ராஜஸ்தானின் தலைநகரமாக விளங்கும் ஜெய்ப்பூர், மக்களால் 'Pink City' என்று அழைக்கப்படுகிறது. ஜெய்ப்பூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது கோட்டைகளின் கட்டடக் கலைகள்தான். அதுபோக சாலை உணவுகள், வண்ணமயமான சந்தைகள் போன்றவை ஜெய்ப்பூரில் தனித்துவம் வாய்ந்தவையாகும். நீங்கள் ஜெய்ப்பூருக்கு சென்றால் கட்டாயம் இந்த இடங்களுக்கெல்லாம் சென்று விடுங்கள்.
ஒரு பாறை மலையில் அமைந்துள்ள இந்தக் கோட்டை கிபி 1592ம் ஆண்டில் மகாராஜா மான் சிங்கால் கட்டப்பட்டது. அரச குடும்பத்தின் வசிப்பிடமாக இருந்த இக்கோட்டை, மணல் கற்கள் மற்றும் பளிங்கு கற்களால் கட்டப்பட்டது. இங்கு தினமும் ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் என அனைத்தும் வரலாற்று ரீதியாக நடைபெறுகிறது. மேலும் இக்கோட்டையிலிருந்து சூர்யன் மறையும் காட்சி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
1726ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோட்டையை 'வெற்றிக் கோட்டை' என்றும் அழைப்பார்கள். ஏனெனில் இதுவரை எந்த மன்னனாலும் இந்த கோட்டையை வெல்லமுடியவில்லை என்பது வரலாற்று உண்மை. முட்கள் மற்றும் புதர்கள் நிறைந்த ஆரவல்லி மலைத்தொடரில் இருக்கும் இந்த கோட்டை, முழு நகரத்தின் கண்கவர் காட்சியை உங்களுக்கு வழங்கும்.
'நீர் அரண்மனை' என்றழைக்கப்படும் இக்கோட்டை ஏரியின் மேல் மிதப்பது போன்ற காட்சியை உங்களுக்குத் தரும். ஜல் மஹால் ராஜஸ்தான் மற்றும் முகலாய கட்டடக்கலையைக் கொண்டது. ஐந்து மாடிகள் கொண்ட இந்த அரண்மனையின் நான்கு மாடிகள் நீருக்கு அடியில்தான் வடிவமைக்கப்பட்டது. இந்த அரண்மனைக்கு நீங்கள் படகு சவாரி மூலம் செல்லலாம்.
உலகிலேயே மிகப்பெரிய கல் சூர்யக் கடிகாரம் என்றால் அது ஜந்தர் மந்திர்தான். 1734ம் ஆண்டு மகாராஜா சவாய் ஜெய் சிங் 2 என்பவரால் கட்டப்பட்ட இந்த கடிகாரம் 27 மீட்டர் உயரம் கொண்டது. ஒரு வானியல் ஆய்வுக்கூடமாக விளங்கும் இது யுனஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் உள்ளது.
இந்துக் கோவிலான இந்த கல்தாஜி கோயிலில் சன்னதிகள், புனித குளங்கள், மண்டபங்கள் மற்றும் இயற்கை நீரூற்றுகள் போன்றவை அதிகம் உள்ளன. ஆரவல்லி மலையின் குறுகிய மலைப் பாதையில் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலில் புராண ஓவியங்கள், சிற்பங்கள், சுவரோவியங்கள் ஆகியவற்றை அதிகம் காணலாம். இக்கோவில் சூர்ய கடவுள், அனுமன், பாலாஜி ஆகியோருக்காகக் கட்டப்பட்டது. மேலும் இங்கு குரங்குகள் அதிகம் இருப்பதால் இதற்கு குரங்கு கோவில் என்ற பெயரும் உண்டு.
லக்ஷ்மி நாராயண கோவில் என்றழைக்கப்படும் இக்கோவில் வெள்ளை பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்டது. இது மோதி துங்ரி மலையின் அடிவாரத்தில் உள்ள உயரமான நிலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலின் சுவர்களில் கீதை, சின்னங்கள் மற்றும் சிற்பங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
இது ராஜஸ்தானின் பழமையான அருங்காட்சியங்களுள் ஒன்றாகும். இங்கு ராஜஸ்தானின் மினியேச்சர் ஓவியங்கள், தந்தங்கள், கற்கள், உலோக சிற்பங்கள், இசைக்கருவிகள் மற்றும் பழங்கால ஆயுதங்கள் போன்றவைக் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் இரவில் வண்ண விளக்குகளால் நம்மைப் பிரமிக்க வைக்கும்.