Rat's Temple 
தீபம்

25000க்கும் மேற்பட்ட எலிகள் ஓடும் கோயில்... அடக் கடவுளே!

ராஜமருதவேல்

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் அருகே உள்ள மான்சபூர்ணா கர்னி மாதா கோயிலை தான் பொதுவாக எலிகளின் கோயில் என்று பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த கோயிலில் எலிகள் மிகுதியாக இருப்பதாலும் புராணக் கதைப்படி எலிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக இருப்பதாலும் இவ்வாறு பெயர் பெற்றுள்ளது. இந்த கோயில் தூத் தலாய் ஏரிக்கு அருகில் மச்ரா மக்லா மலையில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதும் எலிகளை வழிபடுவதும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

உள்ளூர் புராணக் கதை

துர்கா தேவியின் மறு அவதாரமாக நம்பப்படும் கர்னி மாதா ஜோத்பூர் மாவட்டத்திலுள்ள சுவாப் கிராமத்தில் 1387 ஆம் ஆண்டு சரண் ராஜ்புத் குடும்பத்தில் ஏழாவது மகளாகப் பிறந்தார். அவருக்கு ரிதுபாய் என்று முதலில் பெயர் சூட்டப்பட்டது. பருவம் அடைந்ததும் அண்டை கிராமமான சாதிகாவை சேர்ந்த டிபோஜி சரண் என்பவருக்கு மணமுடித்து வைத்தனர். அவர்களது மண வாழ்க்கை சிறப்பாக இல்லை. டிபோஜிக்கு ரிதுபாயின் சகோதரி குலாப்பை மணமுடித்து வைத்தனர். அதன் பின்னர் ரிதுபாய் கிராமத்தை விட்டு வெளியேறி நாடோடியாக திரிந்தார்.

இறுதியாக அவர் மச்ரா மக்லா மலையில் தங்கினார். பின்னர் லஷ்மண் என்ற வளர்ப்பு மகனை வளர்த்தாள். ஒரு முறை கபில் சரோவர் ஏரியில் லஷ்மண் தண்ணீர் குடிக்கும் போது அதில் தவறி விழுந்து இறந்து போனான். ரிதுபாய் இறப்பின் கடவுளான தர்ம ராஜனிடம் மகனின் உயிருக்காக மன்றாடினாள். தர்ம ராஜன் மறுத்து விடவே, ரிது தன் தெய்வீக சக்தியால் மகனுக்கு உயிர் கொடுத்து எலியாக மாற்றினார். அதன் பின்னர் ரிதுபாய் எலிகள் மீது அன்பு காட்டினார். அங்கு எலிகளும் ஏராளமாக குவிய தொடங்கின. அதன் பின்னர் அவர் கர்னி மாதாவாக மக்களால் வழிபடப் பட்டார்.

Rat's Temple

இங்குள்ள எலிகள் கர்னி மாதாவின் பக்தர்களின் மறுபிறவிகள் என்று நம்பப்படுகிறது. இந்த எலிகளை கோவில் வளாகத்திற்குள் சந்திப்பதை நல்ல அதிர்ஷ்டமாகவும் பக்தர்கள் கருதுகின்றனர். கோவிலின் பூசாரிகள் எலிகளின் எண்ணிக்கையை முறையாக கவனித்து, உணவளித்து பாதுகாக்கிறார்கள். இந்த எலி கூட்டத்தில்  ஒரு வெள்ளை எலி கண்ணில் படுவது அதிர்ஷ்டகரமானது. வெள்ளை எலியை கண்டால் அது புனிதமாகவும் அதிர்ஷ்டமாகவும் கருதப்படுகிறது.

மச்ரா மக்லா  மலைப்பகுதியில் 1620-1628 ஆண்டுகளுக்கு இடையில் குடியிருப்பு பகுதிகள் நிறுவப்பட்ட போது உதய்பூரின் எல்லை மற்றும் பாதுகாப்பைக் குறிக்கும் வகையில் கர்ணி மாதா கோயில் மகாராணா கரண் சிங்கால் கட்டப்பட்டது. இந்தக் கோவிலில் 25000 க்கும் மேற்பட்ட எலிகள் இருக்கின்றன. அவை கப்பாஸ் என்ற பெயரில் இங்கு அழைக்கப்படுகின்றன. இங்கு வெள்ளை மற்றும் கருப்பு வண்ணங்களில் ஏராளமான கப்பாஸ்கள் உள்ளன. அவற்றிற்கு இனிப்பு மற்றும் உணவுகளை வழங்குதல் புனிதமாகக் கருதப்படுகிறது.

கர்னி மாதாக்கோயில் வளாகம் மிகவும் பெரியதாகவும் அமைதியானதாகவும் உள்ளது.10 நிமிட நடை பயணத்தில் கோவிலுக்கு செல்ல படிகள் உள்ளன. இந்த மலைக் கோவிலை அடைய ரோப் காரிலும் செல்லலாம். வேறு மாநிலங்களில் இருந்து கோயிலுக்கு செல்ல விமான வழியில் உதய்பூர் வரை செல்லலாம். ரயிலும் பேருந்து மூலமாகவும் உதய்பூர் நகரை அடையலாம். அங்கிருந்து டாக்ஸி மற்றும் ஆட்டோக்கள் மூலமாக கோயிலை அடையலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT