சில்லென்று உடலைத் தழுவும் குளு குளு காற்று, அவ்வப்போது பெய்யும் சாரல் மழை, வீட்டை விட்டு வெளியே வந்தால் கழுவித் துடைத்தாற்போல் முகம் காட்டி சிரிக்கும் செடி கொடி மரங்கள், அப்போதுதான் முளைத்திருக்கும் சிறு சிறு பெயர் தெரியாத தாவரங்கள், எங்கோ தொலைவில் அம்மன் கோயிலில் பாடும், ‘கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா…’ என்று மெலிதாகக் காற்றில் கலந்து வரும் பாடலின் சத்தம், கூடவே கேட்கும் பம்பை உடுக்கை ஒலி - எதற்கு இத்தனை பீடிகைகள் என்றுதானே கேட்கிறீர்கள்? ஆமாம்… இன்று ஆடி மாதம் பிறந்து விட்டது என்பதை சொல்வதற்காகத்தான்.
தமிழர்களின் வாழ்வோடும் வளத்தோடும் பெருந்தொடர்பு கொண்டவை இந்து சமய வழிபாடுகள் என்றால், அது மிகையில்லை. அப்படிப்பட்ட வழிபாடுகளில், ஓரிரு நாட்கள் மட்டுமே அனுசரிக்கப்படும் விசேஷங்கள் அனேகம் உண்டு. ஆனால், ஒரு மாதம் முழுவதும் பெண்களால் பெரிதாகக் கொண்டாடப்படும் விசேஷம் என்றால் அது, ஆடி மாத அம்மன் வழிபாடு மட்டும்தான்.
தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கமாக ஆடி மாதம் விளங்குகிறது. தட்சிணாயன புண்ய காலம் என்பது பூஜை, தவம், பிரார்த்தனை போன்றவற்றுக்கு மிக உகந்ததாகக் கருதப்படுகிறது. பொதுவாக, சூரியனை ஆணின் அம்சம் என்றும், சந்திரனை பெண்ணின் அம்சம் என்றும் ஜோதிடம் குறிப்பிடும். ஆடி மாதத்தில் சூரியன், சந்திரனில் ஐக்கியமாவதாக ஐதீகம். அதாவது, பெண் எனும் பெரும் குளிர்ச்சியில் ஆண் எனும் கடும் வெம்மை அடங்குவதால்தான் இந்த மாதம் குளிர்ச்சியாக விளங்குவதாகக் கூறுகின்றன ஞான நூல்கள்.
‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. இந்த மாதத்தில் மண்ணில் விதைக்கப்படும் எந்த விதையும் முளைத்து செழிக்க ஆரம்பிக்கும். அதேபோல், ஆடி மாதத்தில் தொடங்கப்படும் எந்த ஒரு செயலும் தங்கு தடையின்றி ஓங்கி வளரும் என்பது ஐதீகம். மனிதத் தோற்றத்துக்கு அடிப்படை பெண்மை அல்லவா? அதனால்தான் பெண்களுக்கு மிக உகந்த காலமாக ஆடி மாதம் விளங்குகிறது என்றுகூடச் சொல்லலாம்.
ஆடி மாதத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது பெரும் நற்பலன்களைப் பெற்றுத் தருவதாகத் திகழ்கிறது. சந்தர்ப்ப சூழ்நிலைகளால் புனித நதிகளில் நீராட இயலவில்லையா? கவலையே வேண்டாம். உங்களின் வீட்டுக்கு அருகில் உள்ள நீர்நிலைகளான ஏரி, குளம், ஆறு போன்றவற்றிலோ அல்லது உங்கள் வீட்டிலோ கூட, 'கங்கேச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவிரி ஜலேஸ்மின் சந்நிதம் குரும்' எனும் சுலோகத்தைச் சொல்லி விட்டுக் குளிக்க, புனித நதிகளில் நீராடிய பலனைப் பெறலாம். இதனால் நீங்கள் செய்த முன் ஜன்ம பாபங்கள் அனைத்தும் விலகுவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதிலும் குறிப்பாக, ஆடி மாதத்தில் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பது என்பது மாங்கல்ய பலத்தைக் கூட்டுவதாகும். அதனால்தான், ‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி; அரைச்ச மஞ்சளைப் பூசிக்குளி’ எனும் சொல் வழக்கே வந்தது. பெண்கள் தங்களின் மாங்கல்ய பலம் கூடுவதற்கும் கணவன் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஆடி மாதத்தில் அவ்வை நோன்பு மேற்கொள்ளும் வழக்கமும் தென் மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது.
‘மாரி’ என்றால் மழை என்றும் ஒரு பொருள் உண்டு. மண்ணுலக செழிப்புக்கு மழை எவ்வளவு அவசியமோ, அதேபோல் மாந்தர்தம் வாழ்க்கை உவப்புக்கும் மாரியம்மனின் அருள்மழை அவசியமாகிறது. இவை இரண்டும் எவ்வளவு அதிகமாகப் பொழிகிறதோ அந்த அளவுக்கு அகிலம் சிறக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. அருளைப் பொழியும் அன்னையாம் மாரியம்மனை வழிபட மிக உகந்த காலமாக விளங்குகிறது ஆடி மாதம். மழைக் காலத்தின் தொடக்கமாக விளங்குவதால்தான் ஆடி மாதத்தை அம்மனின் அருள் பொழியும் மாதமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் நமது முன்னோர்கள்.
அன்னை சக்தியின் அம்சமான பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் மாதமாக ஆடிக் காலம் திகழ்கிறது. அம்பிகையின் கடுந்தவ பக்தியில் உளம் கனிந்து காட்சி தந்த அய்யன் ஈசன், ஆடி மாதம் அம்மன் மாதமாகவே விளங்கும்படியும், இம்மாதத்தில் சிவமாகிய தாம், சக்திக்குள் அடங்குவதாக வரம் தந்ததாகப் புராணத் தகவல்கள் உரைக்கின்றன. அதனால்தாம் இம்மாதத்தில் அப்பன் ஈசனின் அருட் திறத்தை விட, அம்பிகையின் கருணைக் கடாட்சம் பன்மடங்குப் பெருகி ஓங்கி, பக்தர்களை வாழ்விப்பதாக ஐதீகம்.
‘ஆடிக்காற்றில் அம்மியும் அசையும்’ என்று கூறுவர். அம்மிக்கல் போன்று இருக்கமான மனம் கொண்டோரையும் அம்பிகை வழிபாடு எனும் அருட்காற்று அசைத்துப் பார்க்கும் என்பதாக இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். மாரிக்காலத்தின் துவக்கமான ஆடிக் காற்று, உலக உயிர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகளையும் தோற்றுவிக்கும் மாதமாக இருப்பதால் அதில் இருந்து தப்புவிக்க பல்வேறு அம்மன் வழிபாடுகளை உருவாக்கி வைத்துச் சென்றுள்ளனர் நமது முன்னோர்கள். கூழ் வார்த்தல், துள்ளு மாவு படைத்தல், பொங்கல் வைத்தல் போன்ற அம்மன் வழிபாடுகள் அனைத்தும் நம் மனதை மகிழ்விப்பதோடு, உடலையும் உறுதிப்படுத்துவதாகத் திகழ்கின்றன. இந்த மாதத்தில் பெண்களின் கூந்தலில் பல்வேறு பூக்களோடு, அம்மனின் அருமருந்தான வேப்பிலை கொழுந்தும் சேர்ந்து மணப்பதைக் காணலாம்.
ஆடி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் அம்பாளை வணங்கிக் கொண்டாட அற்புத நாட்களாகும். வீட்டில் குடும்பப் பெண்களோ அல்லது கன்னிப் பெண்களோ இறந்து விட்டால், அவர்களின் ஆன்மாவை சாந்தப்படுத்த ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் படையல் போட்டு வணங்க, அவர்களின் மனம் குளிர்ந்து நமக்கு நன்மை செய்வார்கள் என்பது ஐதீகம். அதோடு, புடைவை, ரவிக்கை துணி, வளையல், குங்குமம், மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்கள் வைத்துப் படைத்து, அதை ஏழைப் பெண்களுக்கு தானம் தர, அவர்களின் மனம் குளிர்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்கள். இதனால் குடும்பத்தின் தரித்திரம் ஒழியும். தடைப்பட்ட சுப காரியங்கள் தடையின்றி நடக்கும். ருண, ரோக பிரச்னைகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.
ஆடி மாதத் தொடக்கமே ஆன்மிக விசேஷங்களின் ஆரம்பமாக விளங்குகிறது. இனி, ஆடி மாதத்தில் வரக்கூடிய முக்கியமான விசேஷங்களைப் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.
வருடம் முழுவதும் கிருத்திகை தினங்கள் வந்தாலும் ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. இது கந்தவேள் முருகனுக்கு மிக உகந்த தினமாக அனுசரிக்கப்படுகிறது. இன்று உலகெங்கும் வாழும் முருக பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைக்கான நேர்த்திக்கடன்களைச் செலுத்தி குமரக் கடவுளை வழிபடுகின்றனர். அனல் பிழம்பாய் அவதரித்த சிவக் குமாரனை வளர்த்து பேறு பெற்ற ஆறு கார்த்திகைப் பெண்களைப் போற்றி வழிபடும் திருநாளாகவும் இது திகழ்கிறது. இந்த தினத்தில் பெண்கள் பால் குடம் சுமந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தி முருகப்பெருமானை வழிபடுகின்றனர்.
இறை வழிபாட்டுக்குரிய தட்சிணாயன புண்ய காலத்தின் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகப் பெரிய புண்ணிய செயலாகும். ஒவ்வொரு அமாவாசைக்கும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அவசியம் என்றாலும், இந்த ஒரு அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, வருடம் முழுமைக்குமான அமாவாசைகளுக்கு தர்ப்பணம் கொடுத்த பலனைப் பெற்றுத் தருவதாகச் சொல்கிறார்கள் விஷயவாதிகள்.
மானிடப் பிறவியாகப் பிறந்து மாலவனையே மணந்த, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் நாச்சியார் அவதரித்தது ஆடி பூர நட்சத்திர தினமாகும். மண் மகளாம் பூமித்தாயே ஆடிப் பூரத்தில் ஆண்டாளாக அவதரித்ததாகப் புராணங்கள் உரைக்கின்றன. அது மட்டுமா? இந்த தினத்தில்தான் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி அன்னை உமா தேவி உலகம் உய்ய அவதரித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. எனவே, இது அம்பிகைக்கும் உரிய விசேஷ தினமாக விளங்குகிறது. இந்தத் திருவாடிப்பூர நாளில் அம்பிகைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, குங்குமக் காப்பு சாத்தி வழிபடுவது வழக்கம். இது தவிர, இத்தினத்தில் அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து வளைகாப்பு வைபவமும் நடைபெறும். இப்படி அம்மனுக்கு சாத்தப்பட்ட வளையல்களைப் பெற்று அணியும் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நிகழும். அதேபோல், திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு வாய்க்கும். ஆக, சைவ - வைணவ பேதமில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு திருநாளாக திருவாடிப்பூர தினம் விளங்குகிறது.
ஆடி மாத வளர்பிறை பஞ்சமி தினம் நாக பஞ்சமியாகவும் கருட பஞ்சமியாகவும் பக்தர்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் கோயில்களில் நாகப் பிரதிஷ்டை செய்தும், வீட்டுக்கு அருகில் உள்ள பாம்புப் புற்றுக்கு பால் வார்த்தும் வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகி, அதனால் உண்டாகக்கூடிய பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல, பட்சி ராஜனாம் கருடாழ்வாரின் ஜயந்தி தினமாகவும் இந்த நாள் விளங்குகிறது. கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கவும், சகல செளபாக்கியத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்வர்ண கெளரி விரதம் கடைப்பிடிப்பது இந்த மாதத்தில்தான்.
ஆடி மாதம் பதினெட்டாம் நாளை ஆடிப் பெருக்கு விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். ஆடி பெருக்கின்போது நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகக் கொண்ட நமக்கு, தண்ணீர்தானே பெரிய ஆதாரம். ஆகையால் அந்தத் தண்ணீரை போற்றி வழிபடும் விதமாக ஆடிப் பெருக்கு விழா சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. பெருவாரியான விவசாயிகள் இன்றிலிருந்து தங்கள் நிலத்தில் உழவுப் பணிகளைத் தொடங்குவர். இன்றும் காவிரி பாயும் டெல்டா பகுதிகளில் காவிரி அன்னைக்கு சீர் செய்து வழிபடும் ஒரு விழாவாக இது மிகவும் பிரசித்தமாகக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமின்றி, புதுமணப் பெண்கள் இன்று புதுப்புனலில் நீராடி, தங்கள் மாங்கல்ய சரடை மாற்றிக் கொள்வதும் வழக்கத்தில் உள்ளது.
ஆடி மாதத்தில் முக்கியமாக அனுசரிக்க வேண்டிய விரதங்களில் ஒன்று ஆடித் தபசு. சிவனின் அருள் பெரிதா? விஷ்ணுவின் அருள் பெரிதா என அறியத் தவமிருந்த அன்னை பார்வதிக்கு, ஹரியும் சிவனும் ஒன்றே என்பதை உணர்த்த சங்கரநாராயணராக இறைவன் காட்சி தந்த நன்னாள் இது. இத்திருநாளில் சங்கரன்கோவில் திருத்தலத்தில் இந்த வைபவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. இன்று இந்த வைபவத்தைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் அம்பிகையிடம் வைக்கப்படும் பக்திபூர்வமான, நியாயமான அனைத்து வேண்டுதல்களும் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
ஆடி மாத பெளர்ணமி தினத்துக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலி பெண்களால் அனுசரிக்கப்படுவது வரலட்சுமி நோன்பு. இன்று காலை முதல் மாலை வரை விரதமிருந்து, மகாலட்சுமி தாயாரை கலசம் வைத்து வழிபட வேண்டும். இதனால் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். இது தவிர, கணவரின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வறுமை ஒழிந்து வீட்டில் செல்வம் சேரும்.
ஊரெங்கும் விழாக்கோலம், கோயிலெங்கும் கோலாகலம், தெருவெங்கும் மங்கலமாகத் திகழும் ஆடி மாத அம்மன் வழிபாட்டை அனுசரித்து அம்பிகையின் அருள் கடாட்சத்தைப் பூரணமாகப் பெறுவோம்.