கனடாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் ஒன்று நயாகரா நீர்வீழ்ச்சி. நயாகரா போக விரும்புபவர்கள் வலைதளம் சென்று, பார்க்க நிச்சயித்திருக்கும் இடத்திற்கெல்லாம் முன்பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. இல்லையென்றால் நுழைவுச்சீட்டு வாங்குவதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டும். நுழைவுச் சீட்டில் இது எந்த நாள் வரை செல்லும் என்று குறித்திருக்கிறார்கள். அந்த நாளுக்குள் நீங்கள் மறுபடியும் நயாகரா சென்று, பார்க்காத இடங்களைப் பார்த்து வரலாம். சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டிற்ககாக இலவசப் பேருந்து வசதி உள்ளது.
ஒன்டாரியோ, எரி என்று இரண்டு பெரிய ஏரிகளின் சங்கமம் நயாகரா நதி. மூன்று நீர்வீழ்ச்சிகளை உள்ளடக்கிய நயாகராவின் வயது 12000 வருடங்கள். அமெரிக்கன் நீர்வீழ்ச்சி, ப்ரைடல் வையில் நீர்வீழ்ச்சி இரண்டும் அமெரிக்காவிலும், “ஹார்ஸ்ஷூ” நீர்வீழ்ச்சி கனடாவிலும் உள்ளது. அமெரிக்கா நீர்வீழ்ச்சியின் அகலம் 260 மீட்டர். உயரம் 30 மீட்டர்.
“ஹார்ஸ்ஷூ” அருவியின் அகலம் 670 மீட்டர், உயரம் 57 மீட்டர், அருவியில் கொட்டும் நீர் நிமிடத்திற்கு 168,000 க்யூபிக் மீட்டர். கனடாவில் உள்ள நயாகராவின் சிறப்பு, நீர்வீழ்ச்சியை பூங்காவில் நடக்கும் போது, வண்டிகளில் செல்லும் போது என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் காண முடியும். இதைப் போல அமெரிக்காவின் நயாகரா நீர்வீழ்ச்சியில் காண முடியாது.
சீரிப் பாய்ந்து வரும் வெள்ளம், பெருத்த ஓசையுடன் நதியில் விழுவதை மிகவும் அருகில் சென்று பார்க்கலாம். உடை நனைந்து விடாமல் இருக்க, மழைக் கோட்டு கொடுக்கிறார்கள். இதை அணிந்து, மின் தூக்கியின் உதவியுடன் 45 மீட்டர் கீழே செல்ல வேண்டும். அதன் பின்னர் இரண்டு நிலத்தடி சுரங்கப் பாதை வழியில் சென்றால் அருவியின் அழகை ரசிப்பதற்கு இரண்டு கண்காணிப்புத் தளம் அமைத்திருக்கிறார்கள். குளிர்ந்த நீர்த் திவலைகள் நம் மேல் விழும் போது ஏற்படுகின்ற உணர்ச்சி அலாதியானது.
மேலே வந்தவுடன் மழைக் கோட்டை கழட்டி, குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். அல்லது நினைவுப் பொருளாக வைத்துக் கொள்ளலாம்.
நயாகரா அருவியில் குளிப்பது போன்ற சுகத்தை அனுபவிக்க கப்பல் பயணம் உள்ளது.. இந்தக் கப்பலில் 700 நபர்கள் பயணம் செய்யலாம். அருவியில் உடைகள் நனைந்து விடாமல் இருக்க மழைக் கோட்டு தருகிறார்கள். நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் நதியில் விழும் இடம் வரை கப்பல் சுற்றுலாப் பயணிகளைக் கூட்டிச் செல்கிறது.
மேற் சொன்ன இரண்டு சுற்றுலாத் தளங்களிலும் குடும்பத்துடன் உங்கள் புகைப்படத்தை எடுத்து, புகைப்படத்தின் எண்ணைத் தருகிறார்கள். சுற்றுலா முடிந்தவுடன், விருப்பம் உள்ளவர்கள் வாங்கிக் கொள்ளலாம். வற்புறுத்துவதில்லை.
ஆயிரம் வருடங்களாக நயாகரா நதி, நயாகராவின் செங்குத்தான சரிவை அரித்து ஆழமான பெரிய பள்ளத்தாக்கு ஒன்றை உருவாக்கியுள்ளது. இங்கு ஓடுகின்ற நயாகரா நதி பெருத்த சூழலுடன் ஓடுகிறது. பள்ளத்தாக்கில் ஓடும் இந்த நதியை வெளியிலிருந்து பார்க்க முடியாது. இதற்காகப் பள்ளத்தாக்கின் இரண்டு பக்கங்களிலும் நிலையங்கள் அமைத்துக் கம்பிகளால் இணைத்துள்ளார்கள். இந்த கம்பியில் 35 நபர்கள் நின்று செல்லும் படியாக கேபிள் கார் வசதி உண்டு. கேபிள் காரில் சென்று பள்ளத்தாக்கின் அழகையும், சுழன்று செல்லும் நதியையும் கண்டு ரசிக்கலாம். இந்த நதியின் நடுவில் கனடா, அமெரிக்கா நாட்டின் எல்லை உள்ளது.
ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சியின் அளப்பரிய சக்தியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணி 1905ஆம் ஆண்டு தொடங்கியது. நிகோலா டெஸ்லா வடிவமைத்த இந்த மின் நிலையம் நூறு வருடங்களாகக் கனடாவின் ஒன்டாரியோ மாநிலம், அமெரிக்காவின் பஃவல்லோ நகரம் ஆகியவற்றிற்கு மின்சாரம் அளித்து வந்தது. மின்சார உற்பத்தி 2006ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு, தற்போது பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப் பட்டுள்ளது
அறிவியலில் விருப்பம் உள்ளவர்கள் பார்க்க வேண்டிய இடம்.. நீர்வீழ்ச்சியிலிருந்து அதிக வேகத்துடன் வெளியேறும் தண்ணீர் சக்தியால் பதினொன்று ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. மின்சாரம் உற்பத்தி செய்ய உபயோகப்படுத்திய உபகரணங்கள், செய்முறை பற்றிய குறிப்புகளுடன் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். விளக்குவதற்கு வழிகாட்டிகளும் இருக்கிறார்கள். மின் நிலையம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்ற விளக்கங்களும் உள்ளன.
சுற்றுலா பயணிகளை நீர் வீழ்ச்சியின் வெகு அருகில் கொண்டு செல்லும், இந்த சுரங்கப் பாதை, 2022ஆம் வருடம் ஜூலை மாதம், திறக்கப்பட்டது.
மின்சார உற்பத்தியின் போது வெளிப்படும் உபரி நீர் வெளியேறி நயாகரா ஆற்றில் கலப்பதற்காக தரை மட்டத்திலிருந்து 180 மீட்டர் ஆழத்தில் இந்த சுரங்கப் பாதை வடிவமைத்து இருந்தார்கள். மின்சார உற்பத்தியின் போது இந்த சுரங்கப் பாதையில் 71000 கேலன் தண்ணீர் இருந்ததாகவும், விநாடிக்கு 9 மீட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததாகவும் கூறுகின்றனர். மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டப் பின்னர் இந்த சுரங்கப் பாதையை செப்பனிட்டு, கீழே செல்வதற்கு மின் தூக்கி வசதி செய்து, பொது மக்கள் பார்வைக்கு திறந்து விட்டிருக்கிறார்கள்.
கண்ணாடி கதவுகளுடைய மின் தூக்கி 55மீட்டர் ஆழமுள்ள சுரங்கப் பாதைக்கு கூட்டிச் செல்கிறது. சுரங்கப் பாதையின் அகலம் 6 மீட்டர். உயரம் 8 மீட்டர். நீளம் 670 மீட்டர். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பவர்கள் இதைத் தவிர்க்கும்படி அறிவுறுத்துகிறார்கள்.
சுரங்கப் பாதையின் முடிவில் 20 மீட்டர் பார்க்கும் தளம் உள்ளது. இந்தத் தளத்தை நெருங்க காற்றின் வேகம், அதன் ஓசை அதிகமாகிறது. குளிர்ந்த காற்று உடலைச் சிலிர்க்க வைக்கிறது. பெருத்த ஓசையுடன் அருவியில் நீர் விழுவது அற்புதமான காட்சி. அருவியுடன் சேர்த்து வானவில் பார்க்கும் போது வர்ணிக்க வார்த்தையில்லை.
நீர்வீழ்ச்சி பற்றி குறும்படம், பட்டாம் பூச்சி காப்பகம், பூக்கள் கண்காட்சி, பூங்காக்கள் என்று பார்ப்பதற்கு நிறைய இடங்கள்.