Muthamizh Murugan International Conference 2024 
தீபம்

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024!

தேனி மு.சுப்பிரமணி

இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரீசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ‘திருமுருக வழிபாடு’ சிறப்பாக நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானை நக்கீரர், குமரகுருபரர், அருணகிரிநாதர் தொடங்கி வாரியார் வரை பல அருளாளர்கள் போற்றியிருக்கின்றனர். முருகனைப் பற்றிய பல திறக் கொள்கைகள், கதைகள், கட்டுகள் நாட்டில் பேசப்பட்டு வருகின்றன.

முதன் முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு முருகப்பெருமானை வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ, உலகிலுள்ள முருக பக்தர்களையும், சிந்தனையாளர்களையும் உலகளவில் ஒருங்கிணைத்து வருகிற ஆகஸ்ட் 24 மற்றும் 25 நாட்களில் (24.08.2024 மற்றும் 25.8.2024) மூன்றாம் படைவீடு என்று போற்றப்படும் பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு – 2024' ஒன்றினை நடத்திட, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

முருகப்பெருமான் திருத்தலங்களில் ஒன்றான பழனியில் நடைபெறவுள்ள இம்மாநாடானது, 

  • முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல்.

  • முருகனை அடைவிக்கும் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிந்து அருளேற்றம் பெற உதவுதல் .

  • மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல்.

  • முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றில் இருந்து ஆழ்ந்தெடுத்து அதன் முத்துக்களை உலகறிய பரப்புதல்.

  • அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல்.

எனும் பொருட்களை மாநாட்டின் குறிக்கோள்களாகக் கொண்டுள்ளது.

உலகளாவிய சமய சான்றோர்கள், முக்கிய பிரமுகர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ளும் இவ்விழாவில் பல்வேறு  அரங்குகள் அமைகின்றன. குறிப்பாக, விழாவில் கலைநிகழ் அரங்கம், ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்க ஆய்வரங்கம், கந்தன் புகழ் பேசும் கண்காட்சி,  மக்கள் அனைவரும் தாமே வழிபடும் வகையில் வேல்கோட்டம் மற்றும் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட உள்ளது.

இம்மாநாட்டில் முருகனடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமயச் சொற்பொழிவாளர், திருப்பணி மேற்கொண்டவர்கள், திருக்கோயிலுக்குத் தொண்டு புரிந்தோர், ஆன்மிக இலக்கியப் படைப்பாளிகள் ஆகிய பல்வேறு வகைகளில் சிறந்து விளங்கும் பெருமக்களுக்கு, முருக வழிபாட்டுச் சான்றோர் திருப்பெயரில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன. இம்மாநாட்டில் பங்கேற்க விரும்பும் முருக பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

இம்மாநாடு குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள https://muthamizhmuruganmaanadu2024.com/ எனும் இணையப்பக்கத்தைப் பார்வையிடலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT