Thiruvannamalai and siddhas mystery Image Credits: Maalaimalar
தீபம்

திருவண்ணாமலையில் சித்தர்கள் அதிகமாக இருப்பதற்க்கான காரணம் தெரியுமா?

நான்சி மலர்

காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி. ஆனால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை நினைத்தாலே முக்தி. பஞ்சபூதத்தில் இது அக்னி ஸ்தலம், அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம், கார்த்திகை தீபத்திற்கு மூலஸ்தலம். சிவபெருமானே மலையாக காட்சியளிக்கும் தலம். பிரம்மா, விஷ்ணு ஆணவம் அழிந்த ஸ்தலம், சித்தர்களின் புனித ஸ்தலம். அதுவே திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருத்தலம்.

எத்தனையோ சிவஸ்தலம் இருப்பினும் சித்தர்கள் ஏன் திருவண்ணாமலையை தவம் செய்யவும், ஜீவசமாதி அடையவும் தேர்ந்தெடுக்கிறார்கள்.  திருவண்ணாமலை என்ற பெயரை கேட்டதுமே ஒரு ஆன்மீக ஈர்ப்பு ஏற்படும். இது ஆன்மீக பூமியாக இருப்பது மட்டுமில்லாமல் சித்தர்கள் பூமியாகவும் இருந்து வருகிறது. இந்த மலை எப்போது தோன்றியது  என்று யாருக்குமே தெரியாது.

பிரபஞ்சம் தோன்றியதில் இருந்தே இந்த மலை இருப்பதாகவும், இந்த மலை ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு விதமாக காட்சி தருவதாகவும் சொல்லப்படுகிறது. க்ரித யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகாவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது.

ஒருமுறை பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை வந்தது. இதை சிவனிடம் கூற, சிவனோ என்னுடைய அடிமுடியை யார் முதலில் பார்த்துட்டு வருகிறீர்களோ?அவரே உயர்ந்தவர்கள் என்று சொல்லிவிட்டு தீப்பிழம்பாக காட்சி  தருகிறார். விஷ்ணு பகவான் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்துக் கொண்டு செல்கிறார். பிரம்மன் அன்னப்பறவையாக மாறி பறந்துச் செல்கிறார். விஷ்ணுவால் சிவனின் அடியை பார்க்க முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக் கொள்கிறார். ஆனால் பிரம்மதேவனோ தாழம்பூவை பொய் சாட்சி சொல்ல அழைத்து வருகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் பிரம்மாவிற்கு கோவில்களே இருக்காது என்றும், தாழம்பூவை பூஜைகளுக்கு பயன்படுத்த மாட்டார்கள் என்றும் சாபம் விடுகிறார்.

தாழம்பூ பொய் கூறியதால், சிவபெருமான் கடும்கோபம் கொண்டு அக்னி பிழம்பாய் மாறினார். தேவர்கள் அனைவரும் சிவபெருமானை அமைதியாகும்படி வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்று மலையாக உருமாறி அடங்கினார். அதன் மீது அக்னி பிழம்பாய் காட்சித்தந்தார். அந்த நாளே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

‘அண்ணுதல்’ என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணாமலை என்பதற்கு நெருங்கவே முடியாத என்ற பொருளை தருகிறது. பிரம்மாவாலும், விஷ்ணுவாலும் சிவனின் அடியையும், முடியையும் நெருங்கவே முடியாததால் ‘அண்ணாமலை’ என்ற பெயர் பெற்றது. ‘அருணம்’ என்றால் சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு, ‘சலம்’ என்றால் மலையை குறிக்கும். சிவபெருமான் சிவப்பு  நிறத்தில் எரியும் நெருப்பு மலையாக இருப்பதால் சிவபெருமானுக்கு ‘அருணாச்சலேஸ்வரர்’ என்ற பெயர் வந்தது.

இந்த மலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். அதனால் இந்த மலை ‘காந்தமலை’ என்றும் அழைக்கப்படுகிறது. பதினான்கு சுற்றளவு தூரம் கொண்ட இந்த மலையில் ஏராளமான சித்தக்களின் ஜீவசமாதி அமைந்துள்ளன.

இறைவன் எங்கே குடியிருக்கிறாரோ அங்கேதான் சித்தர்களும் இருப்பார்கள். சித்தர்களுக்கு எல்லாம் தலையாய சித்தர் அந்த சிவபெருமானே! அதனால்தான் காலகாலமாக சிவபெருமானுக்கு நாம் பெரிதும் போற்றும் 18 சித்தர்களும், அவர்களுக்கு பக்கபலமாக 188 சித்தர்களும் அரூபமாக இன்றும் இருக்கிறார்கள். இது தான் சித்தர்கள் திருவண்ணாமலையில் இருப்பதற்கான ஆன்மீகக் காரணம் ஆகும்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT