Hampi 
பயணம்

விஜயநகரப் பேரரசின் அற்புதமான கட்டிடக்கலையைப் ரசிக்க ஹம்பிக்குச் செல்வோமா?

ராதா ரமேஷ்

பயணம் என்பது பொதுவாக அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றுதான்! உடலையும் மனதையும் உற்சாகப்படுத்துவதில் பெரும்பங்கு பயணத்திற்கு உண்டு! அதிலும் குறிப்பாக ஒரு வரலாற்று பயணத்தை மேற்கொள்ளும் போது நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளையும், அறிவியல் அற்புதங்களையும் காணும் போது உடலும் மனதும் சிலிர்த்துப் போகிறது. அப்படியான ஒரு இடம் தான் விஜயநகர பேரரசின் சிறப்பான கட்டிடக்கலைகளை விளக்கும் இந்த ஹம்பி நகரம் !

இந்திய வரலாற்றில் விஜயநகர பேரரசுக்கென்று ஒரு தனித்துவமான இடம் உண்டு. அதிலும் குறிப்பாக மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் பல்வேறு கட்டிடக்கலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இத்தகைய அற்புதமான கட்டிடக்கலைகளை கொண்ட ஹம்பி நகரம் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் இருந்து சுமார் 340 km தொலைவில் உள்ளது. கைதேர்ந்த வேலைப்பாடுகளுடன் கூடிய ஹம்பி நகரம் 90% அந்நிய படையெடுப்புகளால் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது நாம் காணும் வகையில் இருப்பது வெறும் 10% தான்.

நுழைவாயில்:

ஹம்பி நகரில் உள்ளே நுழைந்தவுடன் கற்களால் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட இரண்டு பெரிய கதவுகள் உள்ளன. ஒரு கதவு சேதம் அடைந்த நிலையிலும் மற்றொரு கதவு நன்றாகவும் இருக்கிறது. இந்த கதவினை பார்க்கும்போது நம் முன்னோர்களின் கட்டிடக்கலை எவ்வளவு கடினமானதாக இருந்துள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது.

பிரம்மாண்ட மேடை:

வரலாற்று சார்ந்த சினிமாக்களை பார்ப்பது என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. காரணம் அதில் காட்டப்படும் பிரம்மாண்டமும், மன்னர்களின் வாழ்வியல் முறைகளும் தான். அப்படி மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான மேடையை இங்கு காணலாம். இந்த மேடை அந்த காலத்தில் அரச குடும்பம் சுப நிகழ்ச்சிகளை கண்டு களிப்பதற்காகவும், பட்டாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை நடத்துவதற்காகவும் வடிவமைக்கப்பட்டிருந்ததாம். பல்வேறு படிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட மேடைகளைச் சுற்றிலும் போர் காட்சிகள் நிறைந்த பிரம்மாண்டமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கல்பாலம்:

நமக்கு முன் வாழ்ந்த அரசர்களும், முன்னோர்களும் நீர் மேலாண்மையில் மிகவும் சிறப்பாக செயலாற்றி வந்துள்ளனர். இந்த மண்டபத்திற்கு பக்கத்தில் துங்கபத்ரா நதியிலிருந்து தண்ணீரை கொண்டு வந்து குளத்தில் நிரப்புவதற்காக கல்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பல கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த கல்பாலம் இன்றளவும் அன்றைய கட்டிடக்கலையை சிறப்பாக விளக்கும் வகையில் கம்பீரமாக நிற்கிறது.

பாதாள அறை:

அந்நிய படையெடுப்புகள் மற்றும் போர் ஏற்படும்போது மன்னர்கள் மற்றும் அரசிகள் பயன்படுத்துவதற்காக பாதாள அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபங்களுக்கு அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதாள அறைகள் குளிர்ச்சியான கற்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன.

ராஜாக்களின் நீச்சல் குளம்:

அழகான சுற்று மண்டபத்துடன் கூடிய நீச்சல் குளம் எண் கோண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் நிரம்பி வழியும் நீர் வெளியேறுவதற்கு 8 இடங்களில் துளைகள் அமைக்கப்பட்டதோடு, நீச்சல் குளத்தை சுத்தப்படுத்தும் போது அந்த நீரை வெளியேற்ற அடிப்பகுதியிலும் துளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசிகளின் அந்தப்புரம்:

மிகப்பெரிய கோட்டை சுவர்கள், நான்கு புறமும் கண்காணிப்பு கோபுரங்களுடன் கூடிய பிரம்மாண்டமான ராணிகள் வசிக்கும் அந்தப்புரத்தை இங்கு காண முடிகிறது.

தாமரை மாளிகை:

அரிசிகள் தங்களுடைய ஓய்வு நேரத்தை கழிக்கும் வகையில் கீழே மண்டபமும், மேல் தளத்தில் அறைகளுடனும் கூடிய அழகிய கலைநயத்தோடு தாமரை மாளிகை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பட்டத்து யானைகளின் கூடாரம்:

அன்றைய மன்னர்கள் நான்கு படைகளையும் வைத்து சிறப்பாக ஆட்சி நடத்தி வந்தவர்கள். அதில் ஒன்றாக இருக்கும் யானை படையை எடுத்துக்காட்டும் வகையில் 11 யானைகள் நிறுத்தக்கூடிய பட்டத்து யானைகளின் கூடாரம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேல்புறம் அழகிய வேலைபாடுகளுடன் கொண்ட இந்த கூடாரத்தில் வரிசையாக யானைகளை நிறுத்திக்கொள்வதோடு, அந்த அறையிலேயே பாகன்கள் தங்கிக் கொள்ளும் வகையிலும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வரிசையாக அமைக்கப்பட்டுள்ள இந்த அறைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு சென்று வரும் வண்ணம் உட்புறமாக வழிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

அரசிகளின் நீச்சல் குளம்:

சுற்றிலும் பால்கனி போன்ற அமைப்புகளுடன் கூடிய மிகப் பிரம்மாண்டமான நீச்சல் குளம் அரசிகளுக்கென்று தனியாக அமைக்கப்பட்டுள்ளது. துங்கபத்திரா நதியிலிருந்து கல்பாலத்தின் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு இங்கு உள்ள அகழியில் சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் நீர் சுமார் 10 அடி ஆழமுள்ள நீச்சல் குளத்தில் நிரப்பப்படும் வகையில் இந்த நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று நாம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்யும்போது அங்கு உள்ள பல்வேறு படைப்புகளை பார்த்து வியந்து போகிறோம். ஆனால் இது போன்ற வரலாற்று இடங்களை சுற்றிப் பார்க்கும் போது நாம் தான் இன்று இருக்கும் பலருக்கு முன்னோடியாக வாழ்ந்திருக்கிறோம் என்ற பெருமிதம் நமக்கு ஏற்படுகிறது! ஆயக்கலைகள் 64 யையும் கண்டுபிடித்த நம் முன்னோர்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை! என்ற உண்மை இது போன்ற வரலாற்று பயணங்களை மேற்கொள்ளும் போதுதான் பொட்டில அடித்தார் போல் புரிய ஆரம்பிக்கிறது. வாய்ப்புகள் கிடைக்கும் போது நீங்களும் இத்தகைய வரலாற்று பயணங்களைை மேற்கொள்ளுங்கள்! நம் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளை கண்டு மெய்சிலிர்க்கும் அந்த அற்புத பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கட்டும்!

வாழ்க்கை என்பது கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல…

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

SCROLL FOR NEXT