Do you know where Korakkar Siddhar Jeeva Samadhi is? https://easanaithedi.in
தீபம்

பிணி, தோஷம் போக்கும் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி எங்குள்ளது தெரியுமா?

சேலம் சுபா

சித்தர் வழிபாடு ஆதிகாலத்தில் இருந்தே நம்மிடையே இருந்து வருகிறது. அந்த வகையில், நாகப்பட்டினத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கு பொய்கைநல்லூரில், உள்ளழ கோரக்க சித்தர் ஜீவசமாதி. நம்பிக்கையுடன் இங்கு நாள்தோறும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சித்தரின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். கோரக்க சித்தரின் அவதாரம் வெகு சுவாரஸ்யமானது.

கொல்லிமலையில் தவமிருந்த சித்தர் மச்சேந்திரர், பொதிகைமலை செல்ல  அங்கிருந்து தென்திசை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். வழியில் சம்பல்பட்டி என்ற  ஊரில் தாகம் எடுக்கவே அங்கிருந்த ஒரு இல்லத்துக்குச் சென்று குரல் கொடுத்தார்.

அச்சமயம் அவ்வீட்டின் இல்லத்தரசி மட்டுமே வீட்டில் இருந்தார். வந்திருப்பவர் ஒரு சிவனடியார் என்பதால் நீர் கேட்ட அவரை அன்புடன் உணவளித்து பசியும் தாகமும் தீர்த்து வணங்கினார். உபசரிப்பில் மகிழ்ந்த சித்தர், அப்பெண்ணின் முகத்தில் இருந்த மழலை அற்ற ஏக்கத்தைத் தெரிந்து, தனது இடையில் இருந்த திருநீற்றை எடுத்த மச்சேந்திரர் அதை ஒரு பச்சிலையில் வைத்து,  “அம்மையே கணவனுடன் நீராடி சிவ தியானம் செய்து இந்த கவசத் திருநீற்றினை இருவரும் அணிந்து தூய நீரில் இட்டுப் பருகுங்கள். பரம ஞானி ஒருவன் உங்களுக்கு மகவாக பிறந்து கவலை நீங்கும்" என்று ஆசீர்வதித்து பொதிகை மலை நோக்கிச் சென்றார்.

தீட்சிதரின் மனைவி நீராடுவதற்கு சென்ற இடத்தில் உடன் வந்த பெண்களிடம் சிவனடியார் கொடுத்த கவசத் திருநீறு பற்றிய விஷயத்தைக் கூற, அதைக்கேட்ட அந்தப் பெண்கள், "கண்டவன் தரும் திருநீற்றை அணியாதே" என்று எச்சரிக்க, அப்பெண் பயந்து எரியும் அடுப்பில் மச்சேந்திரர் கொடுத்த அந்தத் திருநீறைப் போட்டு விடுகிறார்.

பத்து ஆண்டுகள் கழித்து பொதிகை மலையில் தவம் செய்து சித்திகள் பெற்ற மச்சேந்திரர் மீண்டும் சம்பல்பட்டி வழியாக கொல்லிமலை நோக்கி பயணம் செய்கிறார். அப்போது ஒரு பெண்ணின் வீட்டில் உணவு உண்டது அவருக்கு நினைவுக்கு வர அவரது இல்லம் சென்று, "அம்மா என் அருளால் உனக்கு வாய்த்த உன் மகன் நலமாக இருக்கிறானா?" எனக் கேட்கிறார். அவரை அடையாளம் கண்டு கொண்ட அப்பெண் வருத்தத்துடன் அவர் கொடுத்த திருநீற்றை அச்சம் காரணமாக அடுப்பு நெருப்பில் இட்டதைக் கூறி மன்னிப்பு வேண்டுகிறார்.

அப்பெண்ணின் அறியாமையை உணர்ந்த மச்சேந்திரர், அடுப்பு சாம்பலை கொட்டும் இடத்துக்கு அந்த அம்மையாருடன் சென்று குப்பை மேட்டை நோக்கி "கோரக்கா வெளியே வா" என்கிறார். "இதோ வருகிறேன் குருநாதரே" என்ற குரலுடன் 10 வயது தோற்றத்துடன் பாலகன் ஒருவன் முகப்பொலிவுடன் விபூதி மணக்க வெளியே வருவதைக் கண்டு அம்மையார் ஆனந்த கண்ணீர் வடிக்க, கூடியிருந்த மக்கள் வியந்து மச்சேந்திரரின் காலில் விழுந்து வணங்குகின்றனர்.

"இதோ உன் தாயை வணங்கு கோரக்கா. சிவன் அருளால் என்னிடம் சித்துக்கள் பயின்று உனது பெற்றோர் வியக்கும் சித்தனாக நீண்ட காலம் சிவத்தொண்டு புரிவாய்" என ஆசீர்வதிக்கிறார். இதுவே கோரக்கரின் வரலாறாக சொல்லப்படுகிறது.

கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் கோரக்கரின் ஜீவசமாதியின் உள்ளே நுழையும்போது, ‘ஓம்’ எனும்  மந்திரம் நம் காதுகளில் விழுந்து பக்தியில் மூழ்க வைக்கிறது. அழகான கருவறை. அதன் உள்ளே இருக்கும் அந்த நிலவறையில்தான் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி நிலையில் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். நீண்ட நாள் பிணி, தோஷங்களை அகற்றி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களையும் அளித்து அருள்பாலிக்கிறார்.

இந்த ஜீவசமாதியின் மேல் இறைவன், இறைவி பாதக்கமலங்களை பதித்துச் சென்றார்கள் என்பது நம்பிக்கை. அந்தத் திருவடிக் கமலங்களுக்கு ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இதனால் இங்கு தரிசனம் செய்கின்றபோது ஒரே நேரத்தில் இறைவன், இறைவி, சித்தர் ஆகியோரை தரிசிக்கும் பேறு கிடைக்கிறது.  நாள்தோறும் மூன்று கால பூஜைகள் மற்றும் மாதந்தோறும் பௌர்ணமியின்போது சித்தருக்கு விசேஷ பூஜை, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

கோரக்க சித்தர் வாழ்ந்த காலத்தில் நிறைய அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். ‘பசித்திருக்கும் வயிறு நோய்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் இடம் கொடுக்கும்’ என்று கோரக்கர் எழுதி வைத்திருப்பதற்கேற்ப இங்கு அன்னதானம் மிகப்பெரிய அளவில்  நடைபெறுகிறது. அன்னதானத்திற்காக மக்கள் தங்களால் இயன்ற பொருள்களை காணிக்கையாக அளிக்கின்றனர். நாமும் கோரக்கர் சித்தரை வணங்கி நன்மைகளைப் பெறுவோம்.

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

SCROLL FOR NEXT