கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர் கோயில் 
தீபம்

கணவன், மனைவி ஒற்றுமைக்கு அருளும் கிடாத்தலைமேடு துர்காபுரீஸ்வரர்!

ரேவதி பாலு

யிலாடுதுறை மாவட்டம், கிடாத்தலைமேடு என்னும் தலத்தில் உள்ளது துர்காபுரீஸ்வரர் திருக்கோயில். ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது இக்கோயில். மகிஷாசுரனை வதம் செய்த பிறகு தனக்கேற்பட்ட தோஷத்தைப் போக்கிக்கொள்ள ஸ்ரீ துர்கை அம்மன் இந்தத் தலத்திலுள்ள சிவபெருமானை வழிபாடு செய்தாராம். ஸ்ரீ துர்கைக்கு அனுக்கிரஹம் செய்து அம்மனின் தோஷத்தைப் போக்கியதால் இந்தத் தலத்து ஈஸ்வரனுக்கு துர்காபுரீஸ்வரர் என்னும் திருநாமம் ஏற்பட்டதாம்.

இத்தலத்தில் கிடா வடிவிலுள்ள மகிஷனின் தலை மீது நின்ற திருக்கோலத்தில் சிம்ம வாகனத்தில் எட்டு கரங்களுடன் காட்சியளிக்கிறாள் துர்கா தேவி. இரண்டு கரங்களில் வரத அபய முத்திரையும், ஐந்து கரங்களில் சக்கரம், பானம், கத்தி உள்ளிட்டவற்றை கேடயமாக தரித்தும் ஓர் இடது கரத்தை தொடையில் பதித்த ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ஸ்ரீ துர்கையம்மன்.

துர்கைக்கு பாவ விமோசனம் அளித்ததுடன் இதே ஆலயத்தில் தனி சன்னிதியில் எழுந்தருளுமாறு ஸ்ரீ துர்கா தேவியை ஈஸ்வரன் கேட்டுக்கொள்ள, அவ்வாறே ஸ்ரீ துர்கையும் இங்கே எழுந்தருளினார். இங்கே அம்பாள் ஸ்ரீ காமுகாம்பாள் என்னும் திருநாமத்துடன் விளங்குகிறாள். அம்பாளுக்கு இந்தப் பெயர் வந்ததற்கு புராணத்தில் ஒரு சம்பவம் கூறப்படுகிறது.

ஒரு சமயம் கயிலாயத்தில் தவத்திலிருந்த சிவபெருமானின் கவனத்தை பார்வதி தேவியின் பக்கம் திருப்புவதற்காக சிவபெருமான் மீது காமதேவனாகிய மன்மதன் மலர்க்கணையை ஏவினான். இதனால் தவம் கலைந்து கோபமுற்ற சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை அங்கேயே எரித்து சாம்பலாக்கினார். தனது கணவனுக்கு ஏற்பட்ட கதியைப் பார்த்து வருந்திய ரதி தேவி, பொன்னூர் என்னும் இடத்தில் ஒரு தவச்சாலை அமைத்து தவமிருந்தார். பிறகு சிவபெருமான் திருமணக் கோலத்தில் அருளும் திருமணஞ்சேரிக்கு வந்து அவரை தரிசித்த ரதி தேவி தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டி சிவபெருமானிடம் மன்றாடினாள்.

ரதி தேவியின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான், மன்மதனை உயிர்ப்பிக்கிறார். சிவனால் உயிர்ப்பிக்கப்பட்ட மன்மதன் இந்த துர்காபுரீஸ்வரர் தலத்தில் உறையும் ஈசனை கண்டு வணங்கி பார்வதி தேவியையும் வழிபடுகிறான். மன்மதனின் பக்தியைக் கண்டு மனம் இரங்கிய பார்வதி தேவி, அவனுக்குக் கரும்பு வில்லையும், புஷ்ப பாணங்களையும் மீண்டும் வழங்குகிறார். காமனாகிய மன்மதனுக்கு அருள்பாலித்ததால் இந்தத் தலத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ காமுகாம்பாள் என்னும் திருநாமம் ஏற்பட்டது. மன்மதனுக்கு அருள்பாலித்த தலமாதலால் இது கணவன் மனைவி ஒற்றுமைக்கு வேண்டிக்கொள்ளும் தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இங்கே ஈஸ்வரன், அம்பாள் சன்னிதிகள் தவிர, துர்கைக்கு தனிச் சன்னதி, விநாயகர், கெஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. சூல வடிவத்தில் காணப்படும் சாமுண்டி சன்னிதி  வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளோர்கள் வணங்கி வழிபடும் சன்னிதியாக உள்ளது. தங்கள் கால்நடைகள் பல்கிப் பெருகவும் பக்தர்கள் இங்கே பக்தியுடன் வழிபாடு செய்கிறார்கள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT