Nirajan Bom Malla
Nirajan Bom Malla
தீபம்

நாள் செய்வதை நல்லோர் செய்யார்!

பொ.பாலாஜிகணேஷ்

துர்த்தசி திதி அன்றே அமாவாசை வரும் பட்சத்தில் அது, ’போதாயன அமாவாசை’ என அழைக்கப்படுகிறது. இந்த போதாயன அமாவாசை எப்படி உருவானது என அறிவோம்!

போதாயன சூத்திரம்: போதாயனர் என்று ஓர் மகரிஷி. விந்திய மலைக்கு தெற்கில் வாழ்ந்ததாகப் புராண, இதிகாச நூல்களில் காணப்படுகிறது. இவரது வம்சத்தைச் சேர்ந்தவர்களே போதாயன சூத்ரத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

’கோத்திரம் தெரியாதவர்களுக்கு காசியப கோத்திரம்;

சூத்திரம் தெரியாதவர்களுக்கு போதாயன சூத்திரம்’

என்று காஞ்சி பெரியவர் மிக உயர்வாக இதைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

போதாயன மகரிஷி: ’போதாயன சூத்ரம்' என்ற நூலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ஆபஸ்தம்பருக்கும் திதிகளை நிர்ணயம் செய்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் குருவிடமிருந்து விலகி, தனியாக சூத்திரம் இயற்றினார். இதுவே, ’ஆபஸ்தம்ப சூத்ரதிம்’ எனப்பட்டது. இருவர் வழியிலும் வைதிகக் கிரியைகளைச் செய்யும் முறை இன்றளவும் உள்ளது.

போதாயன அமாவாசை: போதாயனரின் சீடரே ஆபஸ்தம்ப மகரிஷி என்றுகூட சொல்வதுண்டு. இந்த போதாயன சூத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளே போதாயன அமாவாசை என்று கூறப்படுகிறது. பொதுவாக, மற்றவருக்கான அமாவாசை நாளுக்கு முதல் நாள் போதாயன அமாவாசை நிகழும். இந்த போதாயன அமாவாசை முதன் முதலாக ஏற்பட்ட சரித்திரம் மஹாபாரதத்தில் காணப்படுகிறது.

மகாபாரதத்தில் அமாவாசை: மகாபாரதத்தில் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் சமாதானம் ஏற்படாமல், ’இனி, யுத்தம்தான் ஒரே தீர்வு’ என்று தீர்மானமானவுடன் துரியோதனன் யுத்தத்தில் தனக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். ’எந்த நாளில் போர் துவங்கினால் எனக்கு வெற்றி கிட்டுமோ அந்த நல்ல நாளை குறித்துத் தா’ என்று பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவனிடம் கேட்டான். சகாதேவனும் தர்மத்துக்குக் கட்டுப்பட்டு, ’அமாவாசை திதி நாளன்று யுத்தத்தை ஆரம்பித்தால் தாங்கள் படைகளுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும்’ என்று அறிவுரை கூறினான்.

ஸ்ரீ கிருஷ்ணர் செய்த லீலை: இதை அறிந்துகொண்ட பஞ்சபாண்டவர்கள் கவலையுறுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணரிடம் சென்று, ’இனி என்ன செய்வது?’ என்று கேட்க, ஸ்ரீ கிருஷ்ணரும் ’கவலைப்படாதீர்கள்! நான் பார்த்துக்கொள்கிறேன்’ என அவருக்கே உரிய புன்னகையுடன் கூறிவிட்டு, அமாவாசைக்கு முதல் நாளே கிருஷ்ணர் நதிக்கரையில் அமர்ந்து திதி கொடுப்பதற்குத் தயாராகி விடுகிறார்.

சூரியனும் சந்திரனும்: அதைக்கண்டு திகைத்துப்போன சூரியனும் சந்திரனும், ’அடடா, ஸ்ரீமன் நாராயணரே தவறுதலாக அமாவாசையை கணித்து விட்டார்கள் போலிருக்கிறதே. நாளைதானே அமாவாசை என்ன செய்யலாம்? நாமே அவரிடம் சென்று விவரத்தைச் சொல்லுவோமே’ என நினைத்து, ’பகவானே! நாளை அல்லவா அமாவாசை?’ எனக் கேட்கின்றனர்.

அதைக்கேட்ட ஸ்ரீகிருஷ்ணர், "நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தினம்தானே அமாவாசை?" என்றார்.

"ஆமாம்" என்று இருவரும் பதில் அளித்தனர்.

புன்னகைத்த ஸ்ரீ கிருஷ்ணர், "இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்?" என்று சொன்னார்.

அப்போதுதான் அவ்விருவருக்கும் அந்த மாயக் கண்ணனின் லீலை புரிந்தது.

மகாபாரத வெற்றி: ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டனர். ’ஸ்ரீ கிருஷ்ணர் அமாவாசை தர்ப்பணம் செய்வதால் இன்றுதான் அமாவாசை’ என்று துரியோதனன் முதலான கௌரவர்களும் அமாவாசைக்கு முதல் நாளே பித்ரு தர்ப்பணம் செய்தனர். மேலும், அன்றே அதாவது அமாவாசைக்கு முதல் நாளே மகாபாரத யுத்தத்தை ஆரம்பித்தனர்.

ஆகவேதான், மஹாபாரத யுத்தத்தில் துரியோதனன் படைகளுக்கு வெற்றி கிடைக்காமல், பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சி நடந்தது முதல் அமாவாசை என்பது இரண்டு விதமாகி. போதாயன அமாவாசை புதிதாக ஆரம்பமாயிற்று.

போர் துவங்க ஏற்ற சதுர்த்தசி திதி: ’காலப்பிரகாசிகை’ போன்ற ஜோதிட நூல்களில் சதுர்த்தசியை சண்டையிட (போர் துவங்க) ஏற்ற திதியாகக் கூறப்பட்டுள்ளது. அதை நன்றாக அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர் சதுர்த்தசியில் போர் துவங்க வேண்டும் என்பதற்காகவே கபட நாடகம் ஆடியதை மகாபாரதக் கதை மூலம் அறிய முடிகிறது. அதனால்தான் நமது முன்னோர்கள் சதுர்த்தசி திதியில் எந்த முகூர்த்தமும் வைப்பதை தவிர்த்ததைக் காணும்போது, ’நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்பதை உணர முடிகிறது.

கலாஷ் மக்களில் ஐரோப்பியர்களின் DNA! யார் இவர்கள்?

‘காத்தவராயன் கொழுக்கட்டை’ – இப்படி ஒரு நிகழ்வு இருப்பது தெரியுமா?

அன்னையர் தின வாழ்த்துகள்!

ஒருவரை சாதாரணமாக எடை போட்டுவிட்டால்...?

செம்பருத்திப் பூவை சாப்பிடலாமா?

SCROLL FOR NEXT