பகவான் மகாவிஷ்ணுவை ஒரு நொடி கூடப் பிரியாதவர்களாகிய ஸ்ரீ அனந்தாழ்வார் (நாகம்), ஸ்ரீ கருடாழ்வார் (கருடன்), ஸ்ரீ சக்கரத்தாழ்வார் (ஸ்ரீ சக்கரம்) ஆகிய மூவரும் திருமாலுக்கு இணையானவர்களெனக் கூறப்படுகிறது. இவர்களில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ சக்கரம் என்கிற பெயர்களும் உண்டு. ஆனி மாதம் தசமீ திதி சித்திரை நட்சத்திரம் ஸ்ரீ சக்கரத்தாழ்வாரின் அவதாரத் திருநாளாகும். ‘ஸ்ரீ சுதர்ஸன ஜயந்தி’ அல்லது ‘ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஜயந்தி’ என்கிற பெயரில் பெருமாள் ஆலயங்களில், இந்நாள் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. சுதர்சனர் என்றால் நல்வழி காட்டுபவரென்று பொருளாகும்.
ஸ்ரீ சக்கரத்தின் பின்னணியிலுள்ள புராணக் கதை ஒன்றைப் பார்ப்போம். திருவீழிமிழலை எனும் தலத்தில் சிவபெருமானை, மகாவிஷ்ணு தினமும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு தவறாமல் பூஜித்து வந்தார். ஒரு நாள் ஒரு தாமரைப் பூ குறைய, 999 பூக்களை வைத்து அர்ச்சிக்க மனம் வராத மகாவிஷ்ணு, தன்னுடைய கண்களில் ஒன்றைப் பெயர்த்தெடுத்து, அதையே தாமரையாக பாவித்து அர்ச்சித்து பூஜையை முடித்தார். இதைக் கண்டு மகிழ்ந்த சிவனார், சக்கராயுதத்தை மகாவிஷ்ணுவுக்கு அன்புடன் அளித்தார் என்று திருவீழிமிழலை தல புராணம் கூறுகிறது.
பெருமாள் ஆலயங்களில் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னிதி உண்டு. மகாவிஷ்ணுவின் வலது கையில் குடியிருக்கும் ஸ்ரீ சக்கரம் பகைவரை அழிக்கவும், நல்லவர்களைக் காக்கவும் உதவும் வல்லமை பெற்றது. திருமாலின் பல அவதாரங்களில் ஸ்ரீ சக்கரம் உதவி செய்திருக்கிறது. அறுங்கோண சக்கரத்தின் நடுவில் மூன்று கண்களுடன், தலையில் அக்னி கிரீடம் தாங்கி 16 திருக்கரங்களில் 16 வித ஆயுதம் ஏந்தி காட்சி அளிப்பவர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். இவரின் பின்புறம் ஸ்ரீ யோக நரசிம்மர் வீற்றிருப்பார். வலது கரங்களில் சக்கரம் உள்ளிட்ட எட்டு ஆயுதங்களைத் தாங்கியும், இடது கரங்களில் சங்கு உள்ளிட்ட எட்டு ஆயுதங்களைத் தாங்கியும் காட்சி தருவார். ஸ்ரீ சக்கரத்தாழ்வாரையும், ஸ்ரீ யோக நரசிம்மரையும் ஒருசேர மனதார வேண்டி பிரதட்சிணம் செய்தால் நான்கு வேதங்கள், பஞ்ச பூதங்கள், அஷ்ட லக்ஷ்மிகள், எட்டு திக்குகளை வணங்கிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். துளசி மற்றும் சிவப்பு நிற மலர்களால் ஆன மாலையை இவருக்குச் சூட்டி வழிபட, எதிலும் வெற்றி நிச்சயம். சிவன் கோயில்களில் நவக்கிரகங்களைச் சுற்றி வந்து தரிசனம் செய்தால் கிடைக்கும் பலன், பெருமாள் கோயிலில் இருக்கும் சக்கரத்தாழ்வாரை சுற்றி வந்து வணங்கினாலும் கிடைக்கும். தோஷங்கள் நிவர்த்தியாக, கடன் தொல்லைகள் நீங்க இவர் நல்வழி காட்டுவார்.
ஸ்ரீ ரங்கத்திலிருக்கும் சக்கரத்தாழ்வார் மிகுந்த சக்தி உடையவர். தனியாக இவருக்கு சன்னிதி உள்ளது. இதேபோல், மதுரை அருகே இருக்கும் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயிலின் உள்ளேயும் இவருக்கென தனி சன்னிதி இருக்கிறது. கஜேந்திர மோட்சத்தில், மகாவிஷ்ணு ஸ்ரீ சக்கரத்தின் உதவி கொண்டு முதலை வாயின் பிடியிலிருந்து யானையை மீட்டு, முதலையை வதைத்தார். திருமாலின் வாமன அவதாரத்தில் பவித்ர தர்ப்பத்தின் நுனியிலமர்ந்து சுக்ரனின் கண்ணைக் குத்தி வதைத்தார் ஸ்ரீ சக்கரத்தாழ்வார். மகாபாரதத்தில் சிசுபாலன் வதம் ஸ்ரீ சக்கரத்தினால் நடந்தது. ஜெயத்ரதனை வதம் செய்ய ஸ்ரீ கிருஷ்ணன் தனது ஸ்ரீ சக்கரத்தால் சூரியனை மறைத்தார்.
ஸ்ரீ சக்கரத்தாழ்வாரை ஆறின் மடங்காக 6, 12, 18, 24 என்று பிரதட்சணம் செய்து வழிபடுவது நற்பலனை அளிக்கும். சக்தி வாய்ந்த திருமாலுக்கு இணையாக இருக்கும் சக்கரத்தாழ்வாருக்கு நெய் தீபமேற்றி,
‘ஓம் நமோ பகவதே மகா
சுதர்ஸனாய நம:’ என்றும்,
‘ஓம் சுதர்ஸனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ர ப்ரயோதயாத்’ என்கிற காயத்ரி மந்திரத்தையும் கூறி வணங்கினால் நல்லவை அனைத்தும் நடக்கும். ஸ்ரீ சுதர்ஸன ஜயந்தி தினமான இன்று ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு அபிஷேகம் செய்வது மற்றும் துளசி மாலை அணிவிப்பது போன்ற செயல்கள் பல்வேறு நன்மைகளை நமக்குப் பெற்றுத் தரும்.