கோபுர தரிசனம்... 
தீபம்

கோபுர தரிசனத்திற்கும் கும்பாபிஷேகத்திற்கும் உள்ள தொடர்பு பற்றித் தெரியுமா?

கல்கி டெஸ்க்

-ம. வசந்தி

கோவில் என்று சொல்லும்போது முதலில் நினைவுக்கு வருவது கோபுரம், ஸ்தூபி என்ற கலசம். கோவில் அமைக்கும்போது கட்டட சிற்ப கலையில் திறமை மிக்க ஸ்தபதிகளின் ஆலோசனைகளுடன் விதிமுறைகளுக்கு இணங்க கோவில் அமைக்கப்படுகின்றது. ஒரு கோவில் முறைப்படி அமைவது விக்கிரகங்கள் சாமுத்திரிகா லட்சணப்படி (அந்தி லட்சணம்) அமைவதுமே ஆலயத்தின் அருளைக் கூட்டி அடியார்களுக்கு நன்மை செய்கின்றது என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.

அப்படி அமையும் "கோபுர தரிசனம் பாப விமோசனம்" என்ற சிறப்பு பெருமையை அடைகிறது. ஆலயத்திற்குள் சென்று தரிசனம் செய்ய இயலாதவர்கள் ஆலய கோபுரத்தை பார்த்து வணங்கி வழிபட்டு ஆலயத்திற்குள்ளே இருக்கும் இறைவனை வழிபட்ட மன திருப்தியையும் இன்பத்தையும் அடைகிறார்கள். ஆலயத்திற்கு உள்ளே செல்லும் அடியார்களுக்கும் அந்த கோபுரத்தை கடந்து செல்லும்போது அவர்களை புனிதப்படுத்தி தயார் செய்யும் பணியை கோபுரம் ஏற்றுக்கொள்கிறது.

ஆலயம் கட்டி குடமுழுக்கு செய்யும்போது கோபுரங்கள், மூலஸ்தானத்திற்கு மேல் இருக்கும் ஸ்தூபிகள், உள்ளே இருக்கும் இறைவனின் உருவங்கள் ஆகிய எல்லாவற்றிற்கும் சமகாலத்தில் ஒரே நேரத்தில் குடமுழுக்கு என்ற கும்பாபிஷேகம் நடப்பதை அனைவரும் அறிவார்கள்.

இலங்கையிலே கோவில்களில் செய்வதுபோல் இந்தியாவில் ஒன்றுக்கு பின் ஒன்றாக செய்வதில்லை. ஏனெனில் ஆலயத்தில் உள்ள அத்தனை மூர்த்திகள் அவர்கள் சன்னதிகளுக்கு மேல் உள்ள ஸ்தூபிகள், விமானங்கள், கோபுரங்கள் யாவற்றிலும் ஒரே சமயத்தில் மூர்த்திகளின் சக்தியை செலுத்தவேண்டும் என்பதாகும். 

ஆகையால் சந்நிதிகளில் மூர்த்தியை தரிசனம் செய்யும்போது விண் நோக்கி உள்ள தூபங்கள், விமானங்கள், கோபுரங்கள் இவற்றை தரிசிக்கும் போதும் ஒரே பலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை பரப்பவே இந்த சடங்கு நடத்தப்படுகின்றது.

கோபுரம், விமானம், ஸ்தூபி என்று வரும்போது எந்த மதத்தின் ஆலயத்தை எடுத்துக் கொண்டாலும் அது பள்ளிவாசலாக இருந்தாலும் சரி, மாதா கோவிலாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் ஸ்தூபி கூர்மையாகவே இருக்கும்.

ஸ்தூபி என்பது இருவழி ஆன்டெனாபோல் இயங்குவது. விண்ணில் உள்ள இயற்கையின் சக்திகளின் மூலமாக விண்வெளியில் உள்ள சக்தியையும், அதிர்ச்சி அலைகளையும் கிரகித்து கருவறையில் இருக்கும் கடவுளின் உருவத்திற்கு சக்தி கொடுத்து அந்த சக்தியை வழிபடும் அடியார்க்கு கொடுக்க விமானம், ஸ்தூபம் முதலியன ஏற்பட்டுள்ளன 

அதேபோல் ஒரு பக்தன் ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் போது கோபுரத்தின் அடியில் கடந்து சென்று ஆலய வீதிகளை அடையும்போது கோபுரத்தின் மேல் உள்ள கலசங்கள் மூலஸ்தானத்தில் ஸ்தூபிகள் போல் விண்வெளியில் இருந்து இயற்கையின் சக்திகளை எடுத்து கோபுரத்தின் கீழே உள்ள இடத்தின் மூலமாக அந்த சக்தியை வழிபடச் செல்லும் பக்தனிடையே அனுப்பி அவனை உள்ளே இருக்கும் மூர்த்தியை தரிசிக்கும் மனப்பக்குவத்தையும் ஒருமைப்படுத்தப்பட்ட எண்ணத்தையும் அளிக்கிறது. ஆகவே கோபுரத்தை வணங்கினாலும் கோவிலுக்குள் சென்று கருவறையில் உள்ள மூலவரை வணங்கினாலும் ஒரே பலன்தான் என்பதை உணர்த்துவதற்காகவே கும்பாபிஷேகம் என்ற நடைமுறையை வைத்திருக்கிறார்கள்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT