மேற்கு உத்தரப் பிரதேசம், முசாபர் நகரிலிருந்து 28 கி.மீ. தொலைவில் சுகர்தல் எனும் தலத்தில் அமைந்துள்ளது சுகர் திருக்கோயில். வியாச பகவானின் மகனான இவர்தான், முதன்முதலில் ஸ்ரீமத் பாகவதத்தை பரீட்சித்து மன்னனுக்குக் கூறியவர்! மன்னன் பரீட்சித்துவுக்கு ஸ்ரீமத் பாகவதத்தை ஒரு குன்றின் மீது உள்ள அட்சய வடம் என்ற மரத்தின் அடியில்தான் கூறினார் சுகர்! அந்தப் புனித மரம் உள்ள இடமே, ‘சுக்ரதல்’ என அழைக்கப்படுகிறது!
ஒரு சமயம் பக்தர்கள் இங்கு கோயில் கட்டத் தொடங்கியபோது, கங்கை, தனது ஓட்டத்தை மாற்றிக்கொண்டு ஓட ஆரம்பித்ததாம். இதனால் கோயில் கட்ட இயலாமல் போய்விடுமோ என அந்த கிராம மக்கள் அனைவரும் கங்கையை வணங்கி வேண்டியதுடன், சிவனிடமும் தாங்கள்தான் கங்கையை பழையபடி ஓடச் செய்ய வேண்டும். அதேசமயம் கங்கா தேவி இங்கு கால்வாய் போல் வந்து, இந்தப் பகுதிக்குப் பாக்கியம் தந்தருள வேண்டும் எனப் பிரார்த்தித்தார்களாம்! அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, கங்கையும் சிவனும் அவர்கள் இஷ்டம் போலவே செயல்பட்டு உதவினார்களாம்! இதனால் இங்கு வருடம் முழுவதும் கங்கை ஓடுகிறது. இதன் கரையில்தான் கங்கைக்கும் சிவனுக்கும் சிறு கோயிலை எழுப்பியுள்ளனர் பக்தர்கள்.
இந்தத் தலத்தில் கார்த்திகை பௌர்ணமி மிகவும் விசேஷம். அதுசமயம் பக்தர்கள் இங்கு கங்கையில் நீராடி, கங்கையையும் - சிவனையும் வழிபடுவதுடன், இங்குள்ள சுகர் ஆசிரமத்துக்கும் சென்று அங்கு உள்ள சுக்தேவ் - பரீட்சித்து கோயிலுக்கும் சென்று வணங்குகின்றனர். சிறிய கோயில்தான் என்றாலும் கீர்த்தி மிகப் பெரியது. கோயிலில் சுகதேவ் - பரீட்சித்து என இருவருமே சலவைக்கல்லில் மிக அழகிய சிலைகளாக உள்ளனர். தரையிலும் சலவைக்கல் பதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோயிலிலுள்ள அட்சய வடத்தைப் பார்த்தாலே அது மிகவும் பழைமையான மரம் என்பதை அறியலாம்! 150 அடி உயரமுள்ள இந்த மரம், ஏராளமான இலைகளுடன், பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து காட்சி தருகிறது. இந்த மரம் பற்றிய ஒரு சிறப்புத் தகவல்! மரத்திலிருந்து இலைகள் உதிருவதே இல்லையாம். மரத்தின் அடிப்பகுதியைச் சுற்றி காவி துணி சுற்றப்பட்டுள்ளது. இதன் அடியில் சென்று பிரார்த்தித்தால் வேண்டும் வேண்டுதல்கள் நிச்சயம் நடக்கும் என்கிறார்கள்!
கோயிலின் வெளிப்பக்கத்தில் பிரம்மாண்ட ஹனுமான் மற்றும் கணபதி சிலைகள் உள்ளன. ஹனுமான் 75 அடி உயரத்தில் மிகவும் கம்பீரமாய்க் காட்சி தருகிறார். ஹனுமானின் வால் மட்டும் 10 அடி நீளம். அடுத்து, கணபதி! இவர் 35 அடி உயரம். சிறிய குன்றின் மீது அமைந்துள்ள இந்தக் கோயிலிலிருந்து சில படிகள் இறங்கிதான் கங்கையில் குளிக்க வேண்டும். கோடைக்காலத்தில் 20 படிகள் வரை கங்கை இறங்கி விடுமாம். இருந்தாலும் தண்ணீர் ஓடுமாம்! கோயிலிலேயே சமையல் அறை உள்ளது. இங்கு சுவையான பதார்த்தங்கள் சாப்பிடக் கிடைக்கின்றன.
இந்தக் கோயில் காலை 6 முதல் இரவு 8 மணி வரை திறந்துள்ளது. டெல்லியிலிருந்து ஹரித்வார் செல்லும்போது, சுமார் 150 கி.மீ. தொலைவில் இந்த ஆலயத்தை தரிசிக்கலாம். மீரட்டிலிருந்தும் இந்தக் கோயிலுக்கு வரலாம்!