சிங்கப்பூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் அந்நாட்டின் தேசிய சின்னமாகத் திகழ்கிறது. சிங்கப்பூரின் மிகவும் பழைமையான திருக்கோயில்களில் இதுவும் ஒன்று. சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற இடமாக அறியப்படும், ‘லிட்டில் இந்தியா’ எனும் பகுதியில் சிராங்கூன் சாலையில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் இதுவாகும்.
1855ம் ஆண்டு நரசிங்கம் என்பவருக்கு கிழக்கிந்தியக் கம்பெனியரால் விற்கப்பட்ட நிலத்தில் நரசிம்ம பெருமாள் கோயில் ஒன்று கட்டப்பட்டது. நரசிம்ம பெருமாள், மகாலெட்சுமி, ஆண்டாள், ஆஞ்சனேயர் இவர்களுடன் இக்கோயிலின் வெளியில் அரசமரத்தடியில் பிள்ளையார் சிலை ஒன்றும் வைத்து வழிபட்டு வந்துள்ளார்கள்.
1907 முதல் முகமதிய இந்து அறக்கட்டளை வாரியத்தினால் மேலாண்மை செய்யப்பட்டு, பின்னர் இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரத்தின் கீழ் இக்கோயில் கொண்டு வரப்பட்டது. 1963ம் ஆண்டு தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகளைக் கொண்டு இக்கோயிலின் சிற்ப வேலைகள் நடைபெற்று இராஜ கோபுரம், பிள்ளையார் சன்னிதியைத் தவிர தற்போதுள்ள கோயில் 1966ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்கிறது இக்கோயில் தல வரலாறு.
நரசிங்கப் பெருமாள் கோயில், ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலாக பின்னர் பெயர் மாற்றம் பெற்றது. நரசிங்க உருவத்திற்குப் பதிலாக திருப்பதி வேங்கடேசப் பெருமாளை போன்ற திருவுருவத்தைக் இக்கோயிலில் மூலவராக பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று இந்தியாவிலிருந்து சிலையும் வடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.
ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் 1966ல் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் முடிவுற்றவுடன் இக்கோயிலுக்கு ஐந்து நிலைகளைக் கொண்ட 20 அடியில் இராஜ கோபுரம் கட்டப்பட்டது. இக்கோயில் கோபுரம், விமானத்தில் சுதை சிற்பங்களாக தாயார், ஆண்டாள், பெருமாள் பொலிவுடன் காட்சி தருகின்றனர். ஆலயக் கட்டட அமைப்பானது தென்னிந்திய கட்டடக்கலை நிபுணத்துவத்தை தழுவியதாகவே உள்ளது. இந்த ஆலயத்தில் ஆச்சரியப்படும் வகையில் ஓவியங்களும் சிற்பங்களும் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.
கருவறை மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உத்ஸவத் திருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு அன்றாட பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள கொடி மரம் இந்தியாவிலிருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு இராஜகோபுரத்திற்கான நுட்பமான கதவு செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தின் கருவறைக்கு மேலே உள்ள விமானம் வண்ணமயமான வட்ட வடிவத்தில் ஒன்பது கோள்களையும் சித்தரிக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது சிறப்பு. நவம்பர் 1978ல் இக்கோயில் சிங்கப்பூரின் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலயத்தில் பிரம்மோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகள் விசேஷ தினங்களாகும். சிங்கப்பூரில் வாழ்கின்ற இந்து மக்களுக்கு இந்த ஆலய வளாகம் கலை மற்றும் பண்பாட்டு மையமாகவும் வழிபாட்டு தலமாகவும் விளங்குகின்றது. மேலும், சுற்றுலா வாசிகளைக் கவரும் ஆலயமாகவும் உள்ளது.