Deepam articles Image credit - youtube.com
தீபம்

பொய்ப்பொருளும் மெய்ப்பொருளே! -எவ்வாறு?

மும்பை மீனலதா

பொய்ப்பொருளைக்கூட மெய்ப்பொருளென எண்ணி வாழ்ந்தவர் மெய்ப்பொருள் நாயனார். மிகுந்த சிவ பக்தராகிய இவர்,  எந்த அடியாரைப் பார்த்தாலும் சிவபெருமானாக நினைத்து வணங்குவார்.  தியாகச் செம்மலும் கூட.

திருக்கோவிலூர் என்கிற நாட்டை ஆட்சி செய்த இவர், தன் நாட்டையும், நாட்டு மக்களையும் நேர்மையுடன் வழி நடத்தியவர். மக்கள் அவரை மிகவும் போற்றினார்கள்.

அது கண்டு பொறாமைப்பட்ட  முத்தநாதன் என்ற அரசன்,  நாயனாரை போரில் வெல்ல எண்ணி யோசித்தான். போரில் வெல்ல முடியாதெனத் தோன்றியதால்,  சூழ்ச்சி செய்து வெல்ல சதித்திட்டமிட்டான். 

அது என்ன திட்டம்?

யாரைக்கண்டாலும் சிவனடியாராக கருதி வணங்கும் நாயனாரின் குணத்தை அறிந்தான். அடியவர்போல் வேடமிட்டு, இடுப்பில் கத்தியை மறைவாகச் சொருகிக் கொண்டு இரவு நேரம், அவரது அரண்மனை சென்றான். பிறகு?

தத்தன் எனும் காவலாளி, சந்தேகமடைந்து, "மன்னர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் அடியாராக இருப்பினும், காலையில் சந்திக்கலாம். இரவு நேரத்தில் அனுமதிக்க இயலாது" எனக்கூறி தடுத்து நிறுத்துகையில்,

"அரசருக்கு வேதப்பொருள் கூற வந்துள்ள என்னை தடுப்பது சரியில்லை. அடியவர்கள் எந்நேரமும் அரசரைக் காணலாம்" முத்தநாதன் சொல்லவும், தத்தன் அனுமதித்தான். இருந்தாலும் ஒரு சந்தேகம் இருந்தது.

அரசரின் அறைக்குள் சென்ற அடியாரை அன்புடன் வரவேற்று  வணங்கிய மெய்ப்பொருளார், "விஷயம் என்னவென்று" கேட்க, 

"சிவபெருமான் உன்னிடத்தில் ரகசியமான விபரம் ஒன்றை அவசியம் கூறச்சொல்லி இருப்பதால், தனியாக கூறவேண்டும்.  மகாராணியாரை வெளியே அனுப்பி விடுங்கள்."

அதன்படி, மகாராணி வெளியே செல்ல, நாயனார், கண்கள் மூடி கை கூப்பி நின்றார்.  அடியார், இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து நாயனாரின் மார்பில் ஓங்கி குத்த, "அடியவரே" யெனக்கூறி கீழே சரிந்தார்.

காவலாளி ஓடிவந்து, தனது உடைவாளையெடுத்து அடியாரைத் தாக்கும் நேரம்!

தத்தனே!  அடியவராகிய இவரை விட்டுவிடு. பாதுகாப்பாக அவரது நாட்டு எல்லை வரை அனுப்பி வைப்பது,  நீ எனக்கு  செய்யும் பெரிய உதவியாகும்" 

தத்தனும் அவ்வாறே செய்து, திரும்ப வந்து,  அரசரிடம் விபரம் தெரிவிக்கையில்..!

சிவபெருமான், நாயனாருக்கு காட்சியளித்து சிவபதமருளினார்.

உபரி தகவல்:

மெய்ப்பொருள் நாயனாருக்கு உரிய கார்த்திகை மாத உத்தர நட்சத்திரத்தன்று அனைத்து சிவாலயங்களிலும்,  நாயனாரின் குருபூஜை வருடந்தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இவ்வருடம் 25/11/2024 திங்கள் கிழமை கார்த்திகை மாத உத்தர நட்சத்திரமன்று, ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோவிலில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

மருக்களுக்கான காரணமும் அவற்றை நீக்குவதற்கான தீர்வும்!

ஜெட் லேக் (Jet Lag) பற்றி அறிந்து கொள்வோமா?

இது தெரிஞ்சா சர்க்கரை நோயாளிகள் இளநீர் குடிக்கவே மாட்டீங்க! 

விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா குட்டீஸ்!

உங்கள் மகிழ்ச்சிக்கு தடையாய் நிற்கும் 8 பழக்க வழக்கங்கள் என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT