தீபம்

செடில் உத்ஸவ நேர்த்திக்கடனுக்கு பிரபலமான நெல்லுக்கடை மாரியம்மன்!

பொ.பாலாஜிகணேஷ்

நாகப்பட்டினம் மாவட்டம், பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் உள்ளது நெல்லுக்கடை மாரியம்மன் திருக்கோயில். மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயில் சுமார் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. முற்காலத்தில் சைவ வேளாளர் குலத்தில் தோன்றிய பெரிய நாயகத்தம்மாள் என்பவர் ஸ்ரீ சௌந்தர ராஜபெருமாள் வீதியில் உள்ள தங்கள் வீட்டில் நெல் வாணிபத்தை விரிவான முறையில் நடத்தி வந்தார். இவர் தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஒரு நாள் நெல் வணிகத்தில் ஈடுபட்டு வரும்பொழுது மஞ்சள் உடையுடன் கூடிய ஒரு பெண்மணி வந்து, நெல் வேண்டும் என்று கேட்டார்.

கடைக்குள் சென்று நெல்லை அளந்து கூடையில் போட்டு வெளியே வந்து பார்த்தபோது அந்தப் பெண்ணைக் காணவில்லை. மீண்டும் அந்தப் பெண்ணை பார்க்க ஆசைப்பட்டார். அன்று இரவு பெரிய நாயகத்தம்மாளின் கனவில் தோன்றிய அந்த பெண்மணி, ‘நான் மகமாயி, உன் வீட்டுக்கு அருகில் உள்ள வேம்பின் நிழலில் புற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்குக் கோயில் கட்டினால் உங்கள் ஊரை காப்பது என் கடமை’ என்று சொல்லிவிட்டு மறைந்தாள். தூக்கத்தி்ல் இருந்து விழித்த பெரிய நாயகத்தம்மாள், கனவில் கண்டபடியே வேப்ப மரத்தடியில் இருந்த புற்றுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டு வந்தாள். தொடர்ந்து ஊர் மக்களும் அந்தக் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர். காலப்போக்கில் இந்தக் கோயிலுக்கு நெல்லுக்கடை மாரியம்மன் என்னும் திருநாமம் சூட்டி வழிபட்டு வந்தனர். தொடர்ந்து அதே இடத்தில் சிறிய கோயில் அமைந்தது. நெல்லுக்கடை மாரியம்மனிடம் வேண்டினால், வேண்டியது வேண்டியபடி நிறைவேறும் என்பது வரலாறு.

இக்கோயில் மூலவர் மாரியம்மன் நான்கு திருக்கரங்களோடு, கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். வருடத்துக்கு ஒருமுறை இந்த அம்மனுக்கு தைலக்காப்பு சாத்தப்படுகிறது. பெரிய அம்மனுக்கு தைலக்காப்பும், உத்ஸவ அம்மனுக்கு தினமும் அபிஷேகமும், ஆராதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. அருகில் தனிச் சன்னிதி கொண்டிருக்கும் எல்லை அம்மனும், மாரியம்மனை போலவே கைகளில் ஆயுதம் ஏந்தி, ஐந்து தலை நாகம் குடை பிடிக்க கம்பீரத்துடன் காட்சியளிக்கிறார்.

நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டத்துடன் கூடிய செடில் உத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது காத்தவராய சுவாமி கழுகு மரம் ஏறியதை நினைவுகூறும் விதமாக, கோயில் எதிரே செடில் மரம் நட்டு, பூசாரிக்கு காத்தவராயன் வேடமிட்டு உடுக்கை, பம்பை, மத்தளம், சிலம்பு ஒலிக்க செடில் ஏறிச்சுற்றும் உத்ஸவம் தொன்றுதொட்டு நடைபெற்ற வருகிறது. மகப்பேறு வேண்டி அம்மனின் அருள் பெற்றோர், நேர்த்திக்கடனாக தங்கள் குழந்தைகளை செடில் உத்ஸவத்தில் பங்கேற்கச் செய்கிறார்கள். ஏற்றம்போல் காட்சி தரும் செடிலில் குழந்தைகளை தாங்கிய படிப்பூசாரியால் சக்கரம்போல் சுழற்றப்படுவதுதான் இந்த நேர்த்திக்கடன் ஆகும்.

மெய்சிலிர்க்க வைக்கும் இந்தக் காட்சி மக்கள் அம்மன் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையின் பிரதிபலிப்பாகப் பார்க்கப்படுகிறது. செடில் ஏறிய பூசாரியிடம் குழந்தைகளைக் கொடுத்து சுற்றச்செய்தால், குழந்தைகளை எந்த நோயும் அண்டாது என்ற திடமான நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலில் நடைபெறும் இந்த செடில் உத்ஸவத்தில் ஆண்டுதோறும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் செடிலில் வைத்துச் சுற்றப்படும். அப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து சாதி, மத பேதமின்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குழந்தைகளை செடில் ஏற்றி வைத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வருகின்றனர்.

அமைவிடம்: நாகப்பட்டினம் ஸ்ரீசௌந்திரராஜ பெருமாள் வீதியில் இந்த அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. நாகை பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது. நடந்தும் செல்லலாம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT