Thirumayam Fort 
தீபம்

கோட்டையின் உள் ஒரு குகைகோயில்!

கலைமதி சிவகுரு

புதுக்கோட்டையிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது திருமயம் மலைக்கோட்டை. குகைகளுக்கு நடுவே பழமையான சிவன் கோயில், பீரங்கி மலை, எண்கோண குளம் மற்றும் அழகிய கோட்டை ஆகியவை அமைந்துள்ளன. 

திருமயம் கோட்டை ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் காலத்தில் 1676ஆம் ஆண்டு 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. கோட்டையின் உச்சியில் இருந்து பார்த்தால் மொத்த ஊரும் தெரியும். எதிரி நாட்டு படையிடம் இருந்து மன்னரையும், அவரது குடும்பத்தையும், காப்பதற்காக ஏழு மதில் சுவர்கள் எழுப்பப்பட்டன என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். 

கோட்டையின் உச்சியில் இருக்கும் மேடையில் ஒரு பீரங்கி உள்ளது. அது தற்போது வரை துரு பிடிக்காமல் கம்பீரமாக நிற்கிறது. இந்த பீரங்கி 20 அடி உயரமுள்ள மேடையில் வைக்கப்பட்டுள்ளது. 

கோட்டை அருகில் உள்ள ஆதிரங்கம் என அழைக்கப் படும் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் எண் கோணகுளம் உள்ளது. தாமரை மலர் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த குளத்திற்கு எட்டு படித்துறைகள் இருப்பதால் இப்பெயர் வந்தது. இந்த தீர்த்த குளத்தில் உள்ள தண்ணீரை தொட்டால், அல்லது சத்திய தீர்த்தம் என வாயால் சொன்னாலே போதும், பாவங்கள் விலகி விடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த விஷ்ணு கோயில் திருமங்கை ஆழ்வாரின் பாடல் பெற்ற தலம்.

கதை சொல்லும் சிற்பங்கள்:

விஷ்ணு குகைக் கோயிலில் அவர் அனந்த சயன மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். அனந்த சயன மூர்த்தி மலையோடு சேர்ந்து பாறையிலேயே வடிவமைக்கபட்டிருக்கிறார். ஆதிசேஷன் என்கிற ஐந்து தலை அரவத்தின் மீது சயனித்திருக்கிறார். அவருக்கு பின்னால் ஒரு கல்லில் ஒரு கதை நேர்த்தியாக வடிக்கப்பட்டிருக்கிறது. 

விஷ்ணுவின் காலடியில் பூதேவி திருவுருவமும், பெருமாளின் திருமார்பில் தஞ்சம் கொண்டுள்ள திருமகளை அவரது இடது கை அணைக்க வலதுகை ஆதிசேஷனை தட்டி கொடுக்கும் பாவனையில் உள்ளது. இவை வெறும் சிற்பங்கள் மட்டுமல்ல. இதில் உயிரோட்டமுள்ள ஒரு கதையை சித்தரித்து இருக்கிறார் சிற்பி. 

தேவியர் அருகில் இருக்க ஏகாந்தமாகப் பள்ளி கொண்டிருக்கிறார் 'சத்திய மூர்த்தி பெருமாள்'.

நல்லிணக்கம் காத்த நாட்டாமை கூட்டம்:

இந்த கோட்டையின் உள்ளே மலைகளுக்கு இடையே உள்ள பாறையில் சிவனுக்காக குடைந்து கட்டப்பட்டுள்ள குகைக் கோயில் ஒன்றும் உள்ளது. 30 அடி உயரத்திற்கு மேல் பாறைக்குள் சதுர வடிவில் சிவலிங்கம் அமைந்துள்ளது. இந்த சிவலிங்கத்தை தரிசிக்க செல்ல இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இத்தலத்தின் இறைவர் 'சத்தியகிரீசுவரர்', இறைவி 'வேணுவனேஸ்வரி'.

வரலாற்று ஆவணமான, சுவாரசியமான ஒரு நாட்டாமை கூட்டம் பொ.ஆ 1224 இல் திருமயம் கோயிலில் நடைபெற்றதற்கான கல்வெட்டை காணமுடிகிறது.

குகை கோயிலின் வாயிலில் உள்ள துவாரபாலகர் சிற்பங்கள், குடுமியான் மலைச் சிற்பங்களைப் போல் எழில் மிகுந்தவை. 

சைவ, வைணவ பக்தர்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கும், அதை தீர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடந்த வரலாற்று சிறப்பு மிக்க நாட்டாமைக் கூட்டமும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கட்டப்பட்ட ஓர் உறுதியான கருங்கல் தடுப்புச் சுவர் இன்றைக்கும் மாறாத வரலாற்று சான்றாய் கம்பீரமாய் காண முடிகிறது. 

அக்கால வேளைகளில் எடுக்கப்பட்ட முடிவின் படி இன்றைக்கும் சிவன், விஷ்ணு கோயில்களில் எந்த கருத்து வேற்றுமையும் பூசல்களும் இன்றி நாளும் பூசைகளும் விழாக்களும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 

இங்கு சிவன் கோயிலை தனியாக சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒருசேர மலையை சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் வரமுடியும்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT