Saranganathar temple 
தீபம்

அபூர்வமான கோவில் - சிவனும் அவர் மைத்துனரும் அருகருகே லிங்க வடிவில்!

ஹேமலதா சுகுமாரன்

சாரநாத் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அசோக சக்கரமும் ஸ்தூபியும். ஆனால் சாரநாத் என்ற பெயருக்கே காரணகர்த்தாவான மிக மிகப் புராதனமான சாரங்கநாதர் கோவிலைப் பற்றி எத்தனை பேர் அறிவார்கள்? 

சமீபத்தில் நான் காசி சென்று பொழுது தற்செயலாகக் கேள்விபட்டு கோவில் சென்று பரவசமடைந்தேன். உள்ளூர்வாசிகள் சிவனும் அவர் மைத்துனரும்    லிங்க வடிவில் குடிகொண்ட ஒரே கோவில் என்று பெருமைப்படுகிறார்கள்.

சாரநாத் பிரதான சாலை அருகேயே பெரிய சதுரமான  அழகிய குளம். எதிரில் 44 நீண்ட படிகள். ஏறினால் மேடையுடன் கூடிய அரசமரம். கடந்து சென்றால் எதிரிலேயே நந்தி. சிறிய  கர்பக்கிரஹம். இரண்டு லிங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக. சிறிது உயரமானவர் (சிவபெருமான்) பின்னாடியும், சற்று குள்ளமான ஆனால், பெரிய உருண்டையானவர் முன்னாடியும். வெள்ளி கவசம் சாற்றப்பட்டிருந்தது. அவர்களைச்சுற்றி சதுர வடிவில் சிறிய அரண் போன்ற அமைப்பு.  இங்கு வேண்டிக் கொண்டால் சரும நோய்கள் அகலும். சந்தான ப்ராப்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

சதிக்கும் சிவனுக்கும் நடந்த திருமணத்தின்போது தவத்தில் இருந்ததால் தவறவிட்ட  சதியின் சகோதரரான சாரங்க முனிவர் அவர்களின் உறைவிடமான வாரணாசி நோக்கி வருகிறார். பிச்சாண்டியை தங்கை மணமுடித்தாளே என்ற வருத்தத்தில் நிறைய பொன், பொருளுடன் வருகிறார். சாரநாத்தை அடைந்ததும் அசதியில் இந்த இடத்தில் உறங்குகிறார். கனவில் காசி முழுதுமே பொன் மயமாக இருப்பதைக்கண்டு தன் தவறுக்கு வருந்தி தவம் செய்கிறார். சிவன் அவருக்குக் காட்சியளித்து இனி சாரங்கநாதர் என்று அவர் போற்றப்படுவார் என்று வரமளித்தார். மேலும் அவர் வேண்டுகோளுக்கிணங்கி  அங்கேயிருந்து சோமநாதராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  சாரங்கநாதரை லிங்க வடிவில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.

பிரகாரத்தில் லக்ஷ்மி, சரஸ்வதி, கார்த்திகேயன் மற்றும் அனுமார் மூர்த்திகள் உள்ளன.

இங்கே இறைவன் அருகிலேயே சென்று வழிபடலாம். அதுவும் சிவனுக்கு வடக்கிலே விசேஷமாக கருதப்படும் ஸாவன் என்ற இந்த ஆவணியில் எதிர்பாராத தரிசனத்தால் புளகாங்கிதம் அடைந்தேன்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT