ஒரே நேரத்தில் ஐந்து தலை நாகத்திடம் இருந்து எண்ணற்ற மாணிக்கக் கற்களைப் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டான் திருமாணிக்கம் சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு பூஜை செய்த அந்தணரின் மகன்.
இதே ஆலயத்தில் பணி புரிந்த ஒரு பெண்ணிடம் தன் மனதில் இருக்கும் பேராசையைச் சொன்னான்.
எண்ணற்ற மாணிக்கக் கற்களை ஒரே நேரத்தில் பெறும் அவனது இந்த ஆசையை நிறைவேற்றத் தான் உதவுவதாக சொன்னாள் அப்பெண்.
மாணிக்கம் என்றால் மங்கைக்கும் ஆசை இருக்காதா என்ன?!
நல்ல எண்ணம்கொண்டவர்களை நண்பர்களாகப் பெற்றால், வாழ்க்கை ஒளிரும்.
துஷ்ட எண்ணம்கொண்டவர்கள் நண்பர்களாக அமைந்தால், இருள் சூழ்ந்துவிடும்.
இறை பூஜை மட்டுமே தன் பணி என்று இனிதே வாழ்ந்துகொண்டு வந்த அவன், தன் வாழ்க்கையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளக் தயாரானான்.
அந்தணரின் மகனும் ஆலயத்தில் பணி புரியும் பெண்மணியும் சேர்ந்து இதற்கான திட்டத்தை வகுத்தார்கள்.
முடிவு - ஐந்து தலை நாகத்தை ஒரேயடியாகக் கொன்றுவிட வேண்டும். அப்போது அதன் உடலில் இருந்து நிறைய மாணிக்கக் கற்களை எடுத்து சந்தோஷமாக வாழலாம்.
அடுத்த தினம் காலை வேளையில் ஆலயத்துக்கு வந்தான் மகன்.
அது நாள் வரை நல்ல எண்ணத்தோடு வந்தவன், அன்று துஷ்ட எண்ணத்தோடு வந்திருக்கிறான்.
ஐந்து தலை நாகம் ஆலயத்துக்குள் வந்தவுடன் அதை அடித்தே கொல்லவேண்டும் என்று ஒரு பெரிய தடியைத் தன்னோடு மறைத்து வைத்திருந்தான்.
நாகம் வரும் வழியின் மேல் விழி வைத்துக் காத்திருந்தான்.
நாகமும் வந்தது.
சற்றும் தாமதியாமல் ஒரே அடியில் அதைக் கொல்லும் எண்ணத்துடன் தடியை இவன் ஆக்ரோஷமாக ஓங்கும் நேரம் அந்த விபரீதம் நடந்துவிட்டது.
மாணிக்கக் கல்லைக் கக்குவதற்குப் பதிலாக, அவன் உடலில் விஷத்தை உமிழ்ந்துவிட்டுச் சரேலென மறைந்தது நாகம்.
மறைவதற்கு முன் நாகத்தின் பெரும் சீறல் காரணமாக அவனுக்கு அருகே நின்றிருந்த ஆலயப் பெண்மணி, அதாவது இவனது சதித் திட்டத்துக்குத் துணை போனவள், சுமார் இருநூறு அடி தொலைவுக்குத் தள்ளிப் போய் விழுந்தாள். இறந்து போனாள்.
அவள் இன்று தெய்வமாக வணங்கப்படுகிறாள். ஐந்து தலை நாகம் தாக்கிய இந்தப் பெண்மணி, 'அரியமாணிக்கம் அம்மன்' என்றும், 'அம்மச்சியாரம்மன்' என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்மன் அருளுகின்ற ஆலயம் அருள்மிகு சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
ஐந்து தலை நாகத்தின் விஷம் தாக்கிய காரணத்தால் அதே இடத்தில் மரணமடைந்தான் அந்தணரின் மகன்.
இந்த வேளை பார்த்துக் காசிக்குச் சென்றிருந்த அந்தணரும் வெகு சீக்கிரமாகவே திருமாணிக்கம் திரும்பிவிட்டார்.
மகனின் கோர முடிவை அறிந்து கதறினார். விஷயம் அறிந்து அவனது பரிதாப முடிவுக்கு அனுதாபப்பட்டார்.
காசியில் இருந்து தான் கொண்டுவந்த தீர்த்தத்தைக் கீழே வைத்தார். அந்த இடம் 'தீர்த்தக் கிணறு' என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
மகனின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. கோயிலில் பூஜைகள் செய்யும் அந்தணரின் மகன் என்பதால், அவனது தகனத்துக்கு அக்கம்பக்கத்துக் கிராமத்தவர்களும் பொருள் கொடுத்து உதவினர்.
பால் அனுப்பிய ஊர் 'பாலாறுப்பட்டி' ஆனது.
உடலை எரிக்கக் கட்டைகளைக் கொண்டுவந்து சேர்த்த ஊர் 'கட்டளை' ஆனது.
உடலை அலங்கரிக்க துணிகளைக் கொண்டுவந்து சேர்த்த ஊர் 'வண்ணாங்குளம்' ஆனது.
பணம், காசு உதவி செய்த ஊர் 'அதிகாரப்பட்டி' ஆனது.
இங்கே சொல்லப்பட்ட அனைத்து ஊர்களும் இன்றைக்கு மேலத்திருமாணிக்கத்தில் சுமார் ஐந்து கி.மீ. சுற்றளவில் இருக்கின்றனவாம்.
இறைவனின் கோபத்துக்கு ஆளானதால், மகனுக்கென்று கோயிலோ, நினைவுச் சின்னமோ இல்லை.
'மிகப் பெரிய பழிக்கு நம் குடும்பம் ஆளாகிவிட்டதே' என்று துயரத்தில் மூழ்கிய அந்தணரும், இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு இறந்துற.
அந்தணரது உண்மையான இறை வழிபாட்டின் பயனால், ஆலய வளாகத்திலேயே பிராகாரத்தின் வடமேற்குப் புறத்தில் இவருக்குச் சமாதி அமைந்துள்ளது.
ஸ்ரீ ஆதிமூர்த்தி ஸ்வாமி' என்று இவர் பின்னாட்களில் அழைக்கப்பட்டார். என்றாலும், 'ஐயர் சாமி' என்று ஊர்க்காரர்களால் இன்றைக்கு அழைக்கப்படுகிறார்.
ஐந்து தலை நாகம் ஒன்று இன்றைக்கும் இவரது சன்னிதிக்கு வந்து வழிபட்டுச் செல்வதாக ஊர்க்காரர்கள் சொல்கிறார்கள்.
அதே வேளையில், கரிய நிறத்தில் சுமார் ஆறடி நீளமுள்ள ஒரு பாம்பு அடிக்கடி ஆலய வளாகத்துக்குள் வந்து இந்தச் சமாதியை வழிபட்டுச் செல்கிறது. இந்தப் பாம்பையும் தெய்வமாகவே வணங்குகிறார்கள். இதை நேரில் பார்த்த ஊர்க்காரர்களும் இருக்கிறார்கள்.
'ஆறடி நீளமுள்ள பாம்பு அத்தனை சுலபத்தில் எவர் கண்களிலும் படாது. சற்றே வயதான தோற்றத்தில் இந்தப் பாம்பு காணப்படும். இது போன்ற நிறத்தில் ஒரு பாம்பைப் பார்ப்பது அரிது' என்றார்கள் ஊர்க்காரர்கள் என்னிடம்.
கட்டுரை சேகரிப்பதற்காக சென்ற சுந்தரேஸ்வரர் ஆலயத்தை கார் நெருங்குவதற்கு முன் சாலையை அந்தப் பாம்பு கடந்து சென்ற காட்சி. இன்றும் என் மனதில் இருந்துகொண்டிருக்கிறது.
காரில் அமர்ந்திருந்த ஊர்க்கார அன்பர்கள் இருவர், சாலையைக் கடக்கும் பாம்பைப் பார்த்துவிட்டு, விநாடி நேரத்தில் என்னிடம் விவரம் சொன்னார்கள்.
அந்தப் பாம்பும் மிக மெதுவாக சாலையைக் கடந்து சென்றது. பாம்பு கடந்து சென்ற இடத்துக்கும் காருக்குமான இடைவெளி அதிகம் போனால் முப்பதடி நாற்பதடிதான் இருக்கும்.
என்னுடன் வந்த இருவரும் அந்தப் பாம்பை வணங்க... நானும் வணங்கிப் பேறு பெற்றேன். சில விநாடிகளில் மறைந்துவிட்டது.
ஆலயத்தினுள் ஐந்து தலை நாகர் விக்கிரகம் ஒன்றின் கீழ் ஸ்ரீ ஆதிமூர்த்தி ஸ்வாமி (அந்தணர்) தரிசனம் தருகிறார்.
ஆதிமூர்த்தி ஸ்வாமிக்கு வேக வைத்ததையோ, கொதிக்க வைத்ததையோ நிவேதனம் செய்யக்கூடாதாம். அதாவது. உணவு நிவேதனம் கிடையாது.
நாட்டுச் சர்க்கரை. வாழைப்பழம், தேங்காய் போன்ற பொருட்கள்தான் நிவேதனம்.
ஏன் சாதம் நிவேதனம் இல்லை என்பதற்கு சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறார்கள்.
இந்த ஊரில் வசிக்கும் விவரம் அறியாத ஒரு சிறுவன் தன் வீட்டில் இருந்து சிறிது சாதத்தை எடுத்துக்கொண்டு ஆலயத்தினுள் நுழைந்தான். ஆதிமூர்த்தி ஸ்வாமி சமாதியின் மீது சாதத்தை வைத்து வணங்கினான். அடுத்த விநாடி எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.
பெரிய பாம்பு ஒன்று அவனைத் துரத்த ஆரம்பித்தது.
தலைதெறிக்க ஆலயத்தை விட்டு ஓடினான். ஆனால், பாம்பு விடவில்லை அவனை.
விடாமல் துரத்திக்கொண்டே வந்தது.
விஷயம் கேள்விப்பட்ட அப்போதைய ஆலய அர்ச்சகர் சுப்ரமணிய வாத்தியார் ஓடிப்போய் பையனை மறித்து நின்றார். அவனுக்கு எதிரே பாம்பு படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது.
பாம்பையும் சிறுவனையும் மாறி மாறிப் பார்த்த அர்ச்சகர் விவரம் கேட்டார்.
உடல் நடுங்கிக்கொண்டே நடந்த விஷயத்தைச் சொன்னான் சிறுவன்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டவர் அடுத்த விநாடி பாம்பைப் பார்த்து, 'இவன் விவரம் தெரியாமல் ஏதோ ஆர்வக் கோளாறினால் செய்துவிட்டான். இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டேன் என்று உறுதியும் தந்துவிட்டான். எனவே, அவனைத் தண்டிக்காதே. இங்கிருந்து போய் விடு' என்று சொல்ல... அடுத்த கணம் அங்கிருந்து மறைந்ததாம் பாம்பு!
மனிதர்களுக்குத் தெரியாத, புரியாத எத்தனையோ அதிசயங்கள் இன்றளவும் இருந்துகொண்டிருக்கின்றன.
இதேபோல் இன்னொரு பாம்பு ஆலயத்தையும் தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது.
இந்த ஆலயம் ஹைதராபாத் அருகே செகந்திராபாத்தில் திருமலைகிரியில் அமைந்துள்ளது. நாகம்மன் ஆலயம் என்று அழைக்கிறார்கள்.
ஆலயத்தின் பிரதான தெய்வம் நாகம்மாதான்.
இங்குள்ள மூலவர் சன்னிதியின் தரைப் பகுதியில் பெரிய புற்று ஒன்று உள்ளது. அந்தப் புற்றின் முகப்பில் பெண் தெய்வம் ஒன்றின் முகம் உலோக விக்கிரக வடிவில் காணப்படுகிறது.
இதற்கு அபிஷேகம் கிடையாது. கற்பூர ஆரத்தி மட்டுமே!
ஆலய வளாகத்தில் எங்கு பார்த்தாலும் நாகர் விக்கிரகங்கள் காணப்படுகின்றன. தங்களது நாக தோஷம் நீங்குவதற்காக பக்தர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டு அது நிவர்த்தி ஆனதும் நாகர் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்கிறார்கள்.
ஆலயத்தில் உயிருள்ள எண்ணற்ற பாம்புகளும் மறைவிடங்களில் வசிக்கின்றனவாம்.
அவற்றுள் சுமார் ஒன்பதடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று அவ்வபோது ஆலய வளாகத்துக்குள் வந்து தரிசனம் தருமாம்.
ஆலயத்துக்குள் சர்வ சாதாரணமாக வந்து செல்லும் இந்தப் பாம்பு, சில நேரம் இங்குள்ள சன்னிதிகளில் புகுந்து ஆலயத்தில் உள்ள விக்கிரகங்களில் மேல் ஏறி படமெடுத்தபடி காட்சி தரும்.
அப்படி சன்னிதிகளில் இந்தப் பாம்பு படமெடுத்து நிற்கிறபோது பரம சாதுவாக இருக்குமாம். அந்த நேரத்தில் பக்தர்களது அபிஷேக பூஜைகளை ஏற்றுக்கொள்ளுமாம். படமெடுத்து நிற்கின்றபோது அதன் தலையில் பாலை ஊற்றி பாலபிஷேகமும் செய்கின்றனர் பக்தர்கள்.
பாம்பின் மீது மஞ்சளையும் குங்குமத்தையும் பய பக்தியுடன் தூவுகிறார்கள். சில நிமிடங்களில் பாம்பு அங்கிருந்து அகன்றதும் அதன் மேல்பட்ட மஞ்சளையும் குங்குமத்தையும் பிரசாதமாக எடுத்து இட்டுக் கொள்கிறார்கள்.
2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி இந்த ஆலயத்தில் நடந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டேன்.
திரளான கூட்டத்தின் இடையே நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்கள். பாம்பு பயத்தில் அங்குமிங்கும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டே நடந்தது, இன்னமும் நினைவிருக்கிறது.
ஆலயப் பணிகளை நிர்வகித்துவரும் சசிகலா என்ற பெண்மணி, நிஜ பாம்புகளுக்கு நடத்திய அபிஷேகத்தை நேராகப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. பால் மட்டுமல்ல... தெய்வத் திருமேனிகளுக்கு அபிஷேகம் செய்வதுபோல் மற்ற பொருட்களைக் கொண்டும் வழிபாடு நடத்தினார் .
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்கிறார்கள்... இந்த செகந்திராபாத் ஆலயத்திலோ அப்படியே தலைகீழ்!
இறைவனின் வாகனமாக, ஆபரணமாக விளங்கும் சர்ப்பங்கள். தனக்கு ஒருவன் தீங்கு செய்யாதவரை அவனுக்கு நல்லனவற்றை மட்டுமே செய்யும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
(தொடரும்)