சுந்தரேஸ்வரர் ஆலயம் 
தீபம்

அனுபவச் சுவடுகள் - 1 சுந்தரேஸ்வரரை பூஜித்த ஐந்து தலை நாகம்!

பி.சுவாமிநாதன்

னிதர்கள் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள்; இறக்கிறார்கள்.

பிறக்கின்ற ஒவ்வொருவரும் வசதியான குடும்பத்தில் பிறந்து விடுவதில்லை.

வாழ்கின்ற எல்லோரும் தங்கத் தட்டில் சாப்பிட்டு விடுவதில்லை.

இறக்கின்ற எல்லோருடைய துயரச் செய்தியும் பத்திரிகைகளில் வெளியாவதில்லை.

ஒவ்வொருவருடைய வாழ்வும் எப்படி அமைய வேண்டும் என்பதை அவரவர் கர்ம வினைகளைக் கொண்டு 'ப்ரோகிராம்' செய்கிறான் இறைவன்.

அப்படித்தான் வாழ்க்கையானது அதன் இயல்பில் ஓடுகிறது.

வாழ்க்கையின் ஓட்டத்துக்கு ஏற்ப நாமும் ஓடுகிறோம்.

இந்த ஓட்டத்திலே சுகம், சோகம் எல்லாமும் இருக்கும். அனைத்தையும் ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை.

எதுவும் நிரந்தரம் இல்லை என்பதைத்தான் இந்த வாழ்க்கை உணர்த்துகிறது.

ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனையோ செய்திகள்... கதைகள்... அனுபவங்கள்!

அதுபோல் என் வாழ்க்கையில் ரசித்த, மெய்சிலிர்த்த, பிரமிக்க வைத்த சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

ஆன்மிக சொற்பொழிவாளர்: பி. சுவாமிநாதன்

கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருப்புறம்பயம் என்ற கிராமத்தில் பிறந்தேன் .

பள்ளிப் பருவம் திருப்புறம்பயம் கிராமத்தில்.

கல்லூரிப் பருவம் கும்பகோணம் நகரத்தில்.

படித்து முடித்துக் குடும்பத்துக்கு உதவ வேண்டும்... ஏழ்மையில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக வேலை தேடி சென்னைக்கு வந்தேன்.

'வந்தாரை வாழ்விக்கும் சென்னை' என்னையும் வாழ வைத்தது. வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.

சென்னைக்கு வந்த புதிதில் (1985) ஒரு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலை.

அதன்பின் பிரபல பத்திரிகை நிறுவனத்தில் (1987) பணி.

ஆரம்பத்தில் பத்திரிகையாளன். இப்போது, இதோடு சொற்பொழிவாளன் என்கிற அடைமொழியும் சேர்ந்துகொண்டு விட்டது.

பல நாடுகளுக்கும் பயணம் செய்துவிட்டேன். பல தரப்பட்ட மக்களையும் பார்த்துவிட்டேன்.

ஆன்மிகத்தின் பன்முகங்களைப் பல்வேறு இடங்களுக்கும் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறேன். இது இறைவன் எனக்கு இட்ட பணியாக நினைத்து பெருமிதத்துடன் பயணிக்கிறேன்.

நான் பத்திரிகையாளனாக இருந்த காலம்.

கட்டுரை எழுதுவதற்காகச் சென்ற ஒரு கிராமத்தில் விநோதமான ஒரு பாம்பைப் பார்க்கிற பாக்கியம் ஏற்பட்டது. கரிய நிறத்தில் சுமார் ஆறடி நீளம். சாதாரணமாக அந்தப் பாம்பு ஊரில் உள்ள எவர் கண்களிலும் படாதாம்.

'அந்தப் பாம்பு எவர் கண்ணில் பட்டாலும் அது பெரும் பேறு' என்றார்கள் ஊர்க்காரர்கள்.

ஒரு கோயிலைப் பற்றிக் கட்டுரை எழுதுவதற்காக மேலத்திருமாணிக்கம் என்ற கிராமத்துக்குச் சென்றேன். உசிலம்பட்டியில் இருந்து கோடநாயக்கன்பட்டி, தாடையம்பட்டி வழியே சுமார் 18 கி.மீ. தொலைவு.

மேலத்திருமாணிக்கத்தில் அமைந்துள்ள அந்த ஆலயத்தின் பிரதான தெய்வங்கள் அருள்மிகு சுந்தரேஸ்வரர் மற்றும் அருள்மிகு மீனாட்சி.

மிகவும் பழைமையான ஆலயம்.

அப்போது எழுதி வந்த ஒரு தொடரில் பழைமையான ஆலயங்களைத் தேடித் தேடிப் போய்ப் பார்த்து 'ஆலயம் தேடுவோம்' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தேன்.

அந்த வகையில் பலராலும் அறியப்படாத இந்த ஆலயத்தைப் பற்றிக் கட்டுரை எழுதலாம்... பலருக்கும் தெரியப்படுத்தலாம் என்று போயிருந்தேன்.

ஆலயம் தொடர்பான இரு அன்பர்கள் பக்கத்தில் ஒரு ஊரில் இருந்து என்னை காரில் அழைத்துச் சென்றார்கள்.

'நேரத்தை மிச்சமாக்கலாமே' என்று ஒரு நோட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு 'கோயிலைப் பற்றிச் சொல்லுங்கள் நான் குறிப்பு எடுத்துக்கொள்கிறேன்' என்றேன்.

உடன் பயணித்த உள்ளூர் அன்பர் சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னதன் தொகுப்புதான் இது:

ந்திராவைச் சேர்ந்த அந்தணர் ஒருவர் இங்கே சமாதிகொண்டிருக்கிறார். ஆந்திராக்காரருக்கு மேலத்திருமாணிக்கத்தில் ஏன் சமாதி?

ஆலயத்தின் தல புராணத்தைச் சற்றே தெரிந்துகொள்வது நல்லது.

மேலத்திருமாணிக்கத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் இருக்கிறது குப்பனம்பட்டி என்ற கிராமம். பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஆந்திராவில் கடப்பா மாவட்டம் எர்ரகுண்டலா பகுதியைச் சேர்ந்த அந்தணர் ஒருவர், பிழைப்புக்காக குப்பனம்பட்டி வந்தார்.

அங்கு எந்த ஒரு வேலையும் கிடைக்காத காரணத்தால், மறுநாள் அதிகாலை வேறு இடத்துக்குச் செல்ல நினைத்தார்.

ஆனால், இறைவனின் திருவுளத்தை யார் அறிவார்?!

அன்றிரவு அவருக்கு ஓர் அசரீரி கேட்டது: 'நாளை நீ புறப்பட்டு அருகில் உள்ள திருமாணிக்கம் என்ற கிராமத்துக்குச் செல். அங்கு வனாந்தரத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் எனும் பெருமானுக்கு பூஜை செய்!'

அசரீரியைக் கேட்ட அந்தணர்,  இறைவனின் விருப்பப்படி அடுத்த நாள் அதிகாலை புறப்பட்டு, திருமாணிக்கம் கிராமம் வந்தடைந்தார். அங்குள்ள பழைமையான ஈசனுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். தினமும் காலை வேளையில் நறுமலர்களைக் கொண்டு இறைவனை பூஜித்து வழிபட்டார்.

இதற்கு முன்னதாக, அந்த சுந்தரேஸ்வரரை ஐந்து தலை நாகம் ஒன்று நெடு நாட்களாக பூஜித்து வந்துள்ளது. புதிதாக பூஜிக்க வந்துள்ள அந்தணரைப் பார்த்து சந்தோஷப்பட்டது. அந்தணருடைய ஏழ்மையைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஐந்து தலை நாகம் அவருக்கு உதவ நினைத்தது.

ஐந்து தலை நாகம் எப்படி உதவ முடியும்?

தினமும் ஒரு மாணிக்கக் கல்லை (நாக ரத்தினம்) கக்கி, அதை அந்தணருக்குக் கொடுத்து பூஜை செலவுக்காகவும், அவரின் வயிற்றுப் பிழைப்புக்காகவும் வைத்துக்கொள்ளச் சொன்னது.

அந்தணர் பெரிதும் மகிழ்ந்தார். தினமும் அந்த மாணிக்கக் கல்லை அருகில் உள்ள ஒரு ஜமீனில் கொடுத்துக் காசாக்கி பூஜையையும் பிழைப்பையும் குறைவில்லாமல் நடத்தி வந்தார். இதனால்தான் இந்த ஊருக்கு 'திருமாணிக்கம்' என்ற பெயர் வந்தது.

காசியில் பாயும் கங்கை நதியில் புனித நீராடி, இறைவனின் அபிஷேகத்துக்குத் தீர்த்தம் எடுத்து வர வேண்டும் என்று இந்த அந்தணருக்கு வெகு நாட்களாக ஆசை. எனவே, ஒரு நாள் காசி மாநகருக்குப் புறப்பட்டார்.

கிளம்பும்போது வயதுக்கு வந்த தன் மகனை அழைத்தார். 'காசியில் இருந்து நான் திரும்பி வரும்வரை தினமும் ஈசனுக்கு பூஜை செய். இந்த பகவானை வெகுகாலமாக ஐந்து தலை நாகம் ஒன்று வணங்கிக்கொண்டிருக்கிறது. அந்த நாகம் தினமும் ஒரு மாணிக்கக் கல்லைக் கக்கும். அதை எடுத்துக்கொண்டு ஜமீனுக்குப் போய்க் கொடு. பணம் தருவார்கள். அதை இறைவனின் பூஜைக்கும், உனது சாப்பாட்டுச் செலவுக்கும் வைத்துக் கொள். ஐந்து தலை நாகத்திடம் ஜாக்கிரதையாக நடந்து கொள்' என்று கடைசி வாசகத்தை மட்டும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லி காசிக்குப் புறப்பட்டு விட்டார் அந்தணர்.

நாட்கள் ஓடின.

தினமும் மகன் பூஜித்து வந்தான். அந்த ஐந்து தலை நாகமும் நித்தமும் ஒரு மாணிக்கக் கல்லைக் கக்கி இவனுக்கு உதவி வந்தது.

நித்தமும் ஒவ்வொரு மாணிக்கக் கல்லைப் பார்த்துக் கொண்டிருக்கிற அந்த மகனுக்கு ஒரே நாளில் நிறைய மாணிக்கக் கற்களைப் பார்க்க வேண்டும்... நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற பேராசை வந்துவிட்டது.

பேராசைதான் மனிதனுடைய அழிவின் ஆரம்பம்.

ஆதிசங்கரர், புத்தர் போன்றோரில் இருந்து பலரும் நமக்கு பேராசை பற்றி போதித்துவிட்டார்கள்.

ஆனால், இந்த மனித குலம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதை ஏற்க மறுக்கிறது.

இதைத்தான் விதியின் விளையாட்டு என்கிறோம்.

கையில் காசே இல்லாமல், சொந்த வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில் வாழ்ந்து வருகிற மனிதன் இரவில் நிம்மதியாக உறங்குகிறான்.

ஆனால், ஒண்ணரை டன் ஏ.சி.யைப் போட்டுக்கொண்டு பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருப்பவனுக்கு இரவில் நிம்மதியான உறக்கம் இல்லை. என்ன காரணம்?

பிளாட்பாரத்தில் வசிப்பவனுக்குக் கவலை இல்லை. காலையில் எப்படியோ ஒரு டீ கிடைத்துவிடும்.

பஞ்சு மெத்தை ஆசாமிக்கு அப்படி இல்லை. அடுத்த நாள் ஷேர் மார்க்கெட் சரியாமல் இருக்க வேண்டும். தன் நிறுவனத்தில் பணி புரிகிற ஊழியர்கள் தன்னை ஏமாற்றாமல் இருக்க வேண்டும்... சொந்த பந்தங்கள் சூறையாடாமல் இருக்க வேண்டும். இப்படிப் பல கவலைகள்.

எதுவுமே கிடைக்காத வரை எதைப் பற்றியும் மனிதன் கவலைப்படுவதில்லை?

கிடைத்துவிட்டால், கவலைதான்.

ஒற்றை மாணிக்கக் கல்லைப் பார்த்த மகனுக்கும் ஒரே நேரத்தில் பல கற்களைப் பெறவேண்டும் என்ற ஆசை எழுவதில் என்ன வியப்பு?

 (தொடரும்)

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT