ஸ்கியாதோஸ் என்ற குட்டித் தீவு கிரீஸின் வடமேற்கு திசையில் மெடிட்டரேணியன் (mediterranean) கடலுக்கு மேற்பரப்பில் ஏகன் (Aegean sea) கடலுடன் ஒட்டியுள்ளது. இந்தத் தீவு கிரேக்க நாட்டிற்கு உரிமையுள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பு 61 சதுர கிலோமீட்டர்தான். கடல் மட்டத்திலிருந்து 20 மீ உயரமுடையது. இதன் மக்கள்தொகை சுமார் 5,000 இருக்கும். இந்தத் தீவைச் சுற்றி 65 மணற்பாங்கான பீச்சுகள் உள்ளன.
இங்கு நவம்பர் - மார்ச் மாதங்கள் மிகவும் குளிராகவும், ஏப்ரல் - அக்டோபர் மிதமான வெயிலுடனும் காணப்படுகிறது.
அதனால் ஐரோப்பா தேசத்து மக்கள் பலரும் குடும்பத்துடன் வெயில் காலத்தில் இங்கு சூரியக் குளியலுக்காக வருகிறார்கள். இங்குள்ள விமான நிலையம் மிகவும் சிறியது. அதனால் வாரத்திற்கு இருமுறைதான் விமானப் போக்குவரத்து உள்ளது. கப்பலிலும் வரலாம்.
இவ்வூரின் உள்ளூர் மேப்பை கையில் வைத்துக் கொண்டால் தினமும் 3-4 பீச்சுகள் போய் வரலாம். ஒவ்வொரு பீச்சிலும் ரெஸ்டாரண்ட் உண்டு. இங்கு வரும் சுற்றுலா மக்கள் சன் ஸ்கீரின் லோஷனை உடம்பு முழுவதும் தடவிக்கொண்டு சாய்வு நாற்காலியில் புத்தகம் படித்துக்கொண்டோ அல்லது கண்களை மூடிக்கொண்டோ வற்றல்போல் வெயிலில் படுத்திருக் கின்றனர். சிறிது நேரம் கழித்து கடலில் நீந்துவதும், பந்து விளையாடுவதுமாகப் பொழுதைக் கழித்துவிட்டு களைத்துப் போய் மறுபடியும் படுக்கைதான். நடுநடுவே ஃப்ரென்ச் ஃபிரைஸ், சிப்ஸ், டோஸ்ட் பிரெட், காஃபி மற்றும் பெரிய கிளாசில் பியர் என ரசித்து உண்கின்றனர்.
இங்குள்ள பிரபலமான பீச்சின் பெயர் கூக்கு நாரிஸ் (Koukounaries) காரில் போகும் வழியெல்லாம் இயற்கையெழில் கொஞ்சுகிறது. கடலில் சீற்றம் கிடையாது. அமைதியாக மணற்பாங்காக இருக்கிறது. பச்சை நிறமுள்ள குடை போன்ற பைன் மரங்கள் அடர்த்தியாகக் காட்சியளிக்கின்றன. பச்சையும் நீலமுமாக கடல் எல்லை விரிந்து கிடக்கிறது. சிறு சிறு படகிலும் மக்கள் வந்து போகின்றனர். இதைத் தொடர்ந்து நாங்கள் மெகாலி அம்மாஸ், அக்லேடி யாஸ், கானாபிஸ்தா, கோலியோஸ் போன்ற பீச்சுகளுக்கும் போய் சுற்றிப்பார்த்து வரலாம். மந்த்ராக்கி (Mandraki) என்று மற்றுமொரு அருமையான பீச் - இதனை ஹார்பர் ஆஃப் செர்ஸ் என்று சொல்லுகிறார்கள்.
சில குட்டித் தீவுகளுக்கு கப்பல்கள் மூலமாகத்தான் போக முடியும். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கப்பல் 4 குட்டித் தீவுகளுக்குச் சென்று ஒவ்வொரு இடத்திலும் ஒரு மணி நேரம் என்று பயணிக்கின்றன. மலைப்பாங்கான பாறைகளில் உள்ள குகைகள் அழகாய் தெரிகின்றன.
காஸ்ட்ரோ (Kastro) என்ற இடத்தின் மலை உச்சியில் தேவாலயமொன்று இருக்கிறது. கடைசியில் மனிதர்கள் யாரும் வசிக்காத சுக்ரியாஸ் என்ற தீவினைப் பார்த்துவிட்டு புறப்பட்ட இடத்திற்கே வந்து விடலாம்.
இங்குள்ள மக்கள் (Chora) கோரா வகுப்பைச் சேர்ந்தவர்கள். மிகவும் அன்போடு பழகுகின்றார்கள். துறைமுகம் இருக்கும் இடத்தில் கடைகள் நிறைய உள்ளன. இந்தத் தீவின் பசுமையான இயற்கையெழில் நினைவை விட்டு அகலாது.
கே. ஸ்வர்ணலதா, பெங்களூரு
(ம.மலர் மார்ச் 16-31, 2014 இதழிலிருந்து தொகுப்பு)