தீபம்

இளவேனிற் கால ஆனி மாத விசேஷங்கள்!

ரேவதி பாலு

த்திராயண புண்ணிய காலத்தின் கடைசி மாதமே ஆனி மாதம். இது தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக மலர்கிறது. இந்த மாதத்தில் மிதுன ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கிறார். இது தேவர்களின் மாலைப்பொழுது என்று கூறப்படுகிறது. மேலும், ஆனி மாதம் இளவேனிற் காலம். கடுங்கோடையின் தாக்கம் நீங்கி, இதமான காற்று வீசி நம்மைக் குளிர்விக்கும்.

ஆடல் வல்லான் நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும். ஆனி மாத உத்திர நட்சத்திரத்தன்று ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்துக்கு முன் அதிகாலையில் நடைபெறும் அபிஷேகமே ஆனித் திருமஞ்சனம் எனப்படுகிறது. ஆனித் திருமஞ்சனத்தின்போது ஸ்ரீ நடராஜப் பெருமானை தரிசித்தால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம். அனைத்துச் சிவாலயங்களிலும் மாலை நேரத்தில் ஆனி மாத திருமஞ்சனம் நடைபெறும். வைணவத் தலங்களில் தலைசிறந்த ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஆனி மாத கேட்டை நட்சத்திரதன்று திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும்.

குரு பூர்ணிமா என்று அழைக்கப்படும் வியாச பூர்ணிமா வருவதும் இந்த மாதத்தில் தான். இந்த நாளில் அனைவரும் தங்கள் குருவை வணங்கி ஆசி பெற திருவருளும் குருவருளும் சேர்ந்து கிடைக்கும். பொதுவாக, நிறைய கோயில்களின் கும்பாபிஷேகம் ஆனி மாதத்தில்தான் நடைபெறும்.

திருப்புகழை நமக்களித்த மகான் அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரம், பௌர்ணமி திதியில்தான் பிறந்தார். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகரின் குருபூஜை ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் வருகிறது. 'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்று சிறப்பித்துச் சொல்லப்படும் அருமையான திருவாசகம் அருளிய மகான் மாணிக்கவாசகர் 32 ஆண்டுகளே இந்த பூமியில் வாழ்ந்தார். தனது வாழ்நாளில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய மாணிக்கவாசகர் சிதம்பரம் தலத்தில் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் ஈசனோடு இரண்டறக் கலந்தார்.  இதையொட்டி சிதம்பரத்தில் பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

ஏகாதசிகள் அனைத்துமே விசேஷமானவை என்றாலும், ஆனி மாத தேய்பிறை ஏகாதசி, 'யோகினி ஏகாதசி' என்ற பெயருடன் விஷ்ணு வழிபாட்டுக்கு சிறந்து விளங்குகிறது. அன்றுதான் அழகாபுரி மன்னனான குபேரன் ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வழிபட்டு தனது நோயைப் போக்கிக்கொண்டான் என்று கூறப்படுகிறது.

பொதுவாகவே, நிறைய கோயில்களில் ஆனி மாத பௌர்ணமியன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதைக் காணலாம். திருச்சி உறையூரில் மேற்கூரை இல்லாமல் (விமானம்) திறந்தவெளியில் கருவறையில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீ வெக்காளி அம்மனுக்கு அன்று மாம்பழங்களால் அபிஷேகம் நடைபெறும். கூடை கூடையாக மாம்பழங்களை அம்மன் மீது அபிஷேகம் செய்வார்கள். பிறகு அந்த மாம்பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுத்து விடுவார்கள்.

இதேபோல திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ தாயுமானவர் கோயிலிலும் ஸ்ரீ தாயுமானவர் சுவாமிக்கு வாழைப்பழ தார்கள் சமர்ப்பித்து தங்கள் குடும்பம் வாழையடி வாழையாக சிறப்புடன் வாழ வேண்டும் என்று பக்தர்கள் பிரார்த்தனை செய்வார்கள். பூஜை நிறைவு பெற்றதும் அர்ச்சகர், அந்த வாழைப் பழங்களை பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிப்பார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலிலும் ஆனி மாதம் பௌர்ணமியையொட்டி சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வரும்போது காரைக்கால் அம்மையார் திருவுருவச் சிலையையும் தரிசிக்கலாம். அப்போது பக்தர்கள் வீட்டின் மீது ஏறி, நின்று கொண்டு மாம்பழங்களை கூடை கூடையாக காரைக்கால் அம்மையார் மேல் அபிஷேகம் செய்வார்களாம். தமிழகத்தில் சில கோயில்களில் ஆனி பௌர்ணமியையொட்டி தெப்பத்திருவிழாவும் நடைபெறும். முக்கியமாக, மன்னார்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ள தீர்த்தக் குளத்தில் தெப்பத் திருவிழா அன்று விசேஷமாக நடைபெறும்.

நுண்கலை போற்றிய நல்லவர்!

“அற்ப மானிடனே, செத்துப் போ” -  பயனரை மோசமாகத் திட்டியதா Gemini AI?

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

SCROLL FOR NEXT