‘ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன் எனும் பெயர் பெற்றாய்!
வினைகள் யாவும் தீர்த்திடவே; நலங்கள் யாவும் நல்கிடவே;
நாங்கள் வாழ வரம் கொடுப்பாய் தாயே!’
என்று மனதார வேண்டித் துதிப்பவர்களைக் கைவிடாத மும்பை செம்பூர் செட்டாநகர் மாரியம்மன், அனைவராலும் வணங்கப்படும் அம்மன். 27 நட்சத்திரங்களில் 11வது நட்சத்திரமாகிய பூரத் திருநாளன்று, ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன் கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் அழகாக அலங்கரிக்கப்பட்டு, பலவிதமான வடிவங்களில், வண்ணங்களில் கண்ணாடி வளையல்கள் மாலையாகக் கோர்க்கப்பட்டு தேவிக்கு அணிவிக்கப்படுகின்றன. பூஜைகள், தீபாராதனைகள் நடத்தப்படுகின்றன. அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்கள் மறுநாள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.
அம்மன் நித்யகன்னி என்று அழைக்கப்படுவதால் பிள்ளைப்பேறு கிடையாது என்பது ஐதீகம். அதன் காரணம், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து அழகு பார்க்கும் வளைகாப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. கண்ணாடி வளையல்களை வாங்கி அம்மனுக்கு அளிப்பது புண்ணியமாகும். இந்தக் கோயிலின் சிறப்பு என்னவென்றால், திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்காத பெண்கள் குடும்பத்துடன் இங்கே வந்து, வளையடுக்கிக்கொண்டு அம்மன் எதிரே வளைகாப்பு கொண்டாட, அடுத்த ஒன்றிரண்டு வருடங்களுக்குள் அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறக்கிறது என்பது நிச்சயம். இதேபோல், திருமணமாகாமல் இருப்பவர்கள், தொழிலை விரிவுபடுத்த எண்ணுபவர்கள் சிறப்பு பூஜை செய்ய, வேண்டுதல் பலிக்கிறது. கோயில் சிறிதாக இருந்தாலும், அம்மனின் கீர்த்தி பெரியது. ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன் நடுநாயகமாக அமர்ந்திருக்க, நுழைவாயிலில் ஸ்ரீ கணபதியானும், ஸ்ரீ சங்கிலி பூதத்தாரும் வீற்றிருக்கின்றனர். மேலும், அரச மரமும், வேப்ப மரமும் இணைந்து பெரிதாக இங்கே வளர்ந்துள்ளன. மரத்தடியில் ஸ்ரீ நாகர், ஸ்ரீ சுப்பிரமணியர், சாயி பாபா சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
பல வருடங்களுக்கு முன்பு, சிறு அம்மன் படத்தை இந்த மரத்தருகே வைத்து பக்தர்கள் வணங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம், பக்தர் முத்து என்பவரின் கனவில் மாரியம்மன் வந்து, தனக்குக் கோயில் கட்ட கட்டளையிட, கோயிலும் எழுப்பப்பட்டதெனக் கூறுகின்றனர்.
ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமையன்று கேப்பைக் கூழ் காய்ச்சி, அம்மனுக்கு நிவேதனம் செய்து, பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தவிர, புரட்டாசி மாதம் நவராத்திரி நாட்களில் ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், கார்த்திகை மாதக் கடைசி நாளன்று அரிசிக்கஞ்சி ஊற்றும் விழா, சித்திரை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை சமயம், கொடை விழா, தீக்குழி விழா போன்றவை விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாத அமாவாசை தினம் திருப்புகழ் அன்பர்கள் வந்து, ‘அபிராமி அந்தாதி பதிகம்’ பாடி வருகின்றனர். ஒவ்வொரு மாத பௌர்ணமியன்று திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. ஒவ்வொரு வார செவ்வாய்க்கிழமையன்று ராகு கால பூஜையும், வெள்ளிக்கிழமையன்று லலிதா ஸகஸ்ரநாமம் படித்து அர்ச்சனையும் விடாமல் நடந்து வருகின்றன. விஜயதசமி தினம் ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில், பேனா போன்றவை இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தப்படுகிறது. மனதில் பக்தியோடு வேண்டும் பக்தர்கள் நினைத்த காரியங்களை நடத்தித்தரும் ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன், சக்தி வாய்ந்தவள் என்பது நிதர்சனம்.