ஏகலிங்க நாதர் கோவில்... 
தீபம்

நான்கு முகங்களுடன் காட்சி தரும் ஏகலிங்கநாதர்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

தய்பூர் வடக்கே சுமார் 23 கி.மீ.‌தூரத்தில் கைலாஷ்புரி எனும் கிராமத்தில் அமைந்துள்ள கோவில் இது. மேவார் மகாராணாக்களுக்கு சொந்தமானது.

1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில். 500 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. இங்கு நான்கு முகங்கள் கொண்ட கருப்பு பளிங்கு சிலையால் ஆன சிவலிங்கம் கோவிலின் கருவறையில் அமைந்துள்ளது.

ஈசன் மேற்கில் பிரம்மாவாகவும், வடக்கில் திருமாலாகவும், கிழக்கில் சூரியன், தெற்கில் ருத்ரன் என நான்கு முகங்களுடன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். நான்கு முகங்களுக்கு முன்னால் நான்கு வாயில்கள் உள்ளன.

இக்கோவிலில் இரண்டு அடுக்கு மண்டபம் உள்ளது. இக்கோவில் 50 அடி உயரமும் 60 அடி சுற்றளவும் கொண்டது.

பல பளிங்கு கல் கோபுரங்களால் ஆன கோவில் இது. மிகப்பெரிய கோவில் இது. 

இங்கு பார்வதிக்கு தனி சன்னதியும், கணேசர், கங்கை, கார்த்திகேயன், யமுனா, சரஸ்வதி, காளி மாதா, அம்பா மாதா, கல்கா மாதா என பல சந்நிதிகள் உள்ளன.

மேவார் வம்சத்து அதீத பக்தி மிக்க அரசரான ஸ்ரீ பாப்பாராவல் இக்கோவிலை கி.பி.734 ல் கட்டினார். பின்னர் வந்த மகாராணக்களால் இக்கோவில் விரிவாக்கப்பட்டுள்ளது. அந்த அரசரின் சிலையும் இக் கோவிலில் உள்ளது. இவர்தான் தலைநகர் நாகதாவில் கோவிலை கட்டியவர். 

ஒரே வெண் பளிங்கு கல்லில் ஐராவதத்தின் மீது இந்திரன், மாவுத்தன், இந்திராணி ஆகியோர் வீற்றிருப்பதுபோல அழகான பளிங்குச்சிலை காணப்படுகிறது.

மூன்று நந்திகள்...

இக்கோவிலில் மூன்று நந்திகள் உள்ளன. வெள்ளி நந்தி, பித்தளை நந்தி, சலவைக் கல்லால் ஆன நந்தி என அழகாக காணப்படுகின்றது.

மிகப்பெரிய கோவிலாக உள்ளது. எங்கும் சலவை கற்களால் கோபுரங்களும் விஸ்தாரமாக இடங்களைக் கொண்டதாகவும் உள்ளது. கோவிலைச் சுற்றி குரங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது.

எட்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து கோவில் பல விரிவாக்கங்களுக்கு உட்பட்டு இன்று ஏகப்பட்ட சன்னதிகளைக் கொண்டுள்ளது. இந்த கோவில் வளாகத்தில் 108 சிறிய கோவில்கள் உள்ளன. இதன் அருகிலேயே 72 அறைகள் கொண்ட ஜெயின் கோவிலும் உள்ளது. இந்த 108 சன்னதிகளும் பளிங்கு கற்கள் மற்றும் மணற் கற்களால் ஆனவை.

இக்கோவிலில் கர்ஸ் குண்ட் மற்றும் துளசி குண்ட் என்ற இரண்டு புனித குளங்கள் உள்ளன.இவற்றிலிருந்து தான் நீர் எடுத்து அபிஷேகம் செய்கின்றனர்.

இங்கு சிவன் மகாராணாக்கள் மூலம் ஆட்சி செய்வதாக கூறப்படுகிறது. இங்கு மகாராணாக்கள் தங்களை மந்திரிகளாகக் கருதி சிவபெருமானை தலைமை பொறுப்பில் உள்ளவராக எண்ணுகிறார்கள். அதாவது மகாராணாக்கள் அமைச்சர்களாகவும் இறைவனை அரசனாகவும் கருதுகின்றனர். 

மகாராணா குடும்பம் இன்று வரை ஏக்லிங்ஜியை தங்கள் குல தெய்வமாக கருதுவதுடன் தங்களின் எல்லா வெற்றிகளுக்கும் ஸ்ரீஏக்லிங்ஜி தான் காரணம் என்றும் கூறுகின்றனர். இன்றும் கூட மேவாரின் வாரிசுகள் ஏகலிங்கரின் அறக்கட்டளை மூலம் பூஜை மற்றும் பராமரிப்பு உரிமைகளை தங்களுக்கே வைத்துள்ளனர்.

கோவில் காலை 4 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு மகா சிவராத்திரி மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. இக்கோலில் கேமராக்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT