Peacock Feathers 
தீபம்

வீட்டில் மயில் தோகை வைக்கலாமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

சங்கீதா

மயில் முருகப்பெருமானின் வாகனமாகவும், மயிலிறகு கிருஷ்ண பகவானுக்கு மிக தொடர்புடைய ஒன்றாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் மயில் நமது நாட்டின் தேசிய பறவையாகவும் உள்ளது. உலகின் மிக அழகான இறகுகளில் மயிலிறகும் ஒன்றாகும். ஒரு சிலருக்கு சிறுவயதில் மயிலிறகை புத்தகத்தின் நடுவில் வைத்து குட்டி போடும் என தினந்தோறும் திறந்து பார்த்த அனுபவங்களும் இருக்கும். மேலும் மயில் இறகால் செய்யப்பட்ட விசிறி மூலம் அந்த காலத்தில் மன்னருக்கு விசிறி விடுவார்கள். காயங்கள் ஏற்பட்டால் மயில் இறகு வைத்து மருந்து போடுவதும் வழக்கத்தில் உள்ளது.

இந்து சமயத்தில் மட்டுமல்லாமல், இஸ்லாமியத்திலும் மயிலிறகு பயன்படுத்துவார்கள். மேலும் பஞ்ச பட்சிகளின் வரிசையில் மயில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையாக பார்க்கப்படுகிறது. எனவே ஆன்மீக ரீதியாக மயில் தோகையை வீட்டில் வைத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

வீட்டில் மயில் தோகை வைக்கலாமா?

மயில் தோகை நேர்மறையான ஆற்றலை கொடுக்க கூடியது. மயில் தோகை பார்த்தால் நமக்கு இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி ஏற்படும். இதனால் மன நிம்மதி கிடைக்கும். எனவே வீட்டில் மயில் தோகை வைத்தால் நமக்கு நேர்மறையான ஆற்றல் கிடைக்கும்.

கோவில் திருவிழாக்களில் காவடி, கரகம் போன்றவை எடுக்கும் போது அதில் மயில் தோகை பயன்படுத்தி இருப்பார்கள். இதற்கு காரணம் மயில் தோகை பயன்படுத்தி செய்யப்பட்ட காவடி போன்றவற்றை பார்க்கும் மக்களுக்கு நேர்மறையான சக்தி ஏற்படும், மற்றும் எண்ணங்களில் எந்த ஒரு கெட்ட சிந்தனையும் தோன்றாது என்பது நம்பிக்கை. மேலும் தமிழர்களின் நாட்டுப்புற நடனங்களில் மயிலாட்டம் ஒன்றாகும். 

மயில் தோகையை வீட்டின் வாசற்படியில் வைக்கலாம். வெளியில் இருந்து வீட்டிற்குள் வரும் நபர்கள் இதை பார்த்தால் எதிர்மறை சிந்தனை அனைத்தும் விலகி ஒரு புத்துணர்வு பெறுவார்கள்.

நம் மனநிலையை சரியாக வைத்துக்கொள்வதற்கு முக்கிய பங்கு வகிப்பது செரோடோனின் என்னும் ஹார்மோன். இந்த ஹார்மோன் நம் உடம்பில் சரியாக சுரக்கவில்லை என்றால் மனசோர்வு, ஒற்றை தலைவலி, பசியின்மை, வெறுப்பாக உணர்வது போன்றவை ஏற்படும். மயில் தோகையை பார்க்கும் போது இந்த செரோடோனின் ஹார்மோன் அளவு உயர்வதாகக் கூறப்படுகிறது.

மயில் தோகை லட்சுமியின் முக்கிய அம்சமாகவும் கருதப்படுகிறது. எனவே மயில் தோகை ஒன்றை எடுத்து பணம் வைக்கும் பெட்டி அல்லது பர்ஸில் வைத்தால் லட்சுமி கடாக்ஷம் பெருகும் என்பது நம்பிக்கை.

மயில் தோகை வீட்டில் வைத்திருந்தால் பல்லி, போன்ற பூச்சிகள் வீட்டிற்குள் வராது. எனவே டியூப் லைட், ஜன்னல், கதவு போன்றவற்றில் வைக்கலாம்.

பூஜை அறையில் முருகன் படத்திற்கு அருகில் மயில் தோகை வைக்கலாம். முக்கிய நாட்களில் தீபாரதனை காட்டும் போது ஓம் சோம் சோமாய நமஹ என்ற மந்திரத்தை கூறி வழிபடலாம். 

மயில் தோகை நேர்மறை ஆற்றலை கொடுக்கும் என்பதால், தாராளமாக வீட்டில் வைக்கலாம். இதனால் எந்த எதிர்மறையான விளைவும் ஏற்படாது.

3 வகையான திக்குவாய் பிரச்சனை - குணப்படுத்தும் முறைகள்!

கனவில் எந்த விலங்கு வந்தால் என்ன பலன் தெரியுமா?

வெஜ் ஸ்டஃப்டு யம்மி பப்ஸ்!

பிரிட்டிஷ் அரச மகுடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் உண்மையில் யாருக்கு சொந்தம் தெரியுமா?

ரஷ்யா- உக்ரைன் போரில் ஈடுபட்ட இந்தியர்கள் மீட்பு!

SCROLL FOR NEXT