பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்ற தலங்களை, ‘வைணவ திவ்ய தேசம்’ என்பர். அவற்றில் இந்தியாவுக்கு வெளியே அயல் நாட்டில், நேபாளத்தில் இமயமலையில் அமைந்திருக்கிறது முக்திநாத் ஆலயம். திவ்யதேச வரிசையில் இது 70வது திருத்தலமாகும். இந்த திவ்ய தேசத்தைத் திருமங்கை ஆழ்வாரும் பெரியாழ்வாரும் போற்றிப் பாடி மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். இந்த ஆலயம் திருச்சாளக்ராமம் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கே ஓடும் கண்டகி நதியில் கிடைக்கும் ஒருவகை அபூர்வமான கற்களை சாளக்ராமம் என்றே அழைக்கின்றனர். சங்கு ஒன்றில் துளசி தீர்த்தம் எடுத்து சாளக்ராமக் கற்களை வீட்டில் வைத்து பூஜை செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை.
சென்னையில் இருந்து ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்தின் எல்லையோர நகரமான கோரக்பூர் சென்றடைய வேண்டும். அங்கே இருந்து வாடகைக் கார் ஒன்றில் 2 மணி நேரம் பயணம் செய்து இந்திய - நேபாள எல்லையில் இருக்கும் சோனாலி என்ற சிற்றூரை அடையலாம். அடுத்த நாள் காலை அங்கிருந்து நேபாள நாட்டில் இருக்கும் பொக்காரா என்ற ஊருக்கு 10 மணி நேரம் பஸ்ஸில் பிரயாணம் செய்து அடைய வேண்டும். அங்கு இரவு தங்கிவிட்டு, அடுத்த நாள் விமானம் மூலம் ஜொம்சொம் என்ற ஊரை அடைவது பொதுவான திட்டம். ஆனால், மோசமான வானிலை காரணமாக விமான சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டால், தரை வழியே பயணம் செய்தே ஜொம்சொம் அடைந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. பொக்காராவில் இருந்து பெனி என்ற ஊர் வரை ஒரு வாகனத்தில் பயணம் செய்து, பிறகு வாகனம் மாறி நம் ஊர் மினி பஸ் போன்ற ஒரு வேன் மூலம் பயணத்தைத் தொடர வேண்டும்.
அங்கிருந்துதான் திகில் பயணம் ஆரம்பம். 20 நிமிடத்தில் கடக்க வேண்டிய விமானப் பயணத்தை சுமார் 10 மணி நேரம் சாலை வழியே கடக்க நேரிட்டது. பொக்காரோவில் இருந்து பெனி வரை சாலை ஓரளவு பரவாயில்லை. அதன் பிறகு ஆரம்பித்த பயணம் விவரணைகளுக்கு அப்பாற்பட்டது. சாலை என்று சொல்வதை விட, குண்டும் குழியுமான பாதை என்று சொல்லலாம். அதுவும் சரியான சரிவில், முக்கி முனகி வாகனம் ஏறியது. பாதையின் ஒருபுறம் மலை. மற்றொரு புறம் அதல பாதாளம். நூற்றுக்கணக்கான அடிகள் ஆழத்தில் ஆக்ரோஷ சீற்றத்துடன் கண்டகி நதி பேரிரைச்சலோடு பயணம் நெடுக நம்மைப் பயமுறுத்துகிறது.
திரிசூலி என்ற இன்னோர் ஆறும் இடையில் வந்து சேர்ந்துகொள்கிறது. 95 சதவிகிதம் வரை சாலைக்கும் அதை அடுத்துள்ள பாதாளத்துக்கும் இடையே கைப்பிடிச்சுவர்கள் இல்லை. ஆங்காங்கே தொங்கு பாலங்கள் உள்ளன. வாகனம் பல இடங்களில் குறுகலான மரப்பாலத்தின் மேல் ஊர்கிறது. சில சமயம் உயரத்தில் ஏறும்போது சக்கரங்கள் மழைச் சேற்றில் சிக்கிக் கொண்டு சுழல்கின்றன. ஆங்காங்கே பக்கத்தில் இருக்கும் மலைச்சரிவில் இருந்து கற்கள் உருண்டு வந்து சாலையில் விழுகின்றன. மிகவும் சிறு வயது வாகன ஓட்டிகள் பக்கத்தில் உள்ளவர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டே எளிதாக வாகனத்தை விரட்டுகிறார்கள். சில சமயங்களில் வாகனம் சாலையின் விளிம்பை ஒட்டிப் போகும்போது கடவுளின் நினைப்பைத் தவிர வேறு எதுவும் நெஞ்சில் நிழலாடவில்லை.
ஆனால், பயணம் தந்த பயத்தை விட இமயமலையின் அழகு அபூர்வமாக மனதில் பதிந்தது! பனி படர்ந்த தவளகிரி, அன்னபூர்ணா, மச்சபுக்கரெ சிகரங்களைக் காணக் கண் கோடி வேண்டும்! கைக்கெட்டும் தொலைவில் ஆப்பிள்கள் காய்த்துத் தொங்குகின்றன. குங்குமப்பூத் தோட்டங்கள் வழி நெடுகிலும் தென்படுகின்றன. ஆங்காங்கே நெல், மக்காச்சோளம், முட்டைக் கோஸ் போன்றவற்றையும் பயிரிட்டிருக்கிறர்கள்.
ஒருவழியாக ஜொம்சொம் சென்றடைந்தால், அங்கிருந்து 20 நிமிட நடைப் பயணத்தில் முக்திநாத் ஆலயம் செல்ல ஜீப்கள் தயாராக இருக்கின்றன. 2 மணி நேரப் பயணம். ஏறக்குறைய இமய மலையின் சிகரங்களின் ஊடாகவும், கண்டகி ஆற்றைத் தாண்டிக்கொண்டும் சின்னஞ்சிறு மலைக் கிராமங்கள் ஒன்றிரண்டைத் தாண்டிக்கொண்டும் பயணம் தொடர்ந்தது.
முக்திநாத்தை அடைந்து, அங்கிருந்து அரை மணிநேரம் படிகளில் ஏறினால்... ஆஹா! திருமங்கை ஆழ்வாராலும், பெரியாழ்வாரலும் 12 பாசுரங்களால் பாடப்பட்ட முக்திநாதர் ஆலயம் கண் எதிரே கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் முன்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீராடத் திருக்குளங்கள் தொட்டி அமைப்பில் இருக்கின்றன. அது தவிர நூற்றி எட்டுத் தீர்த்தங்கள் தனித் தனிக் குழாய்களிலும் நீர் வருகிறது.
ஆலயம் சிறிதுதான். ஆனாலும் அற்புதமான அழகோடு திகழ்கிறது. சிறிய ஒற்றைப் பிராகாரம் மட்டுமே இருக்கிறது. கருவறையில் முக்தி நாராயணன் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். மேற்கே திருமுக மண்டலம் காட்டி அருள்பாலிக்கிறார். சன்னிதியில் பூதேவி, சந்தோஷிமா, நர நாராயணர், புத்தர், ராமானுஜர் மற்றும் விநாயகர் விக்ரஹங்களும் இருக்கின்றன. கருடாழ்வாரின் திருமேனியும் இருக்கிறது. கோயில் பூசாரிணி நிதானமாக விளக்கம் சொல்கிறார். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் மூலஸ்தானத்தின் அருகிலேயே சென்று நிதானமாக வழிபடலாம் என்பதாகும்.
ஸ்ரீ இராமானுஜரும் முக்திநாதரின் மகிமையைப் போற்றிப் பரவசம் அடைந்திருக்கிறார். ராமானுஜர் மடம் ஒன்றும் இங்கே உள்ளது. கோயிலின் தீர்த்தமாக கண்டகியும் விமானமாக கனக விமானமும் விளங்குகின்றன.
முக்திநாத் செல்பவர்களுக்கு சில டிப்ஸ்:
மழைக் காலத்தைத் தவிர்த்து விடுங்கள். மே மற்றும் செப்டம்பர் மாதங்கள் பயணத்துக்க உகந்தவை. கூடுதலாகப் பயண நாட்களை ஒதுக்குங்கள். பொக்காரவில் இருந்து ஜொம்சொம் செல்ல விமானப் பயணத்தையே தேர்ந்தெடுங்கள். ரிஸ்கும் குறைவு. பயண நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே. செலவும் குறைவு. என்ன ஆச்சரியமாக இருகிறதா? விமான சர்வீஸ் ரத்தானதால் தரை வழிப் பயணத்துக்கு 5 பேருக்குக் கூடுதலாக 20,000 ரூபாய் செலவாகும்.
உங்கள் குழுவில் ஹிந்தி பேசத் தெரிந்தவர் ஒருவர் இருந்தால் மிகவும் நல்லது. டாக்ஸி டிரைவர்கள், கடைக்காரர்கள் போன்ற எவருக்கும் ஆங்கிலம் ஓர் அட்சரம்கூடத் தெரிவதில்லை. நம்ம ஊர் ரூபாய் நோட்டுக்கள் நேபாளத்தில் செல்லாது. நேபாளம் செல்ல இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் தேவை இல்லை. சென்னையில் இருந்து முக்திநாத் மட்டுமே சென்று வர (விமான சர்வீஸ் ரத்தாகாமல் இருந்தால்) குறைந்தது 8 நாட்கள் தேவைப்படும். எதற்கும் கூடுதலாக 3 நாட்களை ஒதுக்குவது நல்லது. கோரக்பூர் வரை III AC ரயில் கட்டணம், விமானக் கட்டணம் உள்பட ஒரு நபருக்கு சுமார் 16,000 ரூபாய் செலவு பிடிக்கும். ஆங்காங்கே நடக்க வேண்டி இருக்கும். குறிப்பாகத் தரைவழிப் பயணம் மிகக் கடினமாக இருக்கும். நல்ல உடல் நலம் இருப்பவர்களுக்கு உகந்த பயணம் இது.