தீபம்

அள்ளிக் கொடுக்கும் அஸ்திரபுரீஸ்வரர்!

ஆர்.வி.பதி

செங்கற்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சிற்றூர் ஆனூர்.  இங்கு மிகவும் பழைமையான சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் கம்பவர்மன், பாத்திவேந்திராதிவர்மன், முதலாம் ராஜராஜசோழன், முதலாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் ராஜராஜன் முதலான மன்னர்கள் இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். கல்வெட்டுக் களஞ்சியமாகக் காட்சி தரும் இத்தலம், ஆனியூர், ஆதியூர் எனும் பல பெயர்களில் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னன் கம்பவர்மன் காலத்துக் கல்வெட்டு ஒன்றின் மூலம், ’களத்தூர் கோட்டத்து ஆனியூர், வம்பங்காட்டு மகாதேவர் கோயிலில் விளக்கெரிக்க 40 கழஞ்சு பொன் காலியூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கணத்தாருள் ஒருவனான ஸ்ரீதரக் கிரமவித்தன் என்பான் ஆனியூர் மகாசபையிடம் அளித்தான்’ என்றும் அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு நந்தாவிளக்கு எரிக்க சபை ஒப்புக் கொண்டதை அறிய முடிகிறது. கல்வெட்டுகளில் இத்தலத்து இறைவன், ’திருவம்பங்காட்டு மகாதேவர்’ என்றும், ’திருவம்பங்காட்டு உடையார் ஆளுடைய மகாதேவர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் அமாவாசை நாளிலும், ஸ்ரீபலி வழிபாட்டின் போதும் மத்தளி, கரடிகை, கைமணி, சங்கு, காளம், சேகண்டிகை முதலான இசைக்கருவிகளை வாசிக்க நரசிங்கபிரான் சிவன் என்பவர் நிலம் அளித்த செய்தியை சோழர்கள் காலக் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

ஆனூரின் வடகிழக்கு மூலையில் கிழக்கு திசை நோக்கி  இத்தலம் அமைந்துள்ளது. கோயிலின் முன்னால் தீர்த்தம் அமைந்துள்ளது. மதில் சுவர் மற்றும் ராஜகோபுரம் இன்றி, நுழைவுவாயில் மட்டும் அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் முன்னால் திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ள கல் தூணைக் காண முடிகிறது. கோயிலினுள் நுழைந்தும் நுழைவாயிலின் இருபுறம் சூரியன் சந்திரன் சன்னிதிகள் காணப்படுகின்றன. உள்ளே பலிபீடம், நந்தி மண்டபம் அமைந்துள்ளன. இத்தலம் முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்போடு காட்சி தருகிறது. முன்மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி சௌந்தரநாயகி அம்பாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறாள். கருவறையின் முன்னால் புடைப்புச் சிற்ப நிலையில் துவாரபாலகர்கள் அமைந்துள்ளனர். நுழைவு வாயிலின் பக்கவாட்டுச் சுவரில் ருத்ராட்சை மாலைகளை அணிந்த சிவனடியவரின் புடைப்புச் சிற்பம் ஒன்று அமைந்துள்ளது. செவ்வக வடிவத்தில் அமைந்த கருவறைக்குள் ஈசன் அஸ்திரபுரீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார். அர்ஜுனன் சிவ அஸ்திரம் பெற தவமிருந்தத் தலங்களில் இத்தலமும் ஒன்று என்பது ஐதீகம்.  அர்ஜுனனுக்கு சிவபெருமான் அஸ்திரம் தந்த தலம் என்பதால் இத்தலத்து ஈசன் அஸ்திரபுரீஸ்வர் என்று அழைக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.

கோட்டத்துச் சிற்பங்களாக ஸ்ரீநர்த்தன கணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, விஷ்ணு துர்கை அமைந்துள்ளனர். விஷ்ணு துர்கைக்கு எதிரில் உள்ள ஒரு சன்னிதியில் சண்டிகேஸ்வரர் வலது திருக்கரத்தில் மழுவைத் தாங்கியும் இடது காலை மடக்கி வலது காலை குத்திட்டு அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது வேறெங்கும் காணக்கிடைக்காத தொன்மையான அமைப்பாகும். இத்தலத்தின் சுற்றுப்பிராகாரத்தில் ஸ்ரீமகாகணபதி சன்னிதியும், ஸ்ரீவள்ளி சுப்பிரமணியர் தேவசேனா சன்னிதியும், பைரவர் சன்னிதியும் அமைந்துள்ளன.

மதில் சுற்றுச்சுவரில் ஸ்ரீசங்கீத விநாயகர் மற்றும் ஜேஷ்டா தேவியின் அரிய வகை புடைப்புச் சிற்பங்களைக் காண முடிகிறது. சோழர் காலத்தில் படையெடுப்புக்குச் செல்லும் முன்னால் ஆயுதங்களை ஜேஷ்டா தேவியின் முன்னால் வைத்து வணங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இத்தலத்தில் மாத பிரதோஷம், மகாசிவராத்திரி முதலான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கிருத்திகை தினங்களில் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இக்கோயிலில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.

தரிசன நேரம்: காலை 9 முதல் 11 மணி வரை. பிரதோஷ நாட்களில் மாலை வேளைகளில் தரிசிக்கலாம்.

அமைவிடம்: செங்கற்பட்டிலிருந்து பொன்விளைந்தகளத்தூர் செல்லும் வழியில் ஆனூர் அமைந்துள்ளது. T4, T12, 129C முதலான அரசுப் பேருந்துகள் ஆனூருக்குச் செல்கின்றன.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT