பெருமாள் என்று சொன்னாலே திருமால், நாராயணன் என்று பொருள். பெருமாள் இப்பூவுலகில் பல இடங்களில் எழுந்தருளி இருக்கின்றார். அவர் எழுந்தருளியிருக்கின்ற ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஒவ்வொரு விதமான சிறப்பும் மகிமையும் அழகும் உண்டு. ஒவ்வொரு திருத்தலத்தினுடைய அழகைச் சொல்ல வேண்டுமென்றால் அதை நாம் ஒரே வரியில் சொல்லி விடலாம். உதாரணத்துக்கு, காஞ்சிபுரம் குடை அழகு, திருப்பதி வடை அழகு, மன்னார்குடி மதில் அழகு, ஸ்ரீரங்கம் நடை அழகு என்று கூறுவார்கள்.
காஞ்சிபுரம் குடையழகு என்றால் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் உள்ள குடை அழகு என்று பொருள். வரதன் என்றாலே அருளை வழங்குபவன் என்று பொருள். வரதராஜப் பெருமாள் எழுந்தருளி இருக்கிற காஞ்சிபுரத்தில் அவருக்கு செய்யப்படும் உத்ஸவத்தில் இருக்கும் குடையானது பிரம்மாண்டமாக இருக்கும். காஞ்சிபுரத்தில் இருப்பது போன்ற குடை வேறு எந்த பெருமாள் கோயிலிலும் கிடையாது. காஞ்சிபுரத்தில் உத்ஸவத்திற்கு குடை செய்வதற்கென்றே சிறப்பு வாய்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள். அந்தக் கலைஞர்கள் மட்டும்தான் உத்ஸவத்திற்கு குடையை செய்து கொடுப்பார்கள். இந்தியாவில் வேறு எந்த திருக்கோயிலில் குடை செய்ய வேண்டும் என்றாலும் காஞ்சிபுரத்திலிருந்துதான் கலைஞர்கள் அங்கு சென்று குடை செய்து கொடுத்துவிட்டு வருவார்கள். அந்த அளவிற்கு பரம்பரையாக பிரம்மாண்டமான குடையை செய்யக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள் அக்கலைஞர்கள். அதனால்தான் காஞ்சிபுரம் குடை அழகு.
திருப்பதி வடையழகு என்றால், திருப்பதியில் பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கப்படும் வடை என்று பொருள். திருப்பதி என்றால் லட்டுதான் சிறப்பு என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். லட்டு, கடந்த 400 அல்லது 500 ஆண்டுகளாகத்தான் பிரபலமாக உள்ளது. முகலாயப் பேரரசுதான் பூந்தி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அதை உருண்டையாகப் பிடித்தால் லட்டு என்று வழக்கத்தில் கொண்டு வந்தது. அதற்கு முன்னரெல்லாம் ஸ்ரீராமானுஜர் காலம் தொட்டு காலங்காலமாக திருப்பதியில் பெருமாளுக்கு நெய்வேத்தியம் வடைதான். திருப்பதி வடை என்றாலே அத்துணை சுவை. பார்ப்பதற்கே அவ்வளவு அழகாகவும் நறுமணத்தோடும் இருக்கும். அதனால்தான் முன்னோர்கள் திருப்பதி வடை அழகு என்று சொன்னார்கள்.
மன்னார்குடி மதிலழகு என்றால் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கின்ற ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் உள்ள மதில் என்று பொருள். அந்த திருக்கோயிலில் கண்ணன் குழல் ஊதுகிற மாதிரி பசு மாட்டின் மேல் சாய்ந்து கொண்டு இருக்கின்ற அந்தக் காட்சி அற்புதமாக இருக்கும். அந்த பெருமாள் கோயிலில் இருக்கின்ற மாதிரியான மதில் உலகத்தில் வேறு எந்தப் பெருமாள் கோயிலிலும் கிடையாது. அவ்வளவு அழகாக நீண்டு அற்புதமாக இருக்கும். ஸ்ரீரங்கம் ரங்கநாதன் கோயிலிலேயே திருமங்கையாழ்வார் கட்டிய பிரசித்தி பெற்ற மதில் உண்டு. மிகவும் நீண்ட அற்புதமான மதில். இருப்பினும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலின் மதில் அவ்வளவு அழகாகவும் கண்கொள்ளாக் காட்சியாகவும் இருக்கும். அதனால்தான் மன்னார்குடி மதில் அழகு.
ஸ்ரீரங்கம் நடையழகு என்றால், ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில் உத்ஸவத்தின்போது பெருமாள் ராஜ நடை போட்டுக்கொண்டு நடந்து வருவாராம். பெருமாளினுடைய நடை பார்ப்பதற்கு அவ்வளவு பரவசமாக இருக்கும். அவர் அலங்காரம் செய்துகொண்டு கருவறையிலிருந்து வெளியே வந்தால் அது சிங்கம் கூண்டிலிருந்து வெளியே கம்பீரமாக கர்ஜித்துக் கொண்டு வருவது போல் இருக்கும் என்று ஆண்டாள் பாடியிருக்கிறார். பெருமாளை கருவறையிலிருந்து வெளியே தூக்கிக் கொண்டு வருகிற அந்த பக்தர்களுக்கு எல்லாம், ‘சீமான் தாங்கிகள்’ என்று பெயர்.
பெருமாள் சீமான் என்பதனாலும் அவரைத் தாங்கி, தூக்கிக் கொண்டு வருவதாலும் அவர்களுக்கு சீமான் தாங்கிகள் என்று பெயர். அவர்கள் சிறுவயதிலிருந்தே அந்த நடையை பழகிக் கொள்வார்கள். அப்பொழுதுதான் சீமான் தாங்கிகள் அனைவரும் ஒரே சீராக காலை அசைத்துக் கொண்டு நடக்க முடியும். அப்படி பெருமாளைத் தாங்கிக் கொண்டு நடக்கும்போதுதான் ராஜ நடை போட்டுக்கொண்டு நடப்பதாக இருக்கும். தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு ராஜாவே நடந்து வருவதுபோல் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதிலும் குறிப்பாக ‘வையாளி உத்ஸவம்’ என்று ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் நடக்கும். கம்பர் இதனால்தான் 'நடையில் நின்று உயர் நாயகன்' என்று பாடினார். மேற்சொன்ன சிறப்புகளுக்காகத்தான் ஸ்ரீரங்கம் நடை அழகு.
காஞ்சிபுரம் குடையழகு, திருப்பதி வடையழகு, மன்னார்குடி மதிலழகு, ஸ்ரீரங்கம் நடையழகு என்று பெரியவர்கள் அந்தக் காலத்தில் அழகு ஒழுக எழுதி வைத்தார்கள். பெருமாள் என்றாலே அழகு. பெருமாளுக்கு ‘அழகிய மணவாளன்’ என்று பெயர். பெருமாளுடைய உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அவருடைய அழகைப் பற்றி நாளெல்லாம் வர்ணித்துக் கொண்டே போகலாம். பெருமாள் 'குழலழகு, வாயழகு, கண்ணழகு’ என்று ஆண்டாள் நாச்சியார் மயங்கிய நாயகன் அல்லவா?
அப்பேர்ப்பட்ட அழகிய பரம்பொருளாகிய நாராயணன், ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் போன்ற வடிவிலான பெருமாளை நாம் அனைவரும் தினமும் பக்தியோடு வணங்கி பிரார்த்தனை செய்து அவருடைய பரிபூரணமான அருளாசியைப் பெற்று வாழ்வில் மகிழ்வோம்.