பாஞ்சஜன்யம் சங்கு... 
தீபம்

கிருஷ்ணரின் பாஞ்சஜன்யம் சங்கை பற்றி தெரிந்து கொள்வோமா!

ம.வசந்தி

வ்வொரு தெய்வங்களும் தனித்தனியாக ஒரு பெயர் கொண்ட வெண்மையான சங்கை தமது திருக்கரத்தில் ஏந்தி இருப்பதை பார்க்கிறோம். அது போர்காலங்களில் எதிரியை அச்சப்படுத்தவும் நடுநடுங்க வைக்கவும் உதவும். வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும் உபாயமாகவும் சங்கு பயன்பட்டதை புராணங்கள் தெரிவிக்கின்றன. புராண காலங்களில் போர் தொடங்குவதற்கு அறிகுறியாக சங்கு முழங்கியது.

அந்த சங்கநாதம் கேட்டு எதிரிகள் வெலவெலத்தனர். பலர் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். பல வீரர்கள் குழப்பம் அடைந்தனர் என்று மகாபாரதம் தெரிவிக்கிறது. பாண்டவர்கள் ஐவரும் ஆளுக்கு ஒரு சங்கு வைத்திருந்தனர். தருமர் வைத்திருந்தது ஆனந்த விஜயம். அர்ஜுனன் கையில் இருந்தது தேவதத்தம் . பீமன் வைத்திருந்தது மகா சங்கம். நகுலன் வைத்திருந்த சங்கு சுகோசம். சகாதேவன் கையில் இருந்தது மணி புஷ்பகம் எனப்பட்டது.

ஸ்ரீ கிருஷ்ணர் தனது கரத்தில் வைத்திருந்த சங்கிற்கு பாஞ்சன்யம் என்பது பெயர். அது மகத்தான சக்தி படைத்தது.  வலம்புரி கொண்டது. மகாலட்சுமியின் அம்சமானது. அது இருக்கும் இடத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகட்டி சேவகம் செய்யும்.

ஆயிரம் சிப்பிகளுக்கு இடையே ஒரு இடம்புரிச் சங்கு கிடைக்கும். அதுபோல ஆயிரம் இடம்புரிச் சங்குகளுக்கு மத்தியில் ஒரு வலம்புரிச் சங்கு பிறப்பெடுக்கும். இந்த வகையில் ஆயிரம் வலம்புரிச் சங்கத்திற்கு ஒன்றாக தோன்றுவது சலஞ்சலம் எனப்படும். ஆயிரம் சலஞ்சலம் சங்குகளுக்கு மத்தியில் தோன்றும் ஒரே ஒரு சங்குதான் பாஞ்சஜன்யம் எனப்படுகிறது  இப்போது புரிகிறதா பாஞ்சஜன்யத்தின் அபாரமான பெருமை.

தேவர்கள் அமுதம் வேண்டி பாற்கடலை கடைந்தபோது தோன்றிய பல அற்புதமான வஸ்துக்களில் பாஞ்சஜன்யமும் ஒன்று. இதன் நாதம் இனிமையானது ஓங்கார நாதத்தை எடுத்துரைப்பது. கேட்கும் அனைவரையும் ஆத்மாவுடன் ஒன்ற வைக்கும் ஆற்றல் பெற்றது.

ஸ்ரீ கிருஷ்ணர் பால்யத்தில் சாந்தீபனி  முனிவரிடம் குருகுலம் பயின்றார். கல்வி பயிற்சிகள் முடிந்தபோது குருதட்சனை தர வேண்டும் அல்லவா? என்ன வேண்டும் என்று கேட்டபோது குரு எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவர் மனைவி கண்ணீரோடு ஒரு வரம் கேட்டாள். கிருஷ்ணா எங்களது ஒரே மகனை பஞ்சஜனன் என்ற அசுரன் கடத்திக்கொண்டு போய் கடலுக்கு அடியில் ஒழித்து வைத்திருக்கிறான். அவனை மீட்டுக் கொடுப்பாயா? என்று கேட்டாள் குரு பத்தினி. உடனே கிருஷ்ணர் அந்த அசுரன் இருக்கும் இடம் அடைந்து அவனோடு போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் போரின்போது எரிந்து சாம்பலாகி விட்டான் அந்த சாம்பல் ஒன்று திரண்டு சங்கு உருவானது அந்த சங்கை பாஞ்சஜன்யம் எனப்படுகிறது.

கடலில் உருவாகும் சங்குகளில் பல வகைகள் உண்டு, மணி சங்கு, துவரி சங்கு, பாருதசங்கு, வைபவ சங்கு, துயில்சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு என்பன அவற்றுள் சில.  திருப்பதி பெருமாள் தன் கையில் தாங்கி இருப்பது மணி சங்கு. திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி ஏந்தி இருப்பது பாருதசங்கம். திருவல்லிக்கேணி பெருமாள் வைத்திருப்பது வைபவசங்கு. திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கரத்தில் இருப்பது துயிலா சங்கு.

திருமால் தனது திருக்கரத்தில் ஏந்தி இருக்கும் சங்கு பக்தர்களின் பயத்தைப் போக்கும். பகைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்  எனவே பாஞ்சஜன்யம் சங்கு ஆயுதம் என்றும் அழைக்கப்படுகிறது.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT