மேற்கு வங்கம் மாநிலத்தின் பிஷ்னுபூர் பகுதியில் உள்ள இந்த பஞ்சரத்னா கோவிலை வரலாற்றுப் பிரியர்கள் மற்றும் கலைப் பிரியர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
பஞ்சரத்னா அல்லது ஷ்யாம் ராய் கோவில் என்றழைக்கப்படும் இக்கோவில் 1643ம் ஆண்டு ரகுநாத் சிங்கா என்ற மன்னரால் கட்டப்பட்டது. பழமைவாய்ந்த பஞ்சரத்னா கோவிலின் வெளிபுறத்தில் கிருஷ்னரின் வாழ்க்கை வரலாறு டெரக்கோட்டா கலையில் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.
இக்கோவில் விஷ்ணு மற்றும் கிருஷ்ணருக்கு அற்பணிக்கப்பட்ட கோவிலாகும். மேற்கு வங்கத்தில் உள்ள பஞ்ச ரத்ன கோவில்களிலேயே இக்கோவில் பழைமைவாய்ந்த கோவிலாகும். மேலும் இன்றும் கம்பீரமாக நிற்கும் கோவிலாகவும் இருந்து வருகிறது. பஞ்சரத்னம் என்றால் ஐந்து ரத்னம் என்று பொருள். அதனாலேயே இங்கு ஐந்து டவர்கள் உள்ளன. இந்த கோவில் முழுக்க முழுக்க செங்கற்களால் கட்டப்பட்டது.
17ம் நூற்றாண்டு காலக்கட்டத்தில் மேற்கு வங்கத்தின் அதிசயமாகவும் அடையாளமாகவும் இந்த கற்கோவில் இருந்துள்ளது. அதேபோல், புராணத்தின் அடையாளமான களிமண் கொண்டுதான், டைல்ஸ், வடிவமைப்புகள் போன்ற மற்ற அனைத்தையும் செய்திருக்கிறார்கள்.
மசூதிகளில் இருக்கும் வளைந்த மேற்கூரை போல் இந்த கோவிலிலும் கட்டப்பட்டிருக்கும். ஆனால், இது இஸ்லாமியர்களின் கட்டடக்கலையை பார்த்து வடிவமைத்தது அல்ல. அந்த காலத்தில், இஸ்லாமியர்கள் தங்கள் கட்டடங்களில் சூர்ய ஒளி உள்ளே வரும் வடிவமைப்பு, வளைந்த மேற்கூரை போன்ற எதுவுமே பயன்படுத்தவில்லையாம்.
மேலும், இந்த பஞ்சரத்னா கோவிலில் சிலைகள், பூ வடிவங்கள் ஆகியவை கண்கவர் விதமாக இருக்கும். கிருஷ்ணரின் லீலைகள் மட்டுமல்லாது, ராமரின் கதைகளும் டெரக்கோட்டா வடிவமைப்புகளில் இருக்கும். அந்த டெரக்கோட்டா டைல்ஸ்களை மேற்கு வங்கத்தின் அருகிலிருந்த உலிவாரா மற்றும் பஞ்ச்முரா கிராம மக்கள் சொல்லித்தந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், காந்தாரா ஸ்டைல் மற்றும் ரசா மண்டலா (கிருஷ்ண நடனங்களை ஓவியமாக்கும் முறை) ஆகியவை கோவிலின் தனித்துவமாகக் கருதப்படுகின்றன.
தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 1996ம் ஆண்டுதான் இந்தக் கோவிலை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முன்னர் வரை பராமரிக்காமல், நிறைய சிலைகளும் பொருட்களும் திருடப்பட்டு இருந்தன. இப்போது பிஷ்னுபூரில் இருக்கும் விஷ்ணு சிலை, ஹோலி பண்டிகையின்போது மட்டும் இந்த கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு வழிபடப்படுமாம்.