வேலூர் அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில். பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தவர் இந்தப் பெருமான். இவரது கோயிலும் கோட்டையும் பொம்மி நாயக்கரால் (கி.பி. 1525 -1545) எழுப்பப்பட்டவை என்கின்றன குறிப்புகள்.
பதினேழாம் நூற்றாண்டின் பீஜப்பூர் சுல்தானின் படையெடுப்பில் கோயில் சேதமுற்றது. பின்னர், தஞ்சை மராட்டிய மன்னர்கள் வலுப்பெற்று, வேலூர் மீட்கப் பெற்று கோயில் வழிபாடுகள் தொடங்கின. அடுத்து முகம்மதியர் – மராட்டியர் என வேலூர் போர்க்களமானது. அப்போது சேதப்படுமோ என்ற அச்சத்தில், கருவறையிலிருந்து சிவலிங்கம் அப்புறப்படுத்தப்பட்டது. கோயிலில் சுவாமி இல்லை.
சில காலம் கழித்து, சத்துவாச்சாரி கிராமக் குளத்தில் புதையுண்டு கிடந்த அந்த சிவலிங்கத்தைக் கண்டெடுத்த கிராம பொதுமக்கள், அருகிலிருந்த கோயிலில், பிரதிஷ்டை செய்தனர்.
ஒருவழியாக அமைதி நிலவியது வேலூரில். ஆனால், கோயிலில் சிவலிங்கம் இல்லாததைக் கண்டு மக்கள் மனம் வருந்தினர்.
கி.பி. 1904ஆம் ஆண்டு முதல் கி.பி. 1981வரை, வேலூர் மக்கள், நகர சபை மற்றும் பல தலைவர்கள், சமயாசாரியர்கள் ஆகியோர் மிகவும் கஷ்டப்பட்டு, கடைசியில் ஜலகண்டேஸ்வரரின் திருமேனியை, வேலூர் கோட்டை கோயிலுக்குள் 1982ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் நாள் பிரதிஷ்டை செய்தார்கள்.
இறைவன்: ஜலகண்டேஸ்வரர்; இறைவி: அகிலாண்டேஸ்வரி, தலமரம்: வேல மரம், தீர்த்தம்: சிவகங்கை
சிவலிங்கம் உருவில் பெரியது. எடை சுமார் 4.5 டன். சிதைவுறாத மேனி. கிழக்கு நோக்கிய மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார் பெருமான்.
உட்புறச் சுவரில் இக்கோயிலை எழுப்பிய பொம்மி நாயக்கர், மனைவியுடன் வணங்கும் நிலையில் காணப்படுகிறார். இடப்புறம் (வெளிச்சுற்றில்) புகழ் பெற்ற திருக்கல்யாண மண்டபம்.
மண்டப முகப்பில் உள்ள ஆறு தூண்களிலும் குதிரை வீரர்கள் கீழேயுள்ள புலியைத் தம் வேலாயுதத்தால் குத்துகிறார்கள். அதற்குக் கீழே அற்புதமான ஆறு சிலைகள். அடுத்தடுத்து 24 தூண்கள். திருமால் அவதாரங்கள். வில்லேந்திய ராமன், நடனமாடும் நங்கையர் என்று ஏராளமான அழகிய சிற்பங்கள். இவற்றை எல்லாம் காண ஒருநாள் போதாது.
இந்த மண்டபத்தையே பெயர்த்து தன் நாட்டுக்கு எடுத்துச் செல்ல அந்தக் காலத்தில் ஓர் ஆங்கிலேய அதிகாரி முயன்றார். அதற்காக, கப்பல் எடுத்துவர ஏற்பாடு செய்தார். அந்தக் கப்பல் நடுக்கடலில் மூழ்கியது என்று கூறுவார்கள்.
தனிச் சன்னிதியில் அன்னை அகிலாண்டேஸ்வரி. நின்ற திருக்கோலம், அன்னை சன்னிதிக்கு முன் மண்டபத்தில் ‘நவசக்தி சத்தியஜோதி’ என்ற அணையா விளக்கு உள்ளது. இந்த விளக்கில் சுற்றிலும் எட்டு ஜோதிகளும் நடுவில் ஒரு ஜோதியும் இருக்கின்றன.
வழிபட வருவோர் நெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் என்று ஏதாவது ஒன்றில் தாமரைத் தண்டின் நூலுடன் வந்து, இவ்விளக்கில் ஊற்றி, பதினாறுமுறை வலம் வந்தால் அவர்களது துயரம் தீரும் என்பது பலரின் நம்பிக்கை.
ஜோதிரூபனாக சிவபெருமான் வெளிப்பட்ட நாளில், அவரது தேவியின் சன்னிதியில் உள்ள, ‘நவசக்தி சத்திய ஜோதி’யை வலம் வந்து வணங்குவது மேலும் பொருத்தமாகவே இருக்கிறது.