பீமன் கட்டிய மத்மகேஸ்வர் சிவன் கோயில் 
தீபம்

தொப்புள் வடிவில் பீமன் கட்டிய சிவன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

த்தரகண்ட் மாநிலத்தின் இமயமலைப் பகுதியில் கர்வால் மாவட்டத்தில் 3497 மீட்டர் (11,473 அடி) உயரத்தில் மன்சூனா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது மத்மகேஸ்வர் சிவன் கோயில். இக்கோயில் சௌகந்தா, நீலகண்டம் மற்றும் கேதார்நாத் மலைகளின் பனி சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. மத்மகேஸ்வர் கோயில் ஒரு உயரமான மேடுக்கு கீழே பசுமையான புல்வெளியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கருங்கல்லில் தொப்புள் வடிவிலான சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு மேலும் இரண்டு சிறிய சன்னிதிகளும் உள்ளன. ஒன்று பார்வதி தேவிக்கும், மற்றொன்று அர்த்தநாரீஸ்வரருக்கும் என இரண்டு சிறு சன்னிதிகள் உள்ளன.

பிரதான கோயிலின் வலது புறம் ஒரு சிறிய கோயில் உள்ளது. இங்கு பளிங்குக் கற்களால் ஆன சரஸ்வதி தேவி சிலை உள்ளது. இங்குள்ள அர்ச்சகர்கள் கர்நாடக மாநிலத்தின் மைசூரில் இருந்து வந்த வீர சைவ ஜங்கமாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இக்கோயில் ஐந்து கேதாரத் தலங்களில் நான்காவதாகும். மற்ற நான்கு கேதாரத் தலங்கள் துங்கநாத், கல்பேஸ்வர், ருத்ரநாத், கேதார்நாத்.

சிவனின் நடுப்பகுதி அதாவது வயிற்றுப் பகுதி அல்லது தொப்புள் பகுதியே (நாபி) இங்கு வழிபடப்படுகிறது. நந்தியே இந்த இடத்தில் சிவபெருமானாக காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலை பாண்டவர்கள் கட்டியதாகவும் பஞ்ச கேதாரத் தலங்களை சுற்றி வர 170 கிலோ மீட்டர்களும் 16 நாட்களும் ஆகும். கோடைக் காலத்தில் மட்டுமே இக்கோயில் திறந்திருக்கும். குளிர்காலத்தில் மூலவர் சிவலிங்கத்தை உக்கிமத் என்னும் இடத்தில் வைத்து பூஜை செய்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில் இது. குருக்ஷேத்திரப் போரில் கௌரவர்களையும், பிராமணர்களையும் கொன்ற பாவத்தைப் போக்க பாண்டவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலோசனையின் பேரில் சிவபெருமானிடம் மன்னிப்புப் பெற இங்கு சென்றனர். குருக்ஷேத்திரப் போரில் சிவபெருமான் பாண்டவர்கள் மீது கோபமடைந்ததால் அவர் பாண்டவர்களை சந்திக்க விரும்பவில்லை. இதன் காரணமாக ஒரு காளையின் வடிவம் எடுத்து இமயமலை கர்வால் பகுதியில் ஒளிந்து கொண்டார் ஈசன். ஆனால், பாண்டவர்களும் தங்கள் பிடிவாதத்தில் உறுதியாக இருந்தனர். அவர்கள் கேதார்நாத்திற்கு அவரை பின்தொடர்ந்தனர். சிவபெருமான் அவர்களது உறுதியைக் கண்டு மகிழ்ந்து அவர்களுக்குக் காட்சியளித்தார்.

பஞ்ச கேதாரத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களில் ஈசன் தோன்றினார். சிவபெருமானின் கரங்கள் துங்கநாத்திலும், வாய் ருத்ரநாத்திலும், வயிற்றுப் பகுதி மத்மகேஸ்வரிலும், ஜடாமுடி கல்பேஸ்வரிலும், கேதார்நாத்தில் முதுகுப் பகுதியும் சேர்த்து, ‘பஞ்ச கேதார்’ என்று அழைக்கப்படுகிறது. பஞ்ச கேதாரில் மத்மகேஸ்வரும், ருத்ரநாத் கோயிலும் தரிசிக்க மிகவும் கடினமான தலங்களாகும். செங்குத்தான மலைப் பாதைகளில் நடந்தோ குதிரையிலோ செல்ல வேண்டும்.

பாண்டவர்களில் இரண்டாவதாகப் பிறந்த பீமன் மத்மகேஸ்வரர் கோயிலைக் கட்டி இங்கு சிவபெருமானை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. பஞ்சபாண்டவர்கள் பஞ்ச கேதார் கோயில்களை கட்டி வழிபட்ட பிறகு முக்திக்காக கேதார்நாத்தில் தியானம் செய்தனர். பின்னர் மகாபந்த் என்ற சொர்க்கப்பாதை வழியாக சொர்க்கம் அதாவது முக்தி அடைந்தனர்.

ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை (ஏப்ரல் - மே) மற்றும் கார்த்திகை பூர்ணிமா (நவம்பர்) அன்று இக்கோயில் திறக்கப்படும். மலையேற முடியாதவர்களுக்கு டோலிகள், குதிரைகள் உள்ளன. மத்மகேஸ்வர் கோயிலுக்குச் செல்ல சிறந்த நேரம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலாகும். அருகிலுள்ள விமான நிலையம் ஜாலி கிராண்ட். இங்கிருந்து பேருந்து அல்லது டாக்ஸி மூலம் உகிமத் மற்றும் ரான்சி கிராமத்தை அடையலாம். ரயில் நிலையம் ஹரித்வார். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து உகிமத்துக்கு நேரடி பேருந்துகள் உள்ளன.

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

SCROLL FOR NEXT