தீபம்

களை கட்டும் குலதெய்வ வழிபாடு!

கார்த்திகா வாசுதேவன்

குல தெய்வ வழிபாடு என்பது நம் மக்களிடையே எப்போதுமிருந்து வரும் ஒரு தொன்று தொட்ட வழக்கங்களில் ஒன்று. முன்பெல்லாம் போக்குவரத்து வசதிகள் குறைந்திருந்த காலகட்டங்களில் வருடம் ஒருமுறை மட்டுமே குலதெய்வ வழிபாடு என்பது குடும்பத்தினருக்கு நினைவுக்கு வரும். அப்போதும் கூட பொருளாதாரக் காரணங்களை முன்னிட்டோ அல்லது போக்குவரத்து சிரமங்களை முன்னிட்டோ குடும்பத்தில் எவரேனும் ஒருவரோ, இருவரோ குலதெய்வக் கோயில்களுக்குச் சென்று வருவார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. மக்கள் வருடம் முழுக்க தாங்கள் விரும்பிய போதெல்லாம் குலதெய்வ வழிபாடு செய்து கொள்ளும் அளவுக்கு எல்லா விதங்களிலுமே வசதிகள் பெருகி விட்டன.

குறிப்பிட்டுச் சொல்வதென்றால் இப்பொதெல்லாம் மாசி சிவராத்திரியை முன்னிட்டு தமிழகமெங்கும் பக்தர்கள் தங்கள் குலதெய்வங்களைத் தேடி பக்தியுடன் ஓடுவதைப் பார்க்கையில் குலதெய்வ வழிபாடு எத்தனை அவசியம் என்பதையும் கூட உணர முடிகிறது.

குல தெய்வங்கள் நமது பூர்வீக வாசம் கொண்டவை. எவரொருவர் தங்களது குலதெய்வத்தை அறிந்தவர்களாக இருக்கிறார்களோ, அவர்களால் தங்களது மரபையும், கலாச்சாரத்தையும் எளிதில் அடுத்த தலைமுறைக்கு கடத்த முடிகிறது. ஆனாலும், பல தலைமுறைகளாக குலதெய்வத்தை ஆராதித்து வருபவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். தங்களது குலதெய்வம் எது என்றே தெரியாதவர்களும் கூட நம்மிடையே இருக்கிறார்கள். இதற்கு இன்னது தான் காரணம் என்று புள்ளி குத்த முடியாவிட்டாலும் கூட ஏதோ ஒரு தடங்கல் ஏற்பட்டு ஏதாவது ஒரு தலைமுறையில் குலதெய்வ வழிபாட்டின் கண்ணி ஒருமுறை அறுபட்டால் அதை அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. இது நிகழாமல் தடுக்க வேண்டுமென்றால் முதற்கட்டமாகக் குடும்பத்தின் மூத்த தலைமுறை பெரியவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க வேண்டுமென்பது நமது முதற்கடமையாகிறது.

ஏனெனில் மூத்த தலைமுறையினர் மூலமாக மட்டுமே நாம் நம் குலதெய்வங்களைப் பற்றிப் பூரணமாக அறிந்து கொள்ள முடியும்.

தொன்ம ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி குல தெய்வங்கள் என்பவை நமது குலத்தில் முன்னொரு காலத்தில் வாழ்ந்து மறைந்த மூதாதையர்களே! ஏதோ ஒரு தலைமுறையில் அவர்கள் தங்களது தலைவனுக்காக போரில் வீர மரணம் அடைந்திருக்கலாம், அல்லது அந்நியர் ஆதிக்க காலத்தில் குலத்தைக் காக்கவென்றே பரிதாபமாக உயிரிழந்திருக்கலாம். சிலர் கற்பின் மாண்பை உலகுக்கு உணர்த்தவென பத்மாவத் திரைப்படத்தில் வருவதைப்போல தீப்பாய்ந்து மாண்டிருக்கலாம்.பக்தி இயக்க காலத்தில் தங்கள் இன்னுயிரெனக் கருதும் அரசர்களுக்காக நவகண்டம் கொடுத்து உயிரிழந்தோர் பலர் உண்டு அவர்கள் அத்தனை பேருக்கும் நடுகற்கள் வைத்து அரசர்களே கூட அவர்களை வணங்கினார்கள் என்பதற்கு ராஜராஜ சோழன் காலத்தைய கல்வெட்டு ஆதாரங்கள் கூட உள்ளன.

சில குலதெய்வங்கள் குழந்தை வடிவம் கொண்டவை. சிறு பிராயத்தில் அம்மை நோயிலோ இறக்க நேரும் குழந்தைகள் அல்லது ஆற்று வெள்ளம், தீ விபத்தில் சிக்கி இறக்கும் குழந்தைகள் போன்றோர் அக்காலத்தில் குல தெய்வமாக வணங்கப்பட்டனர்.

இதை எல்லாம் தங்களது கடமையாக மூத்த தலைமுறையினர் தொடர்ந்து செய்து வந்து அடுத்த தலைமுறைக்கு கடத்த முனைந்தனர்.

நவீன யுக ஆரம்பத்தில் சிலர் இதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கி அலட்சியப்படுத்த முனைந்தாலும் கூட குலதெய்வம் தனது இருப்பை இன்னொரொன்ன காரணங்களால் வெளிப்படுத்த தயங்கியதில்லை என பக்தித் திரைப்படங்களில் நாம் கண்டிருக்கலாம். அது எத்தனை சதவிகிதம் உண்மையோ, பொய்யோ?! ஆனால், இப்போதும் கூட கல் இடறும் போதும், கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற் போலான மனநிலையில் நாம் இருக்கும் போதும் உடனடியாக எந்த தெய்வத்தை நினைக்க வேண்டுமென்றால் ? குலதெய்வத்தையே என்கிறார்கள் பெரியவர்கள்.

அதற்காக மற்ற பிரதான தெய்வங்கள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும் என்பதல்ல அவர்களது வாக்கு. பிரதான தெய்வங்கள் என்பவை எல்லோருக்கும் பொதுவானவை. குலதெய்வங்களே ஒவ்வொரு குலத்துக்கும் என பிரத்யேகமாக வணங்கப்படுபவை. அவற்றின் முதல் அருட்கிரணம் அந்தக் குலத்தைச் சார்ந்த எவரொருவரையும் உடனடியாக வந்து அடையும்.

மூக்குத்தி அம்மன் என்றொரு திரைப்படம் வந்ததே நினைவிருக்கிறதா? திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டிக் கொண்டு வருடமெல்லாம் உண்டியலில் காசு சேர்த்து வைத்து வருட முடிவில் போக முடியாத சூழல் நிலவும் போது பக்கத்தில் இருக்கும் குலதெய்வத்தின் நினைவு நமக்கு வராமல் போவது துரதிருஷ்டம் தானே?!

சட்டென்று நமக்கு கை கொடுத்து உதவ குலதெய்வம் நாம் வாழும் சுற்றுவட்டாரப் பகுதியிலேயே காலையில் கிளம்பி மாலையில் திரும்பி வரும் தொலைவில் அருகில் இருக்கையில் அதை மறந்து விட்டு நாம் ஊர் உலகத்தில் இருக்கும் கோயில்களுக்கெல்லாம் ஓடி ஓடிச் சென்று வழிபாடு செய்து வருவது எந்த வகையில் நியாயம் ஆகும் என்ற கேள்வியை எழுப்பியது அந்த திரைப்படம்.

உண்மை தான் குல தெய்வ வழிபாடு என்பது வெறும் நம்பிக்கை சார்ந்தது மட்டுமல்ல;

அது ஒரு பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. பல குல தெய்வக் கோயில்களில் கோயிலில் சேரும் பணத்தை கோயில் சார்ந்த ஏழை, எளியவர்களுக்கு கடனாகத் தரும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது அவர்களது பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள கொஞ்சம் உதவும்.

இன்னும் சொல்வதென்றால், பிரதான தெய்வங்கள் மற்றும் பரிவார தெய்வங்களின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமென்றால் அதை சாத்தியமாக்கும் சக்தியும் கூட குலதெய்வங்களுக்கு உண்டு என்கிறார்கள் மத ஆச்சாரியார்கள்.

ஒவ்வொரு குல தெய்வத்தையும் வணங்குவதற்கென்று ஒவ்வொரு குலத்திலும் வெவ்வேறு விதமான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

சில குலதெய்வங்கள் சைவம், சில அசைவப் பிரியம் கொண்டவை. அவற்றுக்கு ஆடு, கோழி என காணிக்கை செலுத்தி மக்கள் வணங்கி வருகிறார்கள்.

சில குல தெய்வங்கள் பத்தியமானவை. உப்பு கூட சேர்க்க மாட்டார்கள் பிரசாதத்தில்.

சில குலதெய்வங்கள் மாதத்தின் குறிப்பிட்ட தினத்தில் மட்டுமே வணங்கப் படக்கூடியவை.

சில குல தெய்வங்கள் அமாவாசை, பெளர்ணமி போன்ற தினங்களில் மட்டுமே வணங்கப்படுகின்றன.

சில குலதெய்வங்கள் வருடம் முழுக்க எப்போது வேண்டுமானாலும் நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் போதும் உடனே சென்று வழிபடத் தகுந்தவை என வரையறுக்கப்பட்டுள்ளன.

இப்படி விதம் விதமாக கட்டுப்பாடுகளும், வழிமுறைகளும் இருந்தாலும் கூட;

குல தெய்வங்களை வழிபட என்றே சில முக்கியமான விதிகள் உண்டு. அது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

வீட்டில் எந்த நல்ல காரியம் நடந்தாலும் நாம் முதலில் நினைவு கொள்வது விநாயகரைத் தான். அவரை வணங்கினால் தான் பிறகு மற்ற தெய்வங்களின் அனுக்கிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றொரு நம்பிக்கை. அது முன்னோர் வாக்கும் கூட.

அது குலதெய்வ வழிபாட்டுக்கும் பொருந்தும்.

விநாயகரைக் காட்டிலும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய தெய்வம் குலதெய்வமே என்கிறார்கள் குடும்பத்தின் மூத்தோர்கள்.

வருடா வருடம் குல தெய்வத்தை வணங்குவதைக் காட்டிலும் அவற்றை வணங்குவதற்கென்றே வகுக்கப்பட்ட நெறிமுறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும் என்பதே பெரியோர் வாக்கு.

இதுவே குல தெய்வ வழிபாட்டை தலைமுறை தோறும் கடத்துவதற்கான ஒரே வழி என்கிறார்கள் அவர்கள்.

வருடம் முழுக்க குலதெய்வ வழிபாடு செய்வது சாத்தியப் படாதர்கள் வருடா வருடம் மாசி மாதத்தில் பெரும்பாலும் தென் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எங்கோ ஓரிடத்தில் கொலுவீற்றிருக்கும் குலதெய்வங்களைத் தேடி பெருவாரியாக ஓடியதை கடந்து போன சிவராத்திரி உற்சவத்தை ஒட்டிக் கண்ணாறக் காண முடிந்தது.

இவ்விதமாக அந்த ஒருநாளேனும் வருடம் தவறாது எல்லோரும் அவரவர் குலதெய்வங்களை மறவாது வணங்கி பூரண அருள் பெறுவோமாக!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT