ஸ்ரீ மகாலட்சுமீசுரர், ஸ்ரீ உலகநாயகி 
தீபம்

பரசுராமரின் பிரம்மஹத்தி தோஷ விமோசனத் திருத்தலம்!

ரேவதி பாலு

திருநின்றியூர் திருத்தலம் மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோயில் வரும் வழியில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.  ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட திருநின்றியூர்  மகாலட்சுமீசுரர் திருக்கோயில் பிரம்மஹத்தி தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு தனிக் கோயில் இருக்கிறது. அதில் இந்தக் கோயில் அனுஷ நட்சத்திரத்திற்குரிய கோயிலாக வழிபடப்படுகிறது. இது அகத்தியர், பரசுராமர் மற்றும் திருமகளாகிய மகாலட்சுமி ஆகியோர் வழிபட்ட தலம்.

மஹாவிஷ்ணுவும் தாயார் மகாலட்சுமியும் இந்தத் தலத்து ஈசனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் இத்தல ஈசன், லட்சுமிபுரீஸ்வரர், மகாலட்சுமீசுரர், ஸ்ரீ பரிகேஸ்வரர் என்றும் அம்பாள் ஸ்ரீ உலகநாயகி மற்றும் லோகநாயகி என்னும் திருநாமங்களுடன் இங்கே வீற்றிருக்கிறார்கள்.  'திரு' வாகிய மகாலட்சுமி இங்கே நின்று வழிபட்டதால் இது 'திருநின்றியூர்' என அழைக்கப்படுகிறது.

இத்தலத்துக்கு, 'திரிநின்றவூர்' என்னும் பெயர் முதலில் இருந்ததாம். அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. சோழ அரசன் ஒருவன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரம் கோயிலுக்கு இந்த வழியாகச் செல்வது வழக்கமாம். அப்போது அவர்கள் ஏந்தி வரும் விளக்குகள் இந்த இடம் அருகே வரும்போது திடீரென அணைந்து விடுமாம். இதைத் தாண்டிச் சென்றதும் பின்பு தானாக எரிய ஆரம்பிக்குமாம். இதற்கான காரணத்தை அறிவதற்காக அரசன் இந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது அங்கே ஒரு லிங்கம் இருக்கக் கண்டான்.

தோண்டும்போது லிங்கத்தின் தலையில் அடி விழ அங்கே இரத்தம் கசிய ஆரம்பித்ததாம்.  பயந்து போன அரசன்  லிங்கத்தை அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய ஆரம்பித்தானாம். தானாக விளக்குத் திரி அணைந்து நின்றதால் இது முதலில் 'திரி நின்றவூர்' என்று அழைக்கப்பட்டதாம். பிறகு மகாலட்சுமி வந்து வழிபட்டவுடன் 'திருநின்றியூர்' ஆயிற்று.  இந்தத் தலத்து இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தி. ஈசனின் லிங்க வடிவத்தின் உச்சியில் இன்றும் தோண்டும்போது ஏற்பட்ட அடியால் ஏற்பட்ட  தழும்பைப் பார்க்கலாம். இந்தக் கோயிலில் த்வஜஸ்தம்பம் இல்லை. இது ஒரு பாடல் பெற்ற தலமாகும்.

ஒரு சமயம் மகரிஷி ஜமதக்னியின் மனைவி ரேணுகா தேவி ஒரு கந்தர்வனின் அழகை வியந்து பாராட்டியபோது, மிகுந்த கோபத்துடன் தனது புதல்வன் பரசுராமரிடம் ரேணுகா தேவியின் தலையை வெட்டுமாறு கட்டளையிடுகிறார். தந்தையின் கட்டளையை நிறைவேற்ற பரசுராமரும் ரேணுகா தேவியின் தலையை கொய்து விடுகிறார். பிறகு தனது தகப்பனாரிடம் மன்றாடி தாயாரின் உயிரைத் திரும்பப் பெறுகிறார். தனது தாயாரைக் கொன்றதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் தீர, பரசுராமர் இந்தத் தலத்தில் வந்து ஈசனை வழிபட்டு தோஷ விமோசனம் கேட்டு தன்னை மன்னிக்க வேண்டுகிறார். ஈசனும் தந்தைக்கும் மகனுக்கும் தரிசனம் அளித்து பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து பரசுராமரை விடுவிக்கிறார்.  அதனால் இது பிரம்மஹத்தி தோஷ பரிகாரத் தலமாக வழிபடப்படுகிறது.

இங்கே இருக்கும் நவக்கிரஹ சன்னிதியில் சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்த வண்ணம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. இது ஒரு அபூர்வமான அமைப்பாகும்.  ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கோயில் விசேஷமாகக் கூறப்படுகிறது. அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வந்து வழிபட வேண்டிய விசேஷக் கோயிலாக இது விளங்குகிறது. இந்தத் தலத்தில் உள்ள செல்வ விநாயகருக்கு மாதந்தோறும் அனுஷ நட்சத்திரத்தன்று விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.  எண்ணற்ற பக்தர்கள் அந்த பூஜையில் கலந்து கொண்டு கடவுளின் அருளைப் பெறுகிறார்கள்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT