திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் பத்மநாப சுவாமி கோயில் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். இந்தக் கோயிலுக்கு ஆதிமூலமாக அமைந்த கோயில் ஒன்று உள்ளது. அது கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தின் அனந்தபுரா கிராமத்தில் உள்ள ஒரு ஏரியின் நடுவே அமைந்துள்ளது. ஏரியின் நடுவே அமைந்திருப்பதாலேயே இதற்கு, ‘ஏரிக்கோயில்’ என்று பெயர். இந்த ஏரிக்கோயிலின் வலதுபக்க மூலையில் இருக்கும் ஒரு குகை வழியாக அனந்த பத்மநாப சுவாமி திருவனந்தபுரம் வரை தினமும் சென்று திரும்புவதாக ஐதீகம்.
இந்தக் கோயில் குறித்து புராணக் கதை ஒன்று கூறப்படுகிறது. திவாகர வில்வ மங்கலா எனும் முனிவர் அனந்தபுரா கிராமத்தில் மகாவிஷ்ணுவை தினமும் வழிபட்டு வந்திருக்கிறார். ஒரு நாள் பகவான் சிறுவன் வடிவில் அவர் முன் தோன்றியிருக்கிறார். அந்த சிறுவனின் முகத்தில் இருந்த தெய்வீகக் களையினால் ஈர்க்கப்பட்ட முனிவர் அவனை யார் எனக் கேட்க, அவன் தன்னை யாருமற்ற அனாதை எனக் கூறியிருக்கிறான். இதனால் பரிதாபப்பட்ட முனிவர் அவனை தன்னோடு இருக்கச் சொல்ல, சிறுவன் அதற்கொரு நிபந்தனை விதித்தான். ‘எப்போதாவது நீங்கள் என் மீது கோபம் கொண்டால், உடனே நான் இங்கிருந்து சென்று விடுவேன்’ எனக் கூற, முனிவரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
சில நாட்கள் அந்த சிறுவன் முனிவருக்குத் தொண்டாற்றி வந்தான். நாளடைவில் அவன் தனது குறும்புகளை ஆரம்பித்திருக்கிறான். ஒரு நாள் அவனது சேட்டை எல்லை மீறிப் போக, முனிவர் அவன் மீது கோபித்துக்கொண்டார். சிறுவன் முன்பு கூறியதுபோல, தான் முனிவரிடமிருந்து விடைபெறுவதாகவும், இனி தன்னைப் பார்க்க விரும்பினால் அனந்தன் காட்டில் மட்டுமே பார்க்க முடியும் என்று சொல்லி விட்டு உடனே மறைந்து போனான். அப்போதுதான், அந்த சிறுவன் வேறு யாருமல்ல, அந்தப் பரந்தாமன்தான் என உணர்ந்தார் முனிவர்.
சிறுவன் மறைந்த இடத்தில் ஒரு குகையை பார்க்கிறார் முனிவர். சிறுவனைத் தேடி அந்த குகை வழியே சென்றவர், ஒரு கடற்கரையை ஒட்டி வெளியேறி, கானகம் ஒன்றை அடைகிறார். அங்கு அவர் முன் தோன்றிய அந்த சிறுவன், கண நேரத்தில் ஒரு இலுப்பை மரமாக மாறியிருக்கிறான். அடுத்த நொடி அந்த இலுப்பை மரம் சரிந்து ஆயிரம் தலை கொண்ட சர்ப்பத்தின் மேல் அமர்ந்திருக்கும் மகாவிஷ்ணு வடிவத்தை அடைந்திருக்கிறது. இந்த இடமே தற்போது திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி ஆலயமாக மாறி உள்ளது என்கிறது புராணம்.
அனந்தபுரம் ஏரி நீர் சுவையான ஊற்று தண்ணீரால் சூழ்ந்திருக்கிறது. ஆங்காங்கே பாழடைந்து காணப்படும் சில இடங்கள் இந்தக் கோயிலின் பழைமையைக் கூறுகின்றன. ஸ்ரீகோயில் (கருவறை), நமஸ்கார மண்டபம், திட்டப்பள்ளி, ஜல துர்கா சன்னிதானம் மற்றும் குகையின் நுழைவாயில் ஆகியவை ஏரிக்குள் உள்ளன. நமஸ்கார மண்டபம் கிழக்குப் பக்கப் பாறையோடு ஒரு சிறு பாலத்தால் இணைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவே கோயிலுக்குச் செல்ல வேண்டும். கருவறையின் இரு பக்கமும் மரத்தால் நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட துவாரபாலகர்களைக் காணலாம். அதேபோல, மண்டப விதானத்தில் மரத்தால் செதுக்கப்பட்ட தசாவதாரக் காட்சிகளையும் கண்டு தரிசிக்கலாம்.
ஆதியில் இந்தக் கோயிலின் அசல் சிலைகள் உலோகத்தினாலோ கல்லினாலோ செதுக்கப்படவில்லை. ‘கடு – சர்க்கரை - யோகம்’ எனப்படும் 70 வித மருத்துவக் கலவைப் பொருட்களால் செய்யப்பட்டிருக்கின்றன. 1972ம் வருடம் இவை பஞ்சலோகச் சிலைகளாய் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. இவை காஞ்சி மடத்திலிருந்து பரிசளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது மீண்டும், ‘கடு –சர்க்கரை - யோகம்’ கொண்டு செய்யப்பட்ட சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில் மகாவிஷ்ணு, ஐந்து தலை கொண்ட அனந்த பகவான் மேல் அமர்ந்திருப்பது போன்ற மூலவர் சிலை வழிபடப்பட்டு வருகிறது!