வலம்புரி சங்கு கடலிலே தோன்றக்கூடியது. ஆனால் சிவன் கோவிலில் இருக்கும் குளத்தில் 12 வருடத்திற்கு ஒருமுறை தோன்றும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில்தான் இந்த அற்புதம் இப்போது வரை நடந்துக் கொண்டிருக்கிறது.
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரபலமான சிவன் கோவில்களுள் ஒன்றாகும். இக்கோவில் 274 தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கே சிவபெருமான் வேதகிரீஸ்வரராகவும், பார்வதிதேவி திரிபுரசுந்தரியாகவும் அருள் பாலிக்கிறார்கள். இக்கோவில் 565 படிக்கட்டுகளைக் கொண்டு மலை மீது அமைந்துள்ளது. இங்கே நாள்தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவுப்பெற்றுச் செல்வதால், இவ்விடத்திற்கு ‘பக்ஷி தீர்த்தம்’ என்றும் ‘திருக்கழுக்குன்றம்’ என்றும் பெயர் வந்தது. இக்கோவில் கன்னி ராசிக்காரர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருமுறை மார்க்கண்டேய மகரிஷி இந்த கோவிலுக்கு வருகிறார். அப்போது சிவபெருமானை அபிஷேகம் செய்வதற்கு பாத்திரம் இல்லையே என்று வருந்தி இங்கிருக்கும் குளக்கரையில் சென்று அமர்ந்திருக்கிறார். அப்போது பெரிய வலம்புரி சங்கு இக்குளத்திலிருந்து மேலேழுந்து அவர் அருகிலே மிதந்து வந்தது.
அதை கண்டு மனம் மகிழ்ந்த மார்க்கண்டேயர் அந்த சங்கைக்கொண்டு ஈசனை நீராட்டி பூஜித்து மனம் மகிழ்ந்தார். அன்றிலிருந்து 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தீர்த்ததிலிருந்து வலம்புரி சங்கு தோன்றி மிதந்து வருவது வழக்கமாக இருக்கிறது.
சங்கு தோன்றுவதற்கு அறிகுறியாக குளத்தின் ஓரத்தில் நுரை வருவதை காணலாம். மறுநாள் ஓம்கார சத்தம் கேட்கும். அப்போது சங்கு வெளிவந்து நீரில் மிதக்கும். அப்போது அங்கே தயாராக இருக்கும் குருக்கள் அந்த சங்கை எடுத்து வந்து சுத்தப்படுத்தி பொட்டிட்டு, பூ வைத்து மேளதாளத்துடன் அதைக் கோவிலுக்கு எடுத்துச்செல்வார். மாரச் 2024ல் 12 வருடத்திற்கு பிறகு சங்கு தோன்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுகிறது. கிரிவலத்தை நால்வராகிய அப்பர், சுந்தரர், மணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோர் வேதகிரீஸ்வரரின் அருளை பெருவதற்காக தொடங்கி வைத்தார்கள். திருவண்ணாமலையில் நடக்கும் கிரிவலம் போலவே வேதகிரீஸ்வரர் கிரிவலமும் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இத்தகைய அதிசயங்களை கொண்ட சிவன் கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.