும் அறைகளை யாரும் இல்லாத நேரத்தில் சுத்தம் செய்ய அனுமதிக்கக் கூடாது. மேலும், வெளியில் செல்லும் போது பணப்பை, நகைகள் மற்றும் மொபைல் போனை கையோடு கொண்டு செல்லுங்கள். கூட்டமாக இருக்கும் இடங்களில் எப்போதும் கவனமுடன் இருக்க வேண்டும்.
5. மொழிப் பிரச்சினை:
வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் செல்லும் போது கண்டிப்பாக அவர்கள் பேசும் மொழியைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கும். உள்ளூர் மொழி தெரியாத பட்சத்தில் சைகை முறையைப் பயன்படுத்தலாம் அல்லது அங்கு நம் மொழி தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா எனத் தேடலாம். மேலும், பிறமொழிகளை புரிந்து கொள்ள உதவுகின்ற மொபைல் செயலிகளையும் பயன்படுத்தலாம்.
6. பேருந்து, இரயில்களைத் தவற விடுதல்:
பயணத்தின் போது பேருந்து மற்றும் இரயில்களைத் தவற விட்டால், தேவையற்ற பிரச்சினை தான் உண்டாகும். ஆகையால், நேரத்தை முன்பே திட்டமிட்டு காலம் தாழ்த்தாமல் பேருந்து மற்றும் இரயில்களைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.
7. உடல்நலக் குறைவு:
சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென உடல்நலம் குன்றி விட்டால், அதன்பிறகு வெளியில் எங்கும் செல்லாமல் ஓய்வெடுப்பது நல்லது. பயணத்தில் ஆரோக்கிய உணவு முறையைக் கடைபிடித்தால் திடீர் உடல்நலக்குறைவத் தடுக்க முடியும்.
8. பணம் தீர்ந்து விடுவது:
சரியாகத் திட்டமிடாமல் பயணங்களில் செலவு செய்தால் முடிவில் பணமின்றி அவஸ்தையாகி விடும். ஆகையால், நம் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப செலவுகளைத் திட்டமிட்டு, தேவையானவற்றை வாங்குதல் வேண்டும்.