சிதம்பர ரகசியம் என்று ஒன்று இருப்பது எல்லோருக்குத் தெரியும். அதுபோல, ஆலங்காட்டு ரகசியம் என்றும் ஒன்று இருக்கிறது. நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு. இங்கு சிவபெருமான் வடாரண்யேஸ்வரராகக் கோயில் கொண்டருளுகிறார். இது, ‘ரத்தின சபை’ என்று போற்றப்படுகிறது.
சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை, சிதம்பர ரகசியம் என்பர். அதுபோல, ஆலங்காடு எனப்படும் இந்த திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க, காரைக்கால் அம்மையார் கயிலாயத்துக்கு தலைகீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். இப்படி வருவதைக் கண்ட பார்வதி தேவி, சிவபெருமானிடம் “இவர் யார்?” எனக் கேட்டாள். அதற்கு பதிலளித்த சிவபெருமான், “இவர் என் அம்மை” என்றார்.
வெகு அருகே வந்துவிட்ட காரைக்காலம்மையாரிடம், “என்ன வரம் வேண்டும்?” என சிவபெருமான் கேட்டபோது காரைக்காலம்மை, “எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும்” என்றார். அம்மை கேட்ட வரத்தை, “அப்படியே ஆகட்டும்” என்று அருளினார் சிவபெருமான்.
அந்த சமயத்தில், திருவாலங்காடு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், “காரைக்கால் அம்மையார் இங்குள்ள எம் கோயிலில் தங்கப்போகிறார். அதனால் எனக்கு பின்புறத்தில், அவருக்காக ஒரு சன்னிதியை நீ எழுப்ப வேண்டும்”’ கூறி மறைந்தார்.
அதன்படியே மன்னனும், நடராஜருக்கு பின்புறம் ஒரு சன்னிதியை எழுப்பிக் கட்டிவித்தான். சிவபெருமான் அருள் கிடைத்த காரைக்காலம்மையாரும் அதனுள் ஐக்கியமானார். இன்றுவரை இங்கு சிவனின் ஆனந்தத் தாண்டவத்தை காரைக்கால் அம்மையார் தரிசித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். இதுவே, ஆலங்காட்டு ரகசியம்.
இது சிவன் கோயிலாக இருந்தாலும், இங்கு பெருமாள் கோயில்களைப் போலவே பக்தர்களுக்குத் தீர்த்தப் பிரசாதமே வழங்கப்படுகிறது. நடராஜர் தாண்டவம் ஆடியபோது, அவரது உக்கிரம் தாங்காத தேவர்கள் மயக்கத்துக்கு ஆளாயினர். சுவாமி அவர்களைத் தன் தலையிலிருந்த கங்கை நீரைத் தெளித்து எழுப்பினார். இதனடிப்படையிலேயே இங்கு பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படுகிறது.
நடராஜரின் அருகிலுள்ள சிவகாமியை, ‘ஆச்சரிய அம்பிகை’ என்கின்றனர். சிவனுக்கு ஈடு கொடுத்து, காளி நடனம் ஆடியதைக் கண்ட அம்பிகை ஆச்சரியப்பட்டாள். இதனால் அவளுக்கு, ‘சமிசீனாம்பிகை’ என்று பெயர் ஏற்பட்டது. இதற்கு ஆச்சரியம் அடைந்தவள் என்று பொருள். இடது கை நடுவிரலை மடக்கி, கன்னத்தில் கை வைக்கப்போகும் கோலத்தில் முகத்தில் வியப்பை வெளிப்படுத்தும் இந்த அம்பிகையின் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். நடராஜருடன் போட்டியிட்ட காளி தேவிக்கு இங்கு தனிக்கோயில் உள்ளது. இவள் காலை தூக்க முயன்ற நிலையில் நாட்டிய காளியாக சாந்தமாக வீற்றிருக்கிறாள்.