Panchalinga Falls 
பயணம்

பஞ்சலிங்க நீர்வீழ்ச்சிக்கு ஜாலியா ஒரு பயணம் போகலாம் வாங்க!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ஞ்சலிங்க நீர்வீழ்ச்சி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் இந்த அருவியில் குளிப்பதற்காக திருப்பூர், ஈரோடு, கோவை, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள திருமூர்த்தி அணை மற்றும் திருமூர்த்தி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை  காணவரும் சுற்றுலாப் பயணிகள் பஞ்சலிங்க அருவியிலும் குளித்து மகிழ்கிறார்கள். 

மலையடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே கோவிலில் இருப்பது சிறப்பு. கோவில் அருகில் ஓடும் ஆறானது பஞ்சலிங்க நீர்வீழ்ச்சியிலிருந்து வருகிறது. நல்ல வெயில் காலத்திலும் அருவி நீர் ஐஸ் நீர் போல் குளிர்ச்சியாக இருக்கும். இந்த நீர் திருமூர்த்தி அணைக்கு சென்று அடைகிறது. திருமூர்த்தி அணை பார்க்க மிகவும் ரம்யமாக உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடிவாரப் பகுதியில் திருமூர்த்தி மலை அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் மெயின் அட்ராக்ஷன் மலைகளுக்கு நடுவில் ஆர்ப்பரித்துக் கொட்டும் பஞ்சலிங்க அருவி. மூலிகை கலந்து வருவதால் நீர் ஒருவித வாசனையுடன் இருக்கும். இந்த பஞ்சலிங்க நீர்வீழ்ச்சியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் திருமூர்த்தி கோவில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு அருகில் ஸ்ரீ அமணலிங்கேஸ்வரர் கோயிலில் அமாவாசை, பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் காணப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியானது ஐந்து மீட்டர் உயரத்தில் இருந்து விழுகிறது. கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், மனதுக்கு இதமாகவும் இருக்கும் இந்த அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தமும் குறைந்து விடுவதாக இங்கு வரும் மக்கள் கூறுகின்றனர். இந்த நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ நவம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் ஜாலியாக ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம்.

உடுமலைப் பேருந்து நிலையத்திலிருந்து திருமூர்த்தி மலைக்கு நாள் முழுவதும் நிறைய பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரை மணி நேர பயணத்தில் அடிவாரத்தை அடைந்து விடலாம். அங்கு அமணலிங்கேஸ்வரருக்கு அழகான கோவில் ஒன்று உள்ளது. அருவிக்கு செல்ல வளைந்து நெளிந்து இல்லாமல் நேராகவே மலைப்பாதை செல்கிறது. ஏற்ற இறக்கங்கள் நிறைந்த பகுதி ஆதலால் மூச்சு வாங்க சென்றால் வழிநெடுக குரங்குகளின் கூட்டம். சற்று அசந்தாலும் நம் கைப் பொருட்களை பிடுங்கிக் கொண்டு சென்று விடுகின்றன. ஒரு கிலோமீட்டர் மலைப்பாதை பயணத்திற்குப் பிறகு பஞ்சலிங்க அருவியை அடைந்தால் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியும், அருவிக்கு மேலே பாறை முகடுகளுக்குள் பஞ்சலிங்க கோவில் ஒன்றும் உள்ளது. ஆனால் இங்கு பிரதோஷத்தன்று மட்டுமே பக்தர்களை செல்ல அனுமதிக்கிறார்கள்.

குடும்பத்துடன் அருமையான ஒரு குளியல் போட்டுவிட்டு (மேலே எதுவும் சாப்பிடக் கிடைக்காது என்பதால் வீட்டிலிருந்து கொண்டு சென்ற) நொறுக்குத்தீனி மற்றும் புளியஞ்சாதம், சிப்ஸ் பாக்கெட்களை  காலி செய்து விட்டு அடிவாரம் நோக்கி கீழே இறங்கினோம். அணைக்கட்டின் மறு கரையில் "டர்ட்டில் ராக்" என்று ஒரு மலைக்குன்று உள்ளது. பார்ப்பதற்கு ஆமையின் தோற்றத்தில் இருப்பதால் இப்பெயர் கொண்டு அழைக்கிறார்கள். அருகிலேயே வண்ண மீன் காட்சியகமும் உள்ளது. இங்கு அரியவகை மீன் இனங்களையும் கண்டு ரசிக்க முடிகிறது.

தமிழ்நாட்டின் அழகிய மலைகளில் திருமூர்த்தி மலையும் ஒன்றாகும். இது ஒரு பிரபலமான படப்பிடிப்பு இடமாகும். இந்த பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த அருவிக்கு அருகில் திருமூர்த்தி அணை உள்ளது. அணையில் நீச்சல்குளம், படகு சவாரி மற்றும் அழகிய தோட்டமும் உள்ளது. இந்த அணையைச் சுற்றி தென்னந்தோப்புகளும், சூரியகாந்தி தோட்டங்களும், நெல் வயல்களும் சூழ்ந்து மிக அழகாக காணப்படுகின்றது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT