இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை உலக உயிர்களுக்கு மெய்பித்துக் காட்டியது ஸ்ரீ நரசிம்ம அவதாரம். ஸ்ரீ நரசிம்மப் பெருமாள், லட்சுமி நரசிம்மர் வடிவில் சுயம்பு மூர்த்தமாக மலை மீது எழுந்தருளியிருக்கும் திருத்தலம் போளூர் சம்பத்கிரி. தொண்டை மண்டலம், பல்குன்ற கோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கிய போளூர் ஆதியில் புலஸ்திய மகரிஷி தவமியற்றியதால், ‘புலஸ்தியபுரம்’ என்று அழைக்கப்பட்டது. இந்நகரின் மேற்கே அமைந்துள்ள மலையே சம்பத்கிரியாகும். இம்மலையில் நரசிம்மர், குபேரனுக்கு சம்பத்துகளை கொடுத்தருளியதால், ‘சம்பத்கிரி’ என்றானது.
‘சம்பத்’ என்றால் பொருள் என்கிற அர்த்தத்தில் சம்பத்கிரிக்கு கீழே அமைந்த ஊர், ‘பொருளூர்’ என்று அழைக்கப்பட்டு, அதுவே மருவி, தற்போது ‘போளூர்’ என்று அழைக்கப்படுகின்றது. சந்திரன் வழிபட்ட இத்தல ஈசன் ஸ்ரீ சோமநாதரைத் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார் அருணகிரிநாதர். முருகப்பெருமானால் உண்டாக்கப்பட்ட, பாஹு நதி என்னும் சேயாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. சித்தர்கள் பலர் வாழ்ந்த புனித பூமி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கோவிலூர் தபோவனம் ஞானானந்தகிரி சுவாமிகள், ஹரிதாஸ் சுவாமி, இசைமேதை அச்சுததாசர், மகான் விக்டோபா சுவாமிகள், வெட்டவெளி சுவாமிகள் என பலர் இந்த நரசிம்மரை வழிபட்டு பாடல்கள் புனைந்துள்ளனர். ஸ்ரீ சங்கர்ஷணவுடையார் பாஹு நதிக்கரையில் அமைந்துள்ள கரைப்பூண்டி எனும் ஊரில் சம்பத்கிரியின் நிழலில் ஜீவசமாதியானார். இம்மலையை ஒட்டி மேற்கே சப்தரிஷி மண்டல மலையுள்ளது. இதில் சப்த ரிஷிகள் தவம் புரிந்ததாக ஐதீகம். இம்மலையில் புலஸ்தியர் மற்றும் பௌலஸ்தியர் ஆகிய இரு மகரிஷிகள் திருமாலை நோக்கி தவம்புரிந்து வந்தனர். தவத்தின் பயனாக கோவிந்தனிடமிருந்து ஒரு மாம்பழம் அவர்களுக்குப் பிரசாதமாகக் கிடைத்தது. அதைப் பங்கிடும் போட்டியில் பௌலஸ்தியரின் இரண்டு கரங்களும் சிதைந்தன. பௌலஸ்தியர் இம்மலைக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சேயாற்றில் (செய்யாறு) தினமும் நீராடி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) நரசிம்மரை நினைத்து, இம்மலையினை கிரிவலம் வந்தார். 48ம் நாள் சேயாற்றில் மூழ்கி எழுந்தபோது அவரது சிதைந்த கைகள் கூடி, அவர் கரங்களில் ஸ்ரீ நரசிம்மர் விக்ரஹம் ஒன்றும் கிடைத்தது. அந்த விக்ரஹத்தை ஊருக்குள் பிரதிஷ்டை செய்யும்படி அசரீரி உரைக்க, அதன்படியே ஊருக்குள் சென்று அதை பிரதிஷ்டை செய்தார்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இம்மலையின் உச்சியில், கல் உடைக்கும்போது உளிபட்ட இடத்திலிருந்து ரத்தம் பீரிட்டது. அதைக் கண்டு அஞ்சிய மக்கள் அனைவரும் அலறியடித்து ஓடினர். அன்றே ஊரில் இருந்த ஒரு மகானுபாவர் கனவில் தோன்றிய பெருமாள், தான் இங்கு லக்ஷ்மி நரசிம்மராக சுயம்பு வடிவில் எழுந்தருளி உள்ளதாகக் கூறி மறைந்தார். பின்னர் அங்கு ஆலயம் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் இன்றுவரை சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.
இம்மலை மீது முதலில் ஸ்ரீ நரசிம்ம மூர்த்திக்கு ஹொய்சாளர்கள் ஆலயம் எழுப்பினர். பின்னர் விஜயநகர அரசர்கள் திருப்பணிகள் செய்தனர். பின்னாளில் விஜயநகர வம்சத்தில் வந்த ஓகூர் சீனிவாசராவ் என்பவர் உத்ஸவர் நரசிம்மரோடு ஸ்ரீதேவி-பூதேவி தாயார்களின் விக்ரஹத்தையும் ஸ்தாபித்தார். அதோடு, பாமா-ருக்மணி சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமியையும் கற்சிலையாக நிறுவி, சம்ப்ரோக்ஷணம் நடத்தினார். அதோடு மலைக் கோயிலுக்கும் திருப்பணிகள் செய்தார். ஒரு சமயம் திப்புசுல்தான் போருக்காக இங்கு தங்கியிருந்தபோது சம்பத்கிரி மலையின் மணி ஓசை கேட்டு போர் புரியாமல் மனம் மாறி, இங்கிருந்து சென்றதாகக் கல்வெட்டுச் செய்தி கூறுகின்றது.
நகரின் மேற்கே நெடிதுயர்ந்த சம்பத்கிரி சுமார் 850 படிகளைக் கொண்டது. மலையடிவாரத்தில் சிறிய திருவடிகளான ஸ்ரீ ஆஞ்சனேயர் சன்னிதி அமைந்துள்ளது. இங்கு நான்கு ஓய்வு மண்டபங்களும், இரண்டு குளிர்ந்த நீர் சுனைகளும் உள்ளன. மேலே ஏற செங்குத்தான படிகள் அமைந்துள்ளன. மலை உச்சியில் அரணமைப்பு போல் சுற்றிலும் மதில்கள் அமைந்துள்ளன. நடுவே தென்முகம் பார்த்தபடி ஆலயம் அமைந்துள்ளது. பலிபீடம், தீபஸ்தம்பம் மற்றும் கருடாழ்வார் சன்னிதிகள் அமைந்துள்ளன. மின்னொளியில் சங்கு-சக்கரத்துடனான திருநாமம் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது.
கருவறையில் தெற்கு நோக்கி, திருவண்ணாமலையை பார்த்தபடி ஸ்ரீ நரசிம்மர் காட்சி தருகிறார். அவருக்கு முன்பு ஸ்ரீ லட்சுமி தேவியுடன் நரசிம்ம மூர்த்தி சிலா ரூபமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளார். வலதுபுறம் கனகவல்லித் தாயாருக்கு தனியே சன்னிதி அமைந்துள்ளது. மலை மீது பிரம்ம தீர்த்தமும், கீழே புலஸ்திய தீர்த்தமும் அமைந்துள்ளன. பாஹு நதி என்னும் செய்யாறும் இத்தலத்தின் தீர்த்தமாகும். இந்த மலைத் தல தரிசனத்தில் ரம்யமான இறை அனுபவத்தோடு இயற்கையின் இன்பமும் இரட்டிப்பாகக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
பிரதி சுவாதி நட்சத்திர தினம், மாதப் பிறப்பு, ஏகாதசி, திருவோணம், புனர்பூசம், ரோஹிணி, பஞ்சமி திதி, சப்தமி திதி ஆகிய நாட்களில் அதிகாலை 4.30 மணிக்கு மலைக்கோயிலில் திருமஞ்சனம் நடைபெறுகின்றன. சித்திரை வருடப்பிறப்பில் படி விழா, வைகாசி பத்து நாட்கள் பிரம்மோத்ஸவம், ஆவணியில் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், தனுர் (மார்கழி) மாத பூஜைகள், ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி போன்றவற்றோடு, மலையடிவாரத்தில் உள்ள வேணுகோபாலர் ஆலயத்திலும் அனேக வைணவ விசேஷகங்கள் சிறப்புறக் கடைபிடிக்கப்படுகின்றன.
வருடத்தின் முக்கிய விசேஷமாக சித்ரா பௌர்ணமி அன்று மலையடிவாரக் கோயில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீ நரசிம்ம மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கரைப்பூண்டிக்குச் சென்று தீர்த்தவாரி உத்ஸவம் நடைபெறுகின்றது. திருமண வரம், புத்திரப் பேறு, அரசு வேலை, கடன் நிவர்த்தி, தொழில் முன்னேற்றம் மற்றும் அமானுஷ்ய, மாந்திரீக தொல்லைகளிலிருந்து விடுபட, பிரதி மாதம் பிரதோஷத்தன்று சம்பத்திரி ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கும், ஊரில் உள்ள ஸ்ரீ பாமா-ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி மற்றும் உத்ஸவர் நரசிம்மருக்கும் திருமஞ்சனம் செய்து, துளசி மாலை சாற்றி, பானகம் மற்றும் வெல்லத்தினால் ஆன பட்சணங்களை நிவேதனம் செய்து, கிரிவலம் வந்து வழிபட்டு, உரிய பலன் பெற்றிடலாம். வைகானச ஆகம முறை கடைபிடிக்கப்படும் இங்கு, தினமும் கீழ் கோயில் நரசிம்மருக்கு நிவேதிக்கும் பானகத்தை பருகிட, அனைத்து வித ரோகங்களில் இருந்தும் விடுபடலாம்.
பிரதி சனிக்கிழமைகளில் அதிகாலை 4:30 முதல் 6 மணி வரை மட்டுமே மலைக் கோயில் திறந்திருக்கும். அச்சமயம் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஊரில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலர் ஆலயம் தினமும் காலை 6 முதல் 8.30 மணி வரையும், மாலை 5 முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும். சம்பத்கிரியை தரிசித்து வணங்கி, சகல சம்பத்துகளையும் பெற்றிடுவோம்.
அமைவிடம்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நகரின் மேற்கே அமைந்துள்ளது சம்பத்கிரி.