ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் வைஷ்ணவி தேவி கோயில் மிகவும் பிரபலமாகும். இக்கோயிலில் துர்கை, மகாலட்சுமி, சரஸ்வதி தேவி ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகே வைஷ்ணவி தேவியை தரிசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகர் மொஹலாய, பிரிட்டிஷ், மராத்தா மற்றும் குஜராத்தை பிரதிபலிக்கும் எண்ணற்ற கோயில்கள், மசூதிகள் மற்றும் ஹவேலிகளைக் கொண்டது. அந்த வகையில் இந்நகரின் காந்தி நகர் நெடுஞ்சாலையில் சர்கேஜ் என்னுமிடத்தில் ஒரு வைஷ்ணோ தேவி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் வைஷ்ணவி தேவி கோயிலைப் போன்றே அமைந்துள்ளது சிறப்பு.
இந்தக் கோயில் மலை மீது மணல் கற்களால் உருவாக்கப்பட்டு வட்ட வடிவில் அமைந்துள்ளது. மலையின் உச்சியில் அமைந்த கோயில் கருவறையில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியர்களும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். சக்தியின் வடிவமான வைஷ்ணவி தேவி கோயிலில் நவராத்திரி ஒன்பது நாட்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் அமைந்த வைஷ்ணவி தேவி கோயில் போன்றே வடிவமைக்கப்பட்டு உள்ளதால் இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். அம்மன் சன்னிதியில் பிரசாதமாக பக்தர்கள் அனைவருக்கும் சிறு வெள்ளி நாணயம் வழங்கப்படுவது சிறப்பு. அதில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அமைதியான சூழலில் அமைந்திருக்கும் இக்கோயிலில் வைஷ்ணவி தேவியின் தரிசனம் பக்தர்களுக்குப் பூரணமாகக் கிடைக்கிறது. இக்கோயிலுக்கு பக்தர்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவிக்கும் அகமதாபாத்தில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவிக்கும் உள்ள ஒரே வேறுபாடு என்னவென்றால் அங்கு தரிசனம் செய்ய பல மணி நேரம் தேவைப்படும். ஆனால், இங்கு இரண்டே மணி நேரத்தில் அம்பிகையை தரிசனம் செய்து விடலாம். ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயில் போலவே இங்கும் குகை வழியே குனிந்து சென்றுதான் அம்பிகையை தரிசிக்க முடிகிறது. மேலும், பக்தர்கள் இங்கு தேங்காய், பழங்கள், உடைகள், அரிசி போன்றவற்றை வழங்கி வழிபடுகின்றனர். இக்கோயிலில் ஆரத்தி வெகு நேரம் காட்டப்படுவது விசேஷம்.
ஜம்மு காஷ்மீரில் அருளும் வைஷ்ணவி தேவியை தரிசிக்க இயலாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து அம்பிகையை தரிசித்து வழிபடலாம். இக்கோயில் அகமதாபாத் சர்தார் வல்லபாய் விமான நிலையத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலும், ரயில் நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்த ஆலயம் காலை 5 முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கிறது.