sita devi Anuman 
தீபம்

ஆன்மிகக் கதை: துன்பத்துக்குக் காரணமாகும் முன்வினைப் பயன்!

ஆர்.ஜெயலட்சுமி

லங்கையின் அசோகவனத்தில் சீதை இருந்தபோது அரக்கியர்கள் சீதோ தேவியை துன்பப்படுத்தினர். அதற்காக அவள் கோபம் கொள்ளவில்லை . பொறுமையுடன் அனைத்தையும் சகித்துக் கொண்டாள். துன்பம் என்பது வினை பயனின் காரணமாகவே ஏற்படுகின்றன என்ற உறுதியுடன் இருந்தாள். ராவண வதம் முடிந்ததும் அசோகவனத்தில் இருந்த சீதையிடம் நடந்ததை தெரிவிக்க ஓடி வந்தார் அனுமன்.

“தாயே, ராமபிரான் போரில் வெற்றிவாகை சூடிவிட்டார். ராவணன் அழிந்தான்” என ஆரவாரம் செய்தார். அதைக் கேட்டு மகிழ்ந்து, “அனுமனே, முன்பொரு நாள் நான் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தபோது ஆறுதல் கூறி காப்பாற்றினாய். சிரஞ்சீவியாக வாழும் பாக்கியத்தை ஏற்கெனவே உனக்கு வரமாக அளித்தேன். முன்பை விடவும் அதிகம் மகிழ்ச்சியை தரும் செய்தியை இப்போது சொல்லி இருக்கிறாய். அதற்காக என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன்” என்றாள்.

“தாயே, வரம் எதுவும் வேண்டாம். நான் விரும்புவது ஒன்றுதான். பத்து மாதங்களாக உங்களை துன்பத்திற்கு ஆளாக்கிய இந்த அரக்கியரை நான் தீயில் இட்டு கொளுத்த வேண்டும். அதற்கு அனுமதி கொடுங்கள்” எனக் கேட்டார்.

ஆனால், அந்தக் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. “அனுமனே, அரக்கியர் என்னை துன்புறுத்தினாலும், அவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படித் துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம் முன்பு செய்த தீய செயல்களின் விளைவு. பொன் மானாக வந்த மாயமான் மீது ஆசைப்பட்டு அதை பிடித்து வர என் கணவரை அனுப்பினேன்.

நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பவில்லை. ‘லக்ஷ்மணா… லக்ஷ்மணா’ என்று அபயக் குரல் எழுப்பினார். பதறிப்போன நான், பர்ணசாலைக்குக் காவலுக்கு நின்றிருந்த லஷ்மணனை போய் பார்க்கச் சொன்னேன். ராமருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு இருக்காது என லஷ்மணன் மறுத்துக் கூறியும் நான் ஏற்கவில்லை. கடுஞ்சொற்களை வீசினேன். இரவும் பகலுமாக எங்களை கண்ணிமை போல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதே அசோகவனத்தில் நான் அனுபவித்தத் துன்பங்களுக்குக் காரணம்.

எனவே, அரக்கியரை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடு. அரக்கியர் என்றாலும் அவர்களும் பெண்களே அவர்களுக்குத் தீங்கிழைத்து பாவத்தைத் தேடிக் கொள்ளாதே” என நல்வழி காட்டினாள். உண்மையை உணர்ந்த அனுமனும் மன அமைதி அடைந்தான்.

“நமக்கு ஒருவர் துன்பம் செய்தால் பழிவாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறு. துன்பம் ஏற்படுவதற்குக் காரணம் நாம் செய்த முன்வினை பாவமே. எனவே, துன்பத்தை பொறுமையுடன் ஏற்கப் பழக வேண்டும்” என்றாள் சீதை.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT