தீபம்

அடுத்த பிறவி வேண்டாமா?அப்படியென்றால் இந்தக் கோயிலுக்கு போய் வாங்க…

எம்.கோதண்டபாணி

‘இந்தப் பிறவியே போதும்டா சாமி… இனி, இந்த பூமியில் பிறக்கவே கூடாது’ என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் ஒரு முறை காஞ்சிபுரம் கயிலாசநாதர் கோயிலுக்குப் போய்விட்டு வாருங்கள். காஞ்சிபுரம் என்றவுடனே பெரும்பாலும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஒன்று பட்டுப் புடைவை, அடுத்தது காமாட்சி அம்மன், இன்னொன்று வரதராஜர்தான். நிறைய பேருக்கு காஞ்சிபுரத்தில் கயிலாசநாதர் கோயில் என்று ஒன்று இருப்பதே தெரியாது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கயிலாசநாதர் சிவன் கோயில். இந்தக் கோயிலுக்கு நடந்தும் செல்லலாம் அல்லது ஷேர் ஆட்டோ வசதி கூட உண்டு.

ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ராஜசிம்மன் என்ற பல்லவ மன்னன்தான் இந்தக் கோயிலைக் கட்ட ஆரம்பித்தான். ஆனால், இந்தக் கோயில் அவனது மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால்தான் கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கோயிலுக்கு உண்டான பெரிய சிறப்பு என்ன தெரியுமா? தஞ்சை பெரியக் கோயிலை ராஜராஜ சோழன் கட்டுவதற்கு முன்னுதாரணமாக இருந்தது இந்த கயிலாசநாதர் கோயில்தான் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். இந்தக் கோயிலைச் சுற்றி ஏராளமான சிறு சிறு சன்னிதிகள் அமைக்கப்பட்டு, அவற்றில் பல தெய்வ மூர்த்தங்கள் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இந்த சிறு சிறு சன்னிதிகள், ‘பிண்டி மண்’ எனப்படும் ஒருவகை மணல் கொண்டு அமைக்கப்பட்டிருப்பது இந்தக் கோயிலின் சிறப்பு. இதில் ஆச்சரியப்படும் தகவல் என்னவென்றால், இந்த வகை மணல் காஞ்சிபுரத்திலோ அல்லது அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலோ எங்கும் காணப்படுவதில்லை என்பதுதான். ஆந்திர மாநிலத்தில் இருந்து இந்த வகை மணலைக் கொண்டு வந்து இந்த சன்னிதிகளை பல்லவர்கள் அமைத்திருக்கலாம் என்று தொல்லியல் துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

ரி, இனி விஷயத்துக்கு வருவோம். இந்தக் கோயில் கருவறையில் சிவபெருமான் பதினாறு பட்டைகள் கொண்ட லிங்க சொரூபராகக் காட்சி தருகிறார். இந்தக் கருவறை மூலவரை வலம் வர ஒரு பாதாள பிராகாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள பிராகாரத்தில் நுழைந்து வலம் வர வேண்டுமானால் உடலைக் குறுக்கி, தவழ்ந்துதான் உள்ளே செல்ல வேண்டும். உள்ளே சென்றால் சில படிகள் உண்டு. பிறகு கருவறையை நடந்து வலம் வருவதற்கு பாதை உண்டு. கருவறை வலத்துக்குப் பிறகு மீண்டும் அதேபோல் சில படிகள் மேலே ஏறி வந்து மீண்டும் உடலைக் குறுக்கி, தவழ்ந்துதான் வெளியே வர வேண்டும்.

இப்படிச் செய்யப்படும் இந்தப் பிராகார வலம், தாயின் கருவறையில் இருந்து ஒருவர் மீண்டும் இந்த பூமியில் பிறந்து வருவதற்கு ஒப்பாகக் கூறப்படுகிறது. தவிர, இந்தப் பிராகார வலத்தினால் இனி, இந்த பூமியில் பிறந்து, உலகத் துன்பச் சுழல்களில் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் உணர்த்தப்படுகிறது. அதாவது இனி அவருக்கு உயிர் பிறப்பில்லை என்பதுதான். கயிலை என்பது சிவனார் உறையும் பதியன்றோ. அதனால்தான் சித்தர்களும் முனிவர்களும், ‘பிறப்பொன்று இனி வேண்டாம், பிறப்பறுக்கும் ஈசன் திருவடிப் பதங்களே போதும்’ என்று காலம் காலமாக தவமியற்றுகின்றனர். ஆகையால்தான் இந்தத் தலமும், ‘தென் கயிலாயம்’ என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT