நிசும்பசூதனி அம்பாள் ... 
தீபம்

சோழர்களின் குலதெய்வமான நிசும்பசூதனியை பற்றித் தெரியுமா?

நான்சி மலர்

சோழர்கள் என்றாலே வீரத்திலும், கடல் கடந்து ஆட்சி செய்வதிலும் வல்லவர்கள் என்று நமக்கு தெரியும். அதனால் தான் சோழ சாம்ராஜ்ஜியம் கடாரம், மியான்மர், தாய்லாந்த், கம்போடியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் சோழர்கள் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை அமைத்தார்கள். சோழர்கள் என்று சொன்னது நம் நினைவிற்கு வரும் சில முக்கியமான மன்னர்கள், விஜயாலயன், கரிகாலன், ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் நினைவிற்கு வருவார்கள். சோழர்கள் எந்த போருக்கு சென்றாலும் வெற்றியோடு தான் திரும்பி வருவார்கள். இப்படி இவர்கள் வெற்றிக்கு காரணம் ஒரு பெண் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.

அந்த பெண் வேறு யாருமேயில்லை சோழ மன்னர்கள் கும்பிட்ட அவர்களின் குலதெய்வமான நிசும்பசூதனி என்னும் அம்பாள் ஆவாள். அதுமட்டுமில்லாமல் 1200 வருடங்களாக அந்த கோவில் இன்னமும் தஞ்சாவூரில் இருக்கிறது.

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற அரகர்கள் அரசர்களாக ஆட்சி செய்துக் கொண்டு வந்தார்கள். அவர்கள் தேவர்களையும், ரிஷிகளையும், மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் இவர்கள் துர்கை அம்மனிடம் சென்று முறையிட்டனர். அம்மன் உக்ரரூபம் எடுத்து சும்பன், அசும்பனை அழித்ததால் அம்பிகைக்கு நிசும்பசூதனி என்ற பெயர் வந்தது.

நிசும்பசூதனிதான் சோழர்களின் குலதெய்வம் என்று சொல்ல ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டால், இருக்கிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இதனை உறுதி செய்கிறது. சும்பன், நிசும்பனை அழித்த நிசும்பசூதனிக்கு சோழர்கள் கோவில் எழுப்பி வழிப்பட்டனர் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன. தேவர்கள் தொழும் பாதங்களை உடைய தேவியை பூசித்து நான்கு கடல்களை ஆடையாக அணிந்து ஒளி வீசிடும் பூமியை சுலபமாக ஆண்டான் சோழன் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.

கி.பி 850ல் உறையூரில் சிற்றரசனாக பதவியேற்ற விஜயாலய சோழன் பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி தலைநகரை பழையாறையில் இருந்து தஞ்சைக்கு மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசுபசூதினிக்கு கோவில் அமைத்தார். எப்போதும் தனக்கு வெற்றியை வழங்க வேண்டும் என்று வேண்டியதும் அன்னை தோன்றி வரமளித்தார் என்று வரலாறு கூறுகிறது. அதன் பிறகு சோழநாட்டை காவல்புரிய எட்டுத்திக்கிலும் அட்டக்காளிகளை பிரதிஷ்டை செய்தார்.

சோழர்கள் நிசும்பசூதனியை வழிப்பட்ட பிறகே ஒவ்வொரு போருக்கும் செல்வார். பின் சோழர்கள் திருப்புயம்பூரில் பாண்டியர்கள் பல்லவர்களை வெற்றிக்கொண்டு சோழர்கள் பேரரசு நிர்மாணம் செய்யப்பட்டது. பின்பு வந்த அனைத்து சோழ மன்னனும் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் அம்பாளை வழிப்பட்ட பிறகே போருக்கு சென்று வெற்றியோடு திரும்பினர். இப்படி தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி அம்மனை சோழர்கள் குலதெய்வமாக வணங்கினர். அவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வமும் ஆனாள்.

1200 வருடம் பழமையான இந்த கோவில் தஞ்சாவூரில் கீழவாசலில் இருக்கும் பூமால் ராவுத்தர் கோவில் தெருவில் தான் அமைந்துள்ளது. இன்றைக்கும் நிசும்பசூதனி அம்மன் சிலை பொலிவு மாறாமல் காணப்படுகிறது. இந்த சிலை ஆறடி உயரத்திற்கும் மேல் இருக்கும். இந்த கோவிலின் இன்னொரு பெயர் வடபத்திரக்காளியம்மன். தஞ்சை செல்லும்போது கண்டிப்பாக இந்த கோவிலுக்கும் சென்று நிசும்பசூதனியை வழிபட்டுவிட்டு வாருங்கள். சோழர்களுக்கு எப்படி வெற்றியை வாரி வழங்கினாளோ அதேபோல நமக்கும் கட்டாயம் வெற்றியை தருவாள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT