தீபம்

ராவணன் வாகனமானது எப்படி?

ஆன்மிகம்

ஆர்.ஜெயலட்சுமி

ஓவியம்: வேதா

திருக்கோயில்களில் கயிலாய வாகனம் ஒரு மலையைப் போல மட்டும் அமையாது, ராவணனின் கதையோடு தொடர்புப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் மலையைப் போன்ற அமைப்பு. அதில் பாம்புகள், ரிஷிகள், கொடிகள் இவற்றுடன் புலி, சிங்கம் போன்ற விலங்குகளும் செதுக்கப்பட்டுள்ளன. நடுவில் ராவணன் முழந்தாளிட்ட நிலையில் உள்ளான். இவனுக்கு ஒன்பது தலைகள் அமைந்துள்ளன. பத்தாவது தலையைப் பறித்து வீணையைப் போல அமைத்து அதனை இரு கைகளில் ஏந்தி மீட்டும் கோலத்தில் உள்ளன. மற்ற பதினெட்டு கைகளிலும் பல வகையான ஆயுதங்கள் உள்ளன.

மேலும், அருகில் உள்ள தேவியை அச்சம் கொண்டு இறைவனை அணைத்துக்கொள்ளும் பாவனையில் அலங்கரிப்பார். இந்தக் கயிலாய பர்வதக் காட்சியைத் தரிசிப்போர் திருக்கயிலையையே நேரில் தரிசித்த புண்ணியம் பெறுவார்களாம். இந்தக் கயிலாய பர்வத காட்சியில் ராவணன் இறைவாகனமாக அமர்ந்திருக்க காரணமாய் திகழும் ஒரு பெரும் கதையுண்டு.

இலங்கை வேந்தனும், கயிலை நாதனும் ஒருமுறை குபேரனை வென்று அவனுடைய நவநிதிகளையும், புஷ்பக விமானத்தையும்  கைப்பற்றிக்கொண்ட ராவணன் அந்தப் புஷ்பக விமானத்தில் ஏறித் தன்னாட்டிற்குத் திரும்புகையில் சிவபிரான் எழுந்தருளியுள்ள இமயமலையைக் கடக்க வேண்டியதாயிற்று.

அப்போது அங்கு காவல் காத்து நின்ற நந்தியம் பெருமான் அவனிடம், “ராவணா, இது பரமசிவன் கொலுவிருக்கும் இடம். இதன் மீது பறந்து செல்வது நல்லதல்ல. எனவே விலகிச் செல்” என்றார்.

இதைக் கேட்ட ராவணனுக்குக் கோபம் பொங்கியது. அவன் நந்தியம் பெருமானை ஏளனம் செய்ததோடு தனக்குள், “இச்சிவன் எனக்கும் பல வரங்களை அளித்தவன். அவனக்குரிய இந்த மலையின் மீது செல்வது நல்லதல்ல. ஆயினும் சக்ரவர்த்தியாக நான் என் வழியை மாற்றிக் கொள்வதா? வேண்டுமானால் எனது வழியில்  குறுக்கிட்ட இந்த மலையை வேரோடு பிடுங்கி அப்பால் வைத்துவிட்டு செல்வேன். அதுவே என் தகுதிக்கும் அரசாண்மைக்கும் அழகு என்று எண்ணியபடி, புஷ்பக விமானத்தை விட்டுக் கீழே இறங்கித் தன் இருபது கரத்தினாலும் கயிலை மலையைப் பறித்தெடுக்க முயற்சி செய்தான்.

அவனுடைய அடாத செய்கையால் கயிலாயம் குலுங்கியது. தேவர்களும், பூத கணங்களும் நிலை தடுமாறி ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். பார்வதி தேவியும் நடுங்கினாள். தன் நடுக்கந் தீர இறைவனைத் தாவி அணைத்துக்கொண்டாள்.

இறைவன் ராவணனின் செருக்கை அடக்க எண்ணினார். தனது வலதுகால் கட்டை விரலை ஊன்றினார். அந்த அபத்தம் அவளவற்ற யானைகளின் பலத்தை யொத்திருந்தது. மலையின் கீழ் அகப்பட்டுக்கொண்டே ராவணனால் இந்தப் பளுவைத் தாங்க முடியவில்லை. அவனது இருபது கண்களும் பிதுங்கின. தோள்கள் நெறித்தன. அழுது அலறினான்.

அப்போது அவன் முன்பு தோன்றிய வாகீசர் என்ற முனிவர் ஆசிப்படி ராவணன் தனது தவற்றை உணர்ந்து, தன்னுடைய பத்துத் தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் குடமாகவும், கையொன்றைத் தண்டாகவும், நரம்புகளைத் தந்தியாகவும், அமைத்து அவசரத்திற்கு ஒரு வீணையைத் தயாரித்தான். அதனை மீட்டு சாமகானம் பாடினான்.

க்தியோடு அவன் இசைத்த சாமகான இசையால் மயங்கினான் ஈசன். தான் விரல் ஊன்றுவதை விடுத்தார். அந்த நிலையைப் பயன்படுத்தி ராவணன் மெதுவாக மலையைக் கீழே வைத்துவிட்டு தனது இசையை முடித்தான். அவனுடைய இசைக்கு உருகிய பரமசிவன் மகிழ்ந்து அவனுக்கு ‘சந்திரகாசம்’ எனும் வாளையும் ‘முப்பத்து முக்கோடி வாழ்நாள் அளவு ஆயுளையும் கொடுத்து மகிழ்ந்தார் என தமிழ்மறை தேவாரம் கூறும் இனிய கதை.

ஆயினும் சிவ மகாபுராணம் சற்று வேறுபடுத்தி இக் கதையைச் சொல்கிறது. ராவணன் சிவனார் தனக்கு தந்த வரத்தின் வலிமையைப் பரிசோதிக்கவே கயிலாய பர்வதத்தைத் தூக்க முயற்சித்தது. ஈசனால் தண்டிக்கப் பெற்று பின் சமாதானம் பாடி அவரது அருள் பெற்றதாக சிவமகா புராணம் கூறுகிறது. எத்தகைய பெரும் வலிமை படைத்தவனும் இறைவனுக்கு அடங்கியவனே என்பதை உணர்த்துகிறது.

*ராவணேசுர வாகனங்கள்

*ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் தங்கத்தாலும், காஞ்சிபுரத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட ராவணேசுவர வாகனம் உள்ளது.

*சென்னை அரண்மனைக்காரன் தெருவிலுள்ள ஸ்ரீகச்சாலீஸ்வரர் ஆலயத்தில் வாயிலுக்கு நேராக உள்ளே சென்றதும் தரிசிக்கத் தக்க வகையில் சுதைச் சிற்பமாக ராவேணச்சுவர கயிலாய பர்வதக் காட்சிப் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது.

*திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் பிராகாரத்தில் ராவணன் கயிலையை பெயர்த்தெடுக்கும் காட்சியையும் அதன்மீது சோமாஸ் கந்தமூர்த்தியையும் காணலாம். மாசிமகம் அப்பர் தெப்பம் பொற்றாமரை குளத்தில் நடக்கும்போது நெல்லையப்பர் – காந்திமதி ராவேணஸ்வரனின் கயிலாய பா்வத பித்தளை வாகனம் மீது அமர்ந்து அருள்பாலிப்பார்கள்.

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT