தீபம்

பூணூல் மகிமையும் காயத்ரி ஜெபமும்!

மும்பை மீனலதா

ர்ண பரம்பரையாகச் செவி வழியே தலைமுறை தலைமுறையாக ஆயிரம் ஆண்டுகளாகப் பண்டிதர்களால் பயிற்றுவிக்கப்பட்டது வேதமாகும். இதற்கு இன்றளவும் நூல்கள் கிடையாது. ‘எழுதாக் கிளவி’ என அழைக்கப்படும் வேதத்தைப் பயிலத் தொடங்கும் சிறுவர்களுக்கு ஆவணி அவிட்டத்தன்றுதான் முதன்முதலில் பாடம் துவங்கும் வழக்கம் ஏற்பட்டது. வேதம் குறித்த இக்கல்வி ‘உபகர்மா’, ‘ஆவணி அவிட்டம்’ எனக் கூறப்படுகிறது.

ஆவணி மாதப் பூர்ணிமா (ச்ராவணப் பூர்ணிமா) தினம், பூணூல் அணியும் வழக்கமுடைய இந்துக்களான அந்தணர், வைசியர், விஸ்வகர்மா மற்றும் சில வகுப்பினர்கள், பழைய பூணூல் நீக்கிப் புதியதை அணிவார்கள்.

ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ருக் வேதத்தினரும், பெளர்ணமியன்று யஜுர் வேதத்தினரும், அஸ்த நட்சத்திரத்தன்று சாம வேதத்தினரும் ஆவணி அவிட்டம் பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

கேரளாவிலும், குஜராத்திலும் அதர்வண வேதமுள்ளது.

காயத்ரி ஜெபம்

வணி அவிட்டத்திற்கு மறுநாள் வரும் காயத்ரி ஜெபம் மிக சக்தி வாய்ந்ததாகும். சிறு வயது முதல் அக்கறையுடனும், அன்புடனும் செய்து வருகின்ற காயத்ரி ஜெபம் மானசீக சக்தி மற்றும் நல்ல வளர்ச்சியை அளிப்பதாகும். வேதத்தின் தாயாகிய காயத்ரி அன்னை, ஜெபம் செய்கிறவர்களை பாதுகாத்து, பாவம் போக்குபவள்.

தினமும் சூரிய நமஸ்காரம் செய்து காயத்ரி ஜெபம் செய்வதோடு, ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் வரும் காயத்ரி ஜெபம் அன்றும் 108 அல்லது 1008 முறை உச்சரித்து வணங்குவது பலனளிக்கும்.

காயத்ரி மந்திரம் மற்றும் எண்ணும் முறை

‘ஓம்பூர் புவஸ் ஸுவ:

தத்ஸ விதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோ ந: ப்ரசோதயாத்’

இம்மந்திரத்தை ஜெபிக்கும்போது கணக்கு வைத்துக்கொள்ள உதவுவது கைவிரல்கள்.

மோதிர விரலின் இரண்டாவது கணு தொடங்கி கீழ்நோக்கி வந்து சுண்டு விரலின் முதல் கணுவரை மேல்நோக்கி வந்து, ஆள்காட்டி விரலின் அடிக்கணு வரை வருகையில் எண்ணிக்கை பத்து வரும். இவ்வாறு ஒவ்வொரு பத்தாக எண்ணி 108, 1008 என்கிற எண்ணிக்கையில் காயத்ரி ஜெபம் செய்ய வேண்டும். தவிர, முத்து, பவள மாலைகளை கைகளால் உருட்டியவாறும் செய்யலாம்.

காயத்ரி ஜெபம் செய்ய தேர்ந்தெடுக்கப்படும் இடம்

*ஓடுகின்ற நீரோடை அல்லது நதிக்கரை.

*சுத்தம் செய்யப்பட்ட வீட்டு பூஜையறை அல்லது வேறு அறை.

*மகான்கள் சித்தி பெற்ற ஸ்தலங்கள், தெய்வீகமான ஆலய சன்னிதிகள்

*பெருமாள் சன்னிதி.

பத்து பெயர்கள்

காயத்ரி தேவிக்கு பத்து பெயர்கள் உள்ளதாக யோகிகளும், மகான்களும் தெரிவித்துள்ளனர். அவைகள்

1) வரிக்கத் தகுந்தவள், 2) சிறந்தவள், 3) கெளரவம் வாய்ந்தவள், 4) அழகிய அங்கங்களை உடையவள், 5) சந்த்யா தேவி, 6) வரம் கொடுப்பவள், 7) நிறமுள்ளவள், 8) வராஹி, 9) நீலவர்ணமான கங்கை, 10) போகம், மோட்சம் அளிப்பவள்.

பூணூல் மற்றும் மகிமை விபரம்:

மயச் சடங்குகளுக்காக பூணத் (அணிய)தக்க நூல் பூணூல் ஆகும். பிரம்மச்சாரியாக மனிதன் இருக்கும் சமயம், தனக்கென ஜெபம் செய்ய, கல்வியறிவு பெற என மூன்று இழை நூல்களைக் கொண்ட பூணூல் அணிவது வழக்கம். திருமணமாகும் சமயம், தனது மனைவி மற்றும் குடும்பத்தின் நலன் கருதி ஜெப வழிபாடு செய்ய ஆறு இழைகள் (இரு பூணூல்) கொண்டதை அணிவார்கள். யக்ஞோபவீதம் கூறி அணிகின்ற பூணூலுக்கு சக்தி அதிகம். இது குறித்து கூறும் கதை பின்வருமாறு:-

ழை அந்தணர் ஒருவர் சிறு கிராமத்தில் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். பக்கத்திலுள்ள சிறிய கோயிலில் அர்ச்சகராக இருந்து, அன்றாட வயிற்றுப்பாட்டைக் கவனித்துக்கொண்டு இருந்தார். தினமும் மூன்று வேளை தவறாமல் 108 காயத்ரி ஜெபம் கூறுவார். பெண்ணிற்குத் திருமண வயது வருகையில், அவருக்கு கவலை வந்தது. அண்டை நாட்டிலிலுள்ள மன்னனிடம் சென்று, மகள் திருமணத்திற்காக, ஏதாவது பணமோ, பொருளோ வாங்கி வருமாறு அந்தணரை நச்சரித்தாள் அவரது மனைவி. அவளின் தொல்லை தாங்காமல், மன்னரிடம் சென்று, மிகவும் கூனிக் குறுகி நின்று, தனது பெண்ணின் திருமணத்திற்கு உதவி செய்ய கோரினார். அச்சமயம் மன்னரின் தலைமை அமைச்சர், “ஈடாக வைக்க உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்க, மந்திரங்கள் கூறி அணிந்திருந்த தனது பூணூலைக் காட்டி, ‘இதுதான் உள்ள’தென்று அந்தணர் கூறுகையில் அனைவரும் சிரித்தனர்.

தராசின் ஒரு தட்டில் பூணூலை வைத்து மறுதட்டில் சிறிது பணம் வைக்கப்படுகையில், பூணூல் தட்டு மேலேயே இருந்தது. மேலும், மேலும் பொன், பொருட்கள் வைக்கப்பட்டபோதும் அந்த தட்டு தணியவில்லை. அந்தணருக்கு மகிழ்வாக ஒருபுறம் இருந்தபோதும், மறுபுறம் ஒன்றும் விளங்கவில்லை. கஜானா காலியாகிவிடுமோ என மன்னர் கவலைப்பட, அமைச்சர் யோசித்தார்.

தராசு தட்டிலிருந்த அந்தணரின் பழைய பூணூலையெடுத்து அவரிடம் கொடுத்து, மறுநாள் புதிய புணூலுடன் வருமாறு அமைச்சர் சொல்ல, காரணமறியாத ஏழை அந்தணர் கவலையுடன் வீடு சென்று புதிய பூணூலைத் தயாரித்தார். மனம் முழுதாக அதில் ஈடுபடவில்லை.

மறுநாள் காலை குளியல் முடித்து கடவுளை வணங்கி புதிய பூணூலுடன் அரசவை சென்றார் அந்தணர். முதல்நாள் மாதிரியே பூணூல் ஒரு தட்டில் வைக்கப்பட்டு மறுதட்டில் அரைக் காசு போடுகையில், இரண்டும் சமமானது. மன்னர் ஆச்சரியப்பட, அந்தணர் வேதனைப்பட்டார்.

அமைச்சரைக் கூப்பிட்டு அரசர் விபரம் கேட்கையில், “அந்தணரின் பழைய பூணூல் நன்றாக ஜெபிக்கப்பட்டிருந்த காரணத்தால் சக்தி மிகுந்ததாக இருந்தது. அதனால்,  தராசுத் தட்டு மேலேயே இருந்தது. இப்போது மனதில் தடுமாற்றத்துடன் அவர் புதிய பூணூல் தயாரித்ததால் பலனில்லாமல் போனது” என்றார் அமைச்சர். மன்னருக்கு பூணூல் மகிமை புரிந்தது.

அந்தணரின் வாடிய முகத்தைக் கண்ட மன்னர், அவரது மகள் திருமணத்திற்கு, நிறைய பணம் மற்றும் நகைகளை அன்புடன் அளித்தார்.

யக்ஞோவீதம் கூறி அணிகின்ற பூணூலும், காயத்ரி ஜெபமமும் மிகுந்த சக்தி கொண்டதாகும்.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் அறிவோம்!

உங்க உடலில் அதிகமாக உப்பு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்!  

பெட்ரோல் பங்கில் கட்டாயம் இருக்க வேண்டிய வசதிகள்... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

RCB Vs CSK: பெங்களூரு அணியே வெற்றிபெறும் – பிரையன் லாராவின் கணிப்பு!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் 15 உணவுகள்!

SCROLL FOR NEXT